நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கவிக்கோ நினைவலைகள்

கவிக்கோ’ என்று போற்றப்படும் சிறந்த தமிழ்க் கவிஞர் அப்துல் ரஹ்மான் (Abdul Rahman) பிறந்தநாள் இன்று...

காலன் அவரைக் கொண்டு செல்லும்வரை, கவிதை, கட்டுரையில் கொடிக்கட்டிப் பறந்தார்.

அவருடைய கவிதைகள் இன்றும் புதுக் கவிதையில் தடம் பதிப்போருக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துபவையாக விளங்குகின்றன.

“கவிதைதான் என்னைத் தேர்ந்தெடுத்தது.

நான் கவிஞனாக இல்லாமல்

வேறு யாராகவும் இருக்க முடியாது”

- இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிக்கோ அப்துல் ரஹ்மான்

எந்தத் துறையில் இறங்கினாலும் அதன் வேர்வரை சென்று ஆழக் கற்பதைத் தன்னுடைய இயல்பாகக் கொண்டிருந்த கவிக்கோ, தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்; சமஸ்கிருதமும் கற்றறிந்தார்.

இவரது முதல் கவிதைத் தொகுப்பான ’பால்வீதி’ கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியிட்டு புதுமை செய்தார்.

மேலும், ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கிய வகைகளை தமிழில் பரவச் செய்தார். 'மின்மினிகளால் ஒரு கடிதம்' என்ற பெயரில் கஜல் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

மனிதம் மறந்து மதம் கோலோச்சுவதை அன்றே தன் கவிதை ஒன்றில் அழகாய்ச் சுட்டிக்காட்டியிருப்பார்.

அதில்,

”மரப்பாச்சிக்குக்

கை ஒடிந்தால்கூடக்

கண்ணீர் வடித்தோம்..

இப்போதோ நரபலியே

எங்கள்

மத விளையாட்டாகிவிட்டது”

- எனக் குமுறியிருப்பார்.

மேலும் மதம் குறித்து,

“நமக்கிருப்பதுபோல்

மிருகங்களிடம் மதம் இல்லை

ஆனால்

மிருகங்களின்

கள்ளம் கபடமில்லாத குணம்

நம்மிடமில்லை”

- என உணர்த்தியிருப்பார்.

மதம் மட்டுமல்ல, அப்படிப்பட்ட மதத்தைக் கொண்டு அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளையும் இன்னொரு கவிதையில் சாடியிருப்பார்.

“தலைவர்கள்

பொறுப்புமிக்கவர்கள்...

செத்தாலும்

வாரிசுகளை விட்டுச்செல்கிறார்கள்

வழிநடத்துவதற்காக!”

- என உணர்த்தியிருக்கும் கவிக்கோ, அதில் வாரிசு அரசியலையும் சுட்டிக்காட்டியிருப்பார்.

குழந்தைகள் குறித்தும் ஒரு கவிதையில் தன்னுடைய கவலையைத் தெரிவித்திருப்பார்.

”புத்தகங்களே…

சமர்த்தாயிருங்கள்

குழந்தைகளைக்

கிழித்துவிடாதீர்கள்” என்பதுடன்,

“வருடம் தவறாமல்

குழந்தைகள் தினம்

கொண்டாடுபவர்களே!

இனிமேல்

தினங்களை விட்டுவிட்டுக்

குழந்தைகளை

எப்போது

கொண்டாடப் போகிறீர்கள்?”

- எனக் கேள்வி எழுப்பி இருப்பார்.

அதுபோல் வளையும் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி கவிதை புனைந்திருப்பார்.

”வாழ்க்கை வாக்கியத்தின்

உணர்ச்சிக்குறியாயிருந்த

உடல்

வளைகிறது

கேள்விக்குறியாக” - என வாழ்க்கையை குறி வடிவங்களில் உணர்த்தியிருப்பார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset