
செய்திகள் தமிழ் தொடர்புகள்
நீரை நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது நியாயமற்றச் செயலாகும்: சீமான் கண்டனம்
சென்னை:
30 கோடி மக்களின் வாழ்வாதாராமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். காஷ்மீர் மாநிலம், பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கான பதிலடியாக, இந்திய ஒன்றியத்தை ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சிந்து நதியைத் தடுத்து நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது சிறிதும் நியாயமற்றச் செயலாகும்.
பகல்காமில் அப்பாவி மக்களைத் தாக்கிய பயங்கரவாதிகள் எப்படி இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்களோ, அதுபோலத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சுற்றுலாப்பயணிகளைப் பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றிய உள்ளூர் காஷ்மீர் மக்களும் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர்கள்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
சுற்றுலா சென்ற இந்திய மக்களைக் கொன்றது பயரங்கவாதிகள்தானே தவிர, பாகிஸ்தானைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் இல்லை. பயங்கரவாதிகளின் கோழைத்தனமான கொடுந்தாக்குதலுக்குக் குறிப்பிட்ட ஒரு மதத்தின் மீது பழிபோடுவதோ, குறிப்பிட்ட மக்களை பலிகொடுப்பதோ ஒருபோதும் அறமாகாது!
பகல்காம் பயங்கரவாத தாக்குதல் என்பது இந்திய அரசின் பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறையின் படுதோல்வியால் நிகழ்ந்த கொடுநிகழ்வாகும். பாஜக அரசு தன்னுடைய தோல்வியை மறைக்க, மறக்கடிக்க, சிந்து நதியைத் தடுப்பதென்பது, மக்களின் உணர்வுகளைத் தூண்டி திசைதிருப்பும் செயலன்றி வேறில்லை.
பாஜக அரசிற்கு உண்மையிலேயே பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளையும், அதற்கு உதவியர்களையுமே தண்டிக்க வேண்டும். பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழிக்க வேண்டும். பயங்கரவாதச் செயலுக்குப் பின்னால் பாகிஸ்தான் அரசோ, ராணுவமோ இருக்குமேயானால் அவர்களுடன் நேரடியாக மோத வேண்டும்.
அவற்றை விடுத்து 30 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் குடிநீரை, அவர்களின் உணவுத்தேவையை நிறைவு செய்யும் விவசாய பாசன நீரைத் தடுப்பது எவ்வகையில் நியாயமாகும்? பாகிஸ்தான் நாட்டின் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடையோ, வர்த்தகத் தடையோ அந்நாட்டு அரசையும், பெருமுதலாளிகளையுமே அதிகம் பாதிக்குமே தவிர, ஏழை மக்களை நேரடியாகப் பாதிப்பதில்லை. ஆனால், உயிர் ஆதாராமாக விளங்கும் நதிநீரை தடுப்பதென்பது, பயங்கரவாத தாக்குதலுக்கு எந்தத் தொடர்புமற்ற அப்பாவி ஏழை மக்களை நேரடியாகப் பாதிக்கின்ற கொடுஞ்செயலாகும்.
சிந்து நதியால் அதிகம் பயன்பெறுவது பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் வாழும் சீக்கிய மக்களும்தான். அவர்கள் அனைவரும் எல்லை பிரிப்புவரை இந்த நாட்டின் குடிகளாக இருந்தவர்கள்தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, நதிநீர் என்பது வெறும் மனிததேவை மட்டுமன்று. அது மரங்கள், கால்நடைகள், ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து உயிர்களின் இன்றியமையாத உயிர் ஆதாரத் தேவையாகும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:28 pm
கவினும் நானும் உண்மையா காதலித்தோம்: காதலி சுபாஷினி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
July 31, 2025, 7:21 pm
பாஜகவுடனான உறவு முறிந்தது: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு
July 31, 2025, 8:48 am
613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்
July 28, 2025, 10:54 pm
திருச்சியில் கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் 30-ஆம் ஆண்டு சந்திப்பு
July 28, 2025, 10:10 am
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரசோழன் நினைவு நாணயத்தை இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டார்
July 27, 2025, 8:43 am
பிரதமர் மோடி தமிழக வருகை: பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சியில் கடைகளை அடைக்க கெடுபிடி
July 26, 2025, 2:35 pm