
செய்திகள் மலேசியா
பெர்ஹந்தியான் தீவு படகு விபத்து – பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களின் நெஞ்சு உருக்கும் கூட்டு அறிக்கை
பெட்டாலிங் ஜெயா:
கடந்த 28 ஜூன் 2025 அன்று பெர்ஹந்தியான் தீவுக்குள் நடைபெற்ற படகு விபத்தில் மூன்று உயிர்கள் பறிபோன அதிர்ச்சியிலும் துயரத்திலும் மூழ்கிய நான்கு குடும்பங்கள், இப்போது தங்களது நிலைமையைப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளன.
அந்த துயர நிகழ்வில் எங்கள் அன்புக்குரியவர்களான எஸ். ஆறுமுகம் (வயது 40), வி. வெண்பனி (வயது 10), மற்றும் ஆ. சார்விகா (வயது 3) ஆகியோர் உயிரிழந்தனர்.
சந்தோஷமாகத் தொடங்கிய குடும்ப விடுமுறை, படகு ஓட்டுநரின் அலட்சியமான செயலாலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படாததாலும் எங்கள் வாழ்நாள் முழுவதும் அழியாத நிழலாகவே மாறியுள்ளது.
விபத்து நடந்த தினம்
இரவு உணவிற்காக நாங்கள் பெர்ஹந்தியான் கட்சில் தீவுக்குச் சென்றோம். அங்கிருந்து எங்கள் தங்குமிடமான பெர்ஹந்தியான் பெசார் தீவுக்குத் திரும்பும் பயணத்தை, அங்குள்ள விளம்பரங்கள் மற்றும் உள்ளூர் வாணிபரின் தகவல்களின் அடிப்படையில் திட்டமிட்டோம். இது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான சேவையாகக் கருதப்பட்டது.
இரவு 10 மணியளவில் படகு ஓட்டுநரிடமிருந்து அவசர அழைப்பு வந்தது.
பாதுகாப்பு குறித்து எவ்வித விளக்கமுமின்றி, பாதுகாப்பு அங்கிகள் தரப்படாமலும், மற்ற பயணிகள் அணியவில்லை என்ற காரணத்துடன், எங்களை உடனடியாக படகில் ஏறும்படி வற்புறுத்தினார்.
நம்பிக்கையை விற்ற அலட்சியம்
வானிலை தீவிரமாக மாறிய நிலையில், இருளில் மற்றும் அமைப்பில்லாத பயணமாய் பயணம் தொடங்கியது. நாங்கள் பயணத்தை நிறுத்தி திரும்புமாறு கேட்டுகொண்ட போதும், படகு ஓட்டுநர் வலியுறுத்தி பயணத்தைத் தொடரச் செய்தார்.
விபத்து நிகழ்ந்த நேரம்
இரவு 10:30 மணியளவில் கடலின் நிலை மோசமடைந்து, படகு பெரும் அலைகளால் அடிக்கப்பட்டு கவிழ்ந்தது. பயணித்த 15 பேர் கடலில் வீசப்பட்டனர். சிலர் உயிருடன் மீட்கப்பட்டபோதும், எங்கள் மூன்று உறவினர்கள் திரும்பி வரவில்லை.
தாமதமான மீட்பு – தவிக்கவைத்த தருணங்கள்
உயிரிழந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்பட்ட போதும், தீவில் AED கருவி மற்றும் ஆக்ஸிஜன் வசதிகள் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் தங்களின் dive ஆக்ஸிஜன் மற்றும் அனுபவத்தின் உதவியுடன் முயற்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 6 வயது குழந்தையொன்றும் மற்றொரு பெண்ணும் கடின சிகிச்சைக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
செய்தி ஊடகங்களில் தவறான அறிக்கைகள்
படகு ஓட்டுநர் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் பயணிகள் வற்புறுத்தினர் எனத் தெரிவித்திருப்பது உண்மையல்ல. எங்களுக்கு வானிலை எச்சரிக்கைகள் எதுவும் தரப்படவில்லை; பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமையாகவே இருந்தது. சமூக ஊடகங்களில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றம்சாட்டும் செய்திகளால் நாங்கள் வலியுறுத்துகிறோம் – உண்மையை அறியாமல் யாரையும் குற்றம் சாட்ட வேண்டாம்.
அரசியல் அல்லது இனவாத உரையாடலுக்கு இடமில்லா துயரம்
இந்தச் சம்பவம் எந்த வகையிலும் அரசியலாக்கப்படக்கூடாது. இது ஒரு குடும்பத்தின் உயிரிழப்பு – இனமோ, மதமோ, கட்சியோ இல்லை. பாதுகாப்புத் தரநிலைகள் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்; இத்தகைய சம்பவங்கள் திரும்பத் தவிர்க்கப்பட வேண்டும். “எங்கள் நம்பிக்கை – எங்களின் துயரத்தை மற்ற எந்த குடும்பமும் எதிர்கொள்ள வேண்டாம் என்பதே” இதுவே சம்பந்தப்பட்ட குடும்பாத்தார் வழங்கிய கூட்டு அறிக்கையின் சாரம்சமாகும்
தகவல்: இறந்தவர்களின் உடல்கள் கோலா திரங்கானு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மூச்சுத்திணறலே மரணத்திற்கான காரணம் என உறுதிசெய்யப்பட்டது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2025, 9:34 pm
சொந்தக் கட்சியே என்னை நிராகரித்ததால் நான் பதவி விலகினேன்: துன் மகாதீர்
July 26, 2025, 9:33 pm
உடல் நலக் குறைவு காரணங்களால் அன்வார் எதிர்ப்பு பேரணியில் ஹாடி கலந்து கொள்ளவில்லை
July 26, 2025, 9:31 pm
உணவகத்தில் இருந்த 6 வயது சிறுவன் காணாமல் போனான்
July 26, 2025, 6:39 pm
அன்வார் எதிர்ப்பு பேரணி நிறைவடைந்தது; பொதுமக்கள் கலையத் தொடங்கினர்
July 26, 2025, 3:12 pm