
செய்திகள் தமிழ் தொடர்புகள்
பிளவுவாத பாஜகவுடன் மறைமுகமாக கூட்டு வைத்துள்ள திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி: விஜய்
சென்னை:
பிளவுவாத பாஜகவுடன் மறைமுகமாக கூட்டு வைத்துள்ள திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி இருக்கும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை: குறைந்தபட்ச அரசியல் அறத்தைக்கூடத் தொலைத்த, ஆளும் பிளவுவாத பாஜகவும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் திமுகவும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள். உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே. ஊழல் நடைபெற்ற மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன, ஊழல் மலிந்த தமிழகத்தில் நடப்பது என்ன, மற்ற மாநிலங்களில் ஊழல் செய்தவர் முதல்வரே ஆனாலும் தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை இந்த நாடறியும்.
ஆனால் தமிழகத்தில் ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும்போது, உடனடியாக அவர் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டால் அவர் மீதான நடவடிக்கையில் சுணக்கத்தை ஏற்படுத்தி, அவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போன்று செயல்படுவதையும் இந்த நாடறியும். இதுபோன்ற பல செயல்பாடுகள், பாஜக - திமுக மறைமுகக் கூட்டு என்பதை வெட்டவெளிச்சம் ஆக்கியுள்ளன.
திமுகவை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அதிமுகவைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பாஜக மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சர்யமில்லை.
2026 சட்டப்பேரவை தேர்தல் களத்தில், 'நாங்கள்தான் திமுகவுக்கு எதிரான ஒரே அணி' என்று பாஜகவும், 'தாங்கள்தான் பாஜகவுக்கு எதிரான அணி' என்று திமுகவும் முழக்கமிட்டு ஒரு நாடகத்தை நடத்துவர். தமிழக மக்கள் விழித்துக் கொண்டுவிட்டனர்.
இனி திமுகவும் பாஜகவும் எத்தகைய வேடங்களையும் பூண்டு, நாடகங்களை நடத்த இயலாது.
.
2026 தேர்தல் களமானது தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற ஒவ்வொரு வீட்டிலும் தங்களின் பிள்ளையாகக் கருதக் கூடிய தமிழக வெற்றிக் கழகத்துக்கும், வெற்று விளம்பரம் செய்து மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கும் இடையே தான். மக்களுக்கு எதிரான, மக்களாட்சிக்கு எதிரான தீயசக்திகளை எதிர்த்து நின்று, களமாடி வெல்லப் போவது தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.
எனவே, பிளவுவாத பாஜக மற்றும் மக்கள் விரோத திமுகவின் பகல் கனவு மற்றும் கபட நாடகமான, மறைமுகக் கூட்டுக் கணக்குகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நேரடி நிர்ப்பந்தக் கூட்டுக் கணக்குகளுக்கும் தமிழக மக்கள் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டி, விரட்டியடித்து தூக்கி எறியப் போவது உறுதி. அதே நேரம் நம்மை உரிய இடத்தை நோக்கி அழைத்துச் சென்று, உயரிய மக்களாட்சி அங்கீகாரத்தை வழங்கப் போவது என்பதையும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். வாகை சூடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm
திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது: விஜய் திட்டவட்டம்
July 4, 2025, 3:37 pm
இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm
அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்
June 30, 2025, 7:11 pm