நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னையில் சிங்கப்பூர் நூல்கள் வெளியீடு

சென்னை:

சென்னையில் சிங்கப்பூர் நூல்கள் வெளியீடு
04.01.26 ஞாயிறு மாலை 6 மணியளவில் கவிக்கோ மன்றத்தில் தமிழ் நாடு தமிழ் வளர்ச்சிக் குழுத்தலைவர்  மா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் சிங்கப்பூர் நாணய மாற்றுத் தொழில் பற்றி திரு .முஸ்தபா அவர்கள் எழுதிய "சேஞ்ச் அலி" நூலை எழுத்தாளர் பொருளியல் அறிஞர்  முனைவர் திரு .சோம வள்ளியப்பன் ஆய்வுரை வழங்கினார்.

அண்மையில் மறைந்த சிங்கப்பூர் வரலாற்று ஆய்வாளர் பால பாஸ்கரன் எழுதிய 
சிங்கப்பூர் - மலேசிய இதழியல் 1875-1941 நூலை சென்னை வளர்ச்சி நிறுவன பேராசிரியர் 
முனைவர்  ஆ .இரா .வெங்கடாசலபதி ஆய்வுரை வழங்கி அறிமுகம் செய்தார்.

பாலபாஸ்கரனின் "சொப்பனங்கள் நனவாகும் சொர்ண பூமி " நூலை எழுத்தாளர்  திரு சுனில் கிருஷ்ணன்  செய்தார்

திரு .ஷா நவாஸ் எழுதிய ருசி பேதம் நூலை கவிஞர் எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன் அறிமுகம் செய்து பேசினார்.

இந்நிகழ்ச்சி சிங்கப்பூர் ரஹ்மத் முஸ்தபா பவுண்டேஷன் ஆதரவில் நடைபெற்றது

சோம வள்ளியப்பன்
பொருளாதாரத்துறையில் நிபுணத்துவம் பெற்ற சோம வள்ளியப்பன் அவர்கள் சேன்ஜ் அலி நூல் குறித்த அறிமுக உரையில் நூலில் இருக்கும் சுவாரசியமான தகவல்களை விருந்தாகப் படைத்தார்.   

மாற்றம் பற்றி பேசும் இந்த நூல் எளிய நடையில் அமைந்திருக்கிறது என்றும் தமிழ்மொழியில் கொடுத்ததற்காகவே நூலாசிரியரை பாராட்டலாம் என்றும் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். 

இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடந்தபோது பல பிரச்சனைகளைப் பொதுமக்கள் சந்தித்தனர்.  அந்தக் காலத்தில் ஜப்பான் நாடு அறிமுகப்படுத்திய வாழை மர நோட்டுகளை அழிக்க நினைத்து 200 டன் அளவு கொண்ட நோட்டுகளை கப்பலில் ஏற்றி சென்று அழித்தனர் என்ற தகவல்களை வியப்புடன் பகிர்ந்து கொண்டார். 

மேலும் சிங்கப்பூர் நாணயங்களை வெள்ளி என்றும் ஆஸ்திரேலியா நாணயங்களை கடா என்றும் அமெரிக்க நாணயங்களை பச்சை என்றும் இங்கிலாந்து நாணயங்களை வெள்ளை என்றும் நாணயம் மாற்றும் தொழிலில் ஈடுபட்டவர்கள் தங்கள் குழுவுக்குள் பேசிக் கொள்ளக்கூடிய சங்கேத மொழி என்பதையும் கூறி நூல் ஆசிரியரும், தமிழ் ஆர்வலருமான எம்.ஏ. முஸ்தபா அவர்களை மனம் திறந்து பாராட்டினார்.

சமஸ் :
எழுத்தாளர், பத்திரிக்கையாளர், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் போன்ற பன்முகம் கொண்ட சமஸ் அவர்கள் தன்னுடைய சிறப்புரையில் இங்கு வெளியிடப்பட்ட நான்கு நூல்களும் வரலாறு என்பதை அடிநாதமாகக் கொண்டு வெளிவந்திருக்கின்றன. 

கவிக்கோ மன்றத்தின் நிறுவனரும், சேன்ஜ் அலி நூலாசிரியருமான முஸ்தபா அவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, அரவணைத்துச் செல்லக்கூடிய பண்பாளர் என்று குறிப்பிட்டார்.  வாசிப்பை இயக்கமாக நடத்தி அதற்காக பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார் என்றும் பாராட்டினார்.

இவரின் நூல் வரலாற்றின் மீதான வேட்கையை வெளிப்படுத்துகிறது.  தான் சிங்கப்பூர் சென்றபோது சிங்கப்பூர் நோட்டுகளை தொட்டுப் பார்த்து அதன் தன்மைகளை விளக்கக் கூடியவர் என்பதை பார்த்திருக்கிறேன் என்பதையும் பதிவு செய்தார். 

வாசிப்பும் கலா ரசனையும் இருக்கும் ஒருவரால் தான் இப்படி ஒரு நூலை முடியும் என்றும் வெளிநாட்டு எழுத்தாளர்களின் எழுத்துக்களை இரண்டாம் பட்சமாக எழுத்தாகக் கருதாமல் நியாயத்துடன் அணுக வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். 

ஜெயரஞ்சன் :
அமெரிக்க டாலர் மட்டும் தொடர்ச்சியாக பொருளாதாரத்தில் உச்சநிலையிலேயே இருக்கிறது, இதற்கான அரசியல் என்ன என்பதை சேன்ஜ் அலி நூலின் வழியாக விளக்கினார் தமிழ்நாட்டு திட்டக் குழுவின் தலைவர் ஜெயரஞ்சன் அவர்கள். 

பொருளியல் துறையில் பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கும் ஜெயரஞ்சன் அவர்கள் நாணய மாற்று மித்த நூலை எழுதுவதற்கு பரந்த அறிவு இருந்தால் ஒழிய சாத்தியமில்லை என்பதை நேர்மையுடன் ஒப்புக்கொண்டார். 

ஒவ்வொரு விநாடியும் உலகம் முழுக்க பணம் பயணித்துக் கொண்டே இருக்கிறது என்றும் தொழில்நுட்பம் எப்படி எல்லாம் அதற்குச் சாதகமாக அமைந்திருக்கிறது என்றும் பேசிய சிறப்பு விருந்தினர் நூலாசிரியரான  முஸ்தபா தான் பிறந்த முத்துப்பேட்டையில் பெண் கல்விக்காக பெண்கள் மேல்நிலைப் பள்ளியை உருவாக்கி சிறப்பாக நடத்தி வருவதையும் குறிப்பிட்டுப் பாராட்டினார். 

வியாபாரத்துடன் நின்று விடாமல் சமூகப் பணியையும் சிறப்பாகச் செய்து வருகிறார், அதே நேரத்தில் தமிழ் ஆர்வலராக, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், மலாயாப் பல்கலைக் கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் அறிஞர்களின் பெயர்களில் ஆய்விருக்கைகளை உருவாக்குவதற்கு நிதியுதவி செய்ததையும் மறக்காமல் குறிப்பிட்டார்.

- புதுமடம் ஜாஃபர் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset