செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் தீபாவளி விற்பனை ரூ.60,000 கோடியைத் தாண்டியது
சிவகாசி:
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் விற்பனை ரூ.60,000 கோடியை தாண்டியதாக தெரியவந்துள்ளது. இதனால், வியாபாரிகள், விற்பனையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலமாக இருந்தாலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை என்பதால், தீபாவளி விற்பனை களைகட்டியது.
சென்னை மட்டுமின்றி, மதுரை, கோவை, சேலம், நெல்லை, தஞ்சாவூர், நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விற்பனை அமோகமாக நடந்தது.
தீபாவளி பண்டிகையில் முக்கிய இடம்பெறுவது ஜவுளி. மக்கள் தங்களுக்கு பிடித்த ஜவுளிகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டில் ஆன்லைன் வர்த்தகமும் சூடுபிடித்தது. அதேநேரம், சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் உட்படபல்வேறு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் கடந்த 2 வாரங்களாக கூட்டம் அலைமோதியது. பிரபல நிறுவனங்களின் துணி ரகங்களுக்கு தீபாவளியை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்ததால், அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் ஜவுளி ரகங்களை வாங்கினர்.
சாலையோர கடைகளிலும் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இந்த தீபாவளிக்கு மாநிலம் முழுவதும் சுமார் ரூ.27 ஆயிரம் கோடிக்கு ஜவுளி விற்பனை நடந்திருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
தீபாவளிக்காக வீடுகளில் அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் செய்யப்பட்டாலும், மில்க் ஸ்வீட், வித்தியாசமான மைசூர்பாக் மற்றும் பல்வேறு வகையான இனிப்புகளை வாங்குவதற்காக இனிப்பகங்களிலும் மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
இதுதவிர கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குறைந்த விலைக்கு தரமான இனிப்பு, கார வகைகள் செய்து கொடுப்பதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்து பலகாரங்களை விற்பனை செய்தனர். மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் இனிப்புகள் விலை சற்று அதிகமாகவே இருந்தது. இனிப்பு, கார பலகாரங்கள் விற்பனை சுமார் ரூ.10 ஆயிரம் கோடி வரை நடந்ததாக கூறப்படுகிறது.
வீடுகள்தோறும் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் குழம்பு என அசைவ உணவு வகைகளை சமைத்து, உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாடினர். உளூந்தூர் பேட்டை, திருச்சி சமயபுரம், கோவில்பட்டி அடுத்த எட்டயபுரம், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர், சேலம் மாவட்டம் வீரகனூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் சுமார் ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
பூக்கள், பழங்கள், காய்கறிகள், மளிகை பொருட்கள், மின்னணு சாதனங்கள், செல்போன்கள், வீட்டு உபயோக பொருட்கள், அழகுசாதன பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் அமோகமாக நடந்தது. மொத்தத்தில் தீபாவளி விற்பனை ரூ.60,000 கோடியை தாண்டியதால் வியாபாரிகள், விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பட்டாசு விற்பனை ரூ.6,000 கோடி:
சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1,080-க்கும் மேற்பட்ட ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பெரும்பாலானோர் தீபாவளியை மையப்படுத்தியே பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.
சரவெடிக்கு தடை, பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை உள்ளிட்ட காரணங்களால் பலவகை பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. அதை ஈடுகட்ட, பேன்ஸி ரக பட்டாசுகளில் பல புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. தீபாவளிக்காக மட்டும் 15 வகையான புதிய ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 20, 2024, 6:06 pm
திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு மலேசியாவில் இருந்து தாயகம் திரும்பிய பெண் நடுவானில் உயிரிழப்பு
November 20, 2024, 12:50 pm
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது அடுத்தடுத்து கைது நடவடிக்கை
November 18, 2024, 5:25 pm
அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை: தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்
November 17, 2024, 4:31 pm
ஹைதராபாத்தில் கைதான நடிகை கஸ்தூரி இன்று சென்னை அழைத்து வரப்படுகிறார்
November 16, 2024, 11:55 am
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரையிலிருந்து விரைவு பேருந்துகள் சேவை தொடக்கம்
November 13, 2024, 7:43 am
கவிக்கோ நினைவலைகள்
November 12, 2024, 2:04 pm
இன்று சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை: பலத்த மழைக்கு வாய்ப்பு
November 11, 2024, 4:20 pm
பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை; இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு: ஜெயக்குமார்
November 10, 2024, 2:50 pm
தெலுங்கர்களை அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவு
November 10, 2024, 9:13 am