நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம் 

சென்னை:

தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். 

செந்தில் பாலாஜி வகித்துவந்த மின் துறை, அமைச்சர் சிவசங்கருக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்படுகிறார். பொன்முடி வசம் இருந்த வனத்துறை மற்றும் கதர் கிராமங்கள் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என்றும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அரசியல் வட்டாரங்களில் சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இதனிடையே வனத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த இருந்த பொன்முடி, அண்மையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து அவர் வகித்து வந்த துணைப் பொதுச்செயலாளர் கட்சிப் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டார். அதேபோல, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கும் செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் தொடரக்கூடாது என பாஜவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடித்தால் சாட்சிகள் கலைக்கப்படும் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் செந்தில்பாலாஜிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், அமைச்சர் பதவி வேண்டுமா, ஜாமீன் வேண்டுமா என்பதை வரும் 28ம் தேதிக்குள் செந்தில்பாலாஜி தரப்பு தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டது.

இதற்கிடையே அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அமைச்சரவையில் மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் மாளிகை நேற்று மாலை வெளியிட்டது. 

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு ஆளுநருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.

அமைச்சரவை மாற்றத்திற்கான பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். முதல்வர் வழங்கிய பரிந்துரைகளின் படி, செந்தில் பாலாஜி வகித்துவந்த மின்துறை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது. 

பொன்முடி வசம் இருந்த வனத்துறை, கதர் கிராமங்கள் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜை அமைச்சரவையில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டது. அதற்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். 

புதிய அமைச்சருக்கான பதவியேற்பு விழா இன்று மாலை 6 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய அமைச்சராக பொறுப்பேற்க உள்ள மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்தவர். இவர், ஏற்கனவே பால்வளத் துறை அமைச்சராக இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டவர். தற்போது மீண்டும் அமைச்சராகிறார். இவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset