
செய்திகள் சிந்தனைகள்
செத்துப் போன மனிதரும் அகக் கண்ணாடிகளும்..! - வெள்ளிச் சிந்தனை
அனஸ்(ரலி) அறிவிக்கின்றார்:
அன்பு நபிகளார் (ஸல்)கூறினார்கள்:
‘எவர் என்னுடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் தேவையை, அவரை மகிழ்விக்கின்ற ஒரே நோக்கத்துடன் நிறைவேற்றி வைக்கின்றாரோ அவர் என்னை மகிழ்வித்தவர் ஆவார். எவர் என்னை மகிழ்வித்தாரோ அவர் இறைவனை மகிழ்வித்தவர் ஆவார். எவர் இறைவனை மகிழ்வித்தாரோ அவரை இறைவன் சுவனத்தில் நுழைவிப்பான்’.
நூல் : பைஹகி
அன்பு நபிகளாருக்குத் தம்முடைய சமுதாயத்தாருடன் இருக்கின்ற தனிச் சிறப்புமிக்க தொடர்பை இந்த நபிமொழி உணர்த்துகின்றது. ஒருவரின் தேவையை நிறைவேற்றுவதற்கும் அதன் மூலம் அவரை மகிழ்விப்பதற்கும் மார்க்கத்தில் எந்த அளவுக்குச் சிறப்பிடம் தரப்பட்டிருக்கின்றது என்பதையும் இந்த நபிமொழி வெளிப்படுத்துகின்றது.
மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என விரும்புவது உண்மையிலேயே மிக அதிகமாக விரும்பத்தக்க பண்பு ஆகும் என்பதையும் இந்த நபிமொழி உணர்த்துகின்றது. இந்த உயர்வான விருப்பம் ஒருவரின் மனத்துக்குள் கிளர்ந்தெழ வேண்டுமெனில் அவர் இறைவனின் அடியார்களுடன் ஆழமான, உணர்வுப்பூர்மான பிணைப்பும் பற்றும் கொண்டவராகவும், அந்த அடியார்களின் சிரமங்களையும் கவலைகளையும் பார்த்து, தவித்து, துடித்துப் போகின்றவராகவும் இருந்தாக வேண்டும்.
தேவையுள்ளவரின் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பின்னால் எந்தவிதமான சுயநலமோ, உலக ஆதாயங்களை அடைகின்ற மோகமோ இருத்தல் கூடாது. தேவையுள்ளவரின் தேவையை நிறைவேற்றி அவரை மகிழ்ச்சியிலும் ஆனந்தத்திலும் ஆழ்த்த வேண்டும் என்கிற ஆசையே ஒரு வலுவான உந்துசக்தி ஆகும். இன்னும் சொல்லப்போனால் அதுதான் மிக மிக வலுவான உந்துசக்தியும், ஆற்றல்மிகு உள்ளார்ந்த எண்ணமும் ஆகும்.
ஆனால் இந்த ஆசை ஒருவருக்குள் மலர்வதற்கு அவரிடம் கருணை, பரிவு, பிறர் படுகின்ற துன்பங்களையும் வலிகளையும் பார்த்து மனம் பதைத்து, துடித்துப் போகின்ற இளகிய மனசு இருப்பது அவசியம் ஆகும். பிறரின் துயரங்களைக் கண்டு மனம் பதறுகின்ற இந்த இளகிய மனதும், பிறரின் சிரமங்களைப் பங்கு போட்டுக் கொள்வதற்குத் தயக்கமின்றி முன் வருகின்ற நெஞ்சார்ந்த உணர்வுகளும்தாம் ஒரு மனிதரை மனிதத்தின் மிக உயர்ந்த நிலைகளில் அமர்த்திவிடுபவை ஆகும்.
இவற்றின் காரணமாகத்தான் மனிதர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்ற ஈர்ப்பாற்றலும் கவர்ச்சியும் உருவாகின்றன.
இந்த உணர்வுகள் மரத்துப் போய்விட்டாலோ, இளகிய மனம் இல்லாமல் போனாலோ மனிதனின் மனிதத்தன்மையே மரணித்துப் போய்விடுகின்றது.
இவ்வாறு மனிதத்தன்மை மரணித்துப் போன மனிதர் வெளிப் பார்வைக்கு வேண்டுமானால் உயிர்த்துடிப்புடன் உலகத்தில் வளைய வளைய வருபவராகத் தோன்றலாம்; பிற மனிதர்களுடன் பேசி மகிழ்பவராகக் காட்சியளிக்கலாம்; நிமிடத்துக்கு நிமிடம் தாம் உயிருடன் இருப்பதாகத் தம்முடைய இருப்பைக் கொண்டு மௌனமாக அறிவித்துக்கொண்டிருக்கலாம். என்றாலும் அவர் செத்துப் போன மனிதராகத்தான் கருதப்படுவார்.
ஒருவர் எத்தனை எத்தனை மாட மாளிகைகளைக் கட்டியிருக்கின்றார் என்பதோ, எத்தனை அடுக்கு மாடிக் கட்டடங்களுக்கு உரிமையாளராக இருக்கின்றார் என்பதோ அவர் உயிருடன்தான் இருக்கின்றார் என்பதற்கான சான்றுகள் ஆகாது.
ஒருவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டோ, அவர் வெளியிடுகின்ற பத்திரிகை அறிக்கைகளை வைத்துக்கொண்டோ, அவர் எத்தனை எத்தனை ஒலிபெருக்கிகளுக்கு முன்னால் நின்றார் என்பதன் அடிப்படையிலோ அவர் உயிர்த்துடிப்புடன்தான் இருக்கின்றார் என்கிற தீர்மானத்திற்கு வந்துவிட முடியாது.
ஒருவர் உயிருடன்தான் இருக்கின்றார் என்பதை மெய்பிப்பவை பிற மனிதர்களுக்காக அவர் ஆற்றுகின்ற சேவைகள்தாம். ஒருவர் உயிருடன் இருக்கின்றாரா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான நம்பகமான வழிமுறை அவர் எந்த அளவுக்குப் பிற மனிதர்களுக்குச் சேவையாற்றுகின்றார் என்பதைக் கணக்கிடுவதுதான்.
இந்தக் கணக்கீட்டைக் கொண்டு எந்தவொரு மனிதரும் தாம் எந்த அளவுக்கு உயிர்த்துடிப்புடன் இருக்கின்றோம் என்பதைக் கணித்துக்கொள்ள முடிவும்.
மக்களின் சிரமங்கள், வலிகள் குறித்து அன்பு நபிகளார்(ஸல்) எந்த அளவுக்கு அக்கறையும் கவலையும் கொண்டிருந்தார்கள் என்பதை இந்த நபிமொழி வெளிப்படுத்துகின்றது. மக்களின் துயரங்கள் அன்பு நபிகளாரையும் துயரத்தில் ஆழ்த்திவிடும். மக்களின் மகிழ்ச்சிதான் அன்பு நபிகளாருக்கும் மகிழ்வூட்டுவதாய் இருந்தது.
இதனால்தான் எந்தவிதமான விளம்பர மோகமோ, புகழாசையோ அறவே இல்லாமல் தேவையுள்ள மனிதரின் தேவைகளை நிறைவேற்றி அவரை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்துடன் தேவையுள்ள மனிதரின் தேவைகளை நிறைவேற்றி அவரை மகிழ்வித்தவர் உண்மையில் என்னை மகிழ்வித்தவர் ஆவார் என அன்பு நபிகளார்(ஸல்) கூறினார்கள்.
அதுமட்டுமல்ல, அந்த மனிதர் தம்முடைய அந்த நல்லறத்தால் இறைவனையும் மகிழ்வித்து விடுகின்றான் என்றும், எவருடைய நல்லறத்தைப் பார்த்து இறைவன் மகிழ்கின்றானோ அவரை விட பேறு பெற்றவர் உண்டா, என்ன? எவருடைய நல்லறங்களைப் பார்த்து இறைவன் மகிழ்கின்றானோ அந்த மனிதருக்கு இறைவன் தன்னுடைய அருள்வளங்களையும் வெகுமதிகளையும் தராமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை, அல்லவா? எனவே திண்ணமாக அவன் அந்த மனிதரைத் தன்னுடைய சுவனத்தில் நுழைவிப்பான்.
இந்த நபிமொழியில் நம் எல்லோருக்கும் அழகிய வழிகாட்டுதல் இருக்கின்றது. மற்றவர்களை மகிழ்விப்பதற்காகச் செய்யப்படுகின்ற எந்தவொரு நல்லறமும் மிக மிக உயர்வான, மேன்மையான தகுதிநிலையையும் சிறப்பையும் கொண்டதாகும்.
இந்த எண்ணத்தெளிவு சரியான முறையில் நம்முடைய நெஞ்சங்களில் ஆழப் பதிந்துவிடுமேயானால் பிற மனிதர்களுக்கு இம்மியளவு தொல்லை கொடுப்பதற்கும் நாம் ஆயத்தமாவோமா, என்ன? நம்மால் மற்றவர்களுக்கு சிரமங்களும் இன்னல்களும் விளைவதை நாம் விரும்புவோமா, என்ன? இன்னும் சொல்லப்போனால் பிற மனிதர்கள் மீது மற்றவர்கள் கொடுமை இழைக்கின்ற போதும் அதனைப் பார்த்து துடித்துப் போவோம், அல்லவா?
தேவையுள்ளவரின் தேவைகளை நிறைவேற்றுகின்றபோது, அந்தத் தேவையுள்ள மனிதர் இறைநம்பிக்கையாளராய் இருக்கின்ற பட்சத்தில் அந்த நல்லறத்தின் மதிப்பும் மாண்பும் இன்னும் அதிகமாகக் கூடிவிடுகின்றது. ஏனெனில் இறைநம்பிக்கையுள்ள மனிதர் இறைவனுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருப்பவர் ஆவார்.
ஒருவரின் தேவையை நிறைவேற்றி உதவுவதும், முறையிடுபவரின் விண்ணப்பத்தை நிறைவேற்றி வைப்பதும் இறைவனுக்கு எந்த அளவுக்கு விருப்பமான நற்செயல்கள் என்பதை உணர்த்துகின்ற வாசகங்கள் மற்றுமொரு நபிமொழியிலும் பதிவாகியிருக்கின்றன.
அனஸ்(ரலி) அறிவிக்கின்றார்: அன்பு நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘துயரத்திலும், கவலையிலும் வாடுகின்ற மனிதர் ஒருவரின் தேவையை ஒருவர் நிறைவேற்றுகின்றபோது இறைவன் அவருக்காக 73 மன்னிப்புகளைத் தன் மீது கடமையாக்கிக்கொள்கின்றான்.
அவற்றில் ஒரே ஒரு மக்ஃபிரத்தே அவரின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுவதற்குப் போதுமானதாக இருக்கும். எஞ்சியிருக்கின்ற 72 மன்னிப்புகள் மறுமைநாளில் அவருடைய தகுதிநிலைகள் மேன்மேலும் உயர்த்தப்படுவதற்குத் துணையாகும்’.
கஃபர என்பதற்கு போர்த்துதல், மன்னித்தல், சீர்திருத்தல் என்றெல்லாம் பொருள். எந்தவொரு பாவத்தைக் குறித்தோ, இறைவனுக்கு மாறுசெய்கின்ற நடத்தையைக் குறித்தோ எதுவுமே குறிப்பிடப்படாத இடங்களிலும்கூட குர்ஆன் இந்தச் சொல்லை ஆண்டிருக்கின்றது.
இதிலிருந்து மக்ஃபிரத் - மன்னிப்பு என்கிற சொல் மிக மிக விரிவான, கருத்துச் செறிவு மிக்க பொருளைக் கொண்ட சொல் ஆகும் என இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். நம்முடைய பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்தருள்வது மக்ஃபிரத்- மன்னிப்பின் ஒரு வடிவம்தான்.
மனிதனின் அந்தஸ்து உயர்த்தப்படுவதும் மக்ஃபிரத்தின் மற்றுமொரு வடிவமே என்பதை இந்த நபிமொழி உணர்த்துகின்றது.
‘ஆனால் பொறுமையை மேற்கொண்டு நற்செயல்கள் புரிபவர்கள்தாம் இத்தகைய குறைபாடு இல்லாதவர்கள். அவர்களுக்குத்தாம் மன்னிப்பும் பெரும் கூலியும் இருக்கின்றன’ *(அத்தியாயம் 11 ஹூத் 11)* எனக் குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.
இஸ்லாம் ஒருவரிடம் எதிர்பார்க்கின்ற ஒவ்வொரு நல்லறமும் உண்மையில் அவரை மிகப் பெரும் உயர்வான இடத்துக்கு - நன்மையையும் வளத்தையும் பெறத் தவறுவதற்கு இம்மியளவுகூட வாய்ப்பே இல்லாத இடத்துக்குக் - கொண்டு சேர்க்கின்றது.
சின்னதொரு நல்லறத்தையும்கூட ஒருவர் முழுமையான விழிப்பு உணர்வுடனும் எண்ணத் தெளிவுடனும் மேற்கொள்வாரேயானால் அதன் தாக்கத்தால் உந்தப்பட்டு மற்றெல்லா அறச் செயல்களையும் அவர் இயல்பாகவே மேற்கொள்ளத் தொடங்கிவிடுவார். கூடவே தீயச் செயல்கள் மீது அவருக்கு கடுமையான வெறுப்பு ஏற்பட்டுவிடும்.
ஆக, சின்னதோர் நல்லறத்திற்குள்ளும் ஒட்டுமொத்த வாழ்வையும் புரட்டிப் போட்டு மாற்றிவிடுகின்ற ஆற்றல் பொதிந்துள்ளது.
ஒருவர் செய்கின்ற எந்தவொரு நல்லறமும் உண்மையிலேயே நல்லறமாக இருக்குமேயானால் அது ஒன்றே அந்த மனிதர் நேர்வழியில் இருக்கின்றார் என்பதற்கான அடையாளமாகக் கருதப்படும்.
இதனால்தான் அன்பு நபிகளார்(ஸல்) எத்தனையோ சந்தர்ப்பங்களில் சின்னச் சின்ன நல்லறங்களில் ஈடுபடுகின்ற மனிதர்களுக்கு சுவனத்திற்கான நற்செய்தி வழங்குவதைப் பார்க்க முடிகின்றது.
இதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒருவரின் வாழ்வில் அக்கிரமங்களும் கொடுமைகளும் முறைகேடுகளும் நிறைந்திருந்தாலும் அந்த ஒற்றை நல்லறத்தில் ஈடுபடுவாரேயானால் அவர் சுவனத்திற்குள் நுழைந்துவிடுவார் என்கிற மயக்கத்திற்கு எவரும் ஆளாகிவிடக் கூடாது. அத்தகைய மனிதர் அந்த நல்லறத்தில் ஈடுபட்டாலும்கூட உண்மையில் அது நல்லறமாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அந்த நல்லறத்தை அந்தத் தீயவரின் வாழ்வே பாழாக்கிவிடுகின்றது.
ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மையானதாய் ஆக்கிவிடுகின்ற ஆற்றல் படைத்ததுதான் உண்மையான நல்லறம் ஆகும்.
சூரியன் நடுவானை விட்டு சாய்வதையும், அது வானை விட்டு மறைவதையும், வைகறைப் பொழுதையும் அன்றாடம் கண்கூடாகப் பார்க்கின்ற அகப் பார்வை கொண்ட மனிதர்கள் இந்த வேளைகளில் இறைவனுக்கு முன்னால் சிரம் தாழ்த்துவது அவசியம் என்பதை உணர்ந்துக் கொள்கின்றார்கள். ஒருவர் இந்த வேளைகளில் இறைவனுக்கு முன்னால் சிரம் தாழ்த்துவதில்லையெனில், இறைவனுக்கு முன்னால் தன்னுடைய இயலாமையையும் சார்ந்திருத்தலையும் வெளிப்படுத்துவதில்லையெனில் அவர் உண்மையில் இந்தப் பேரண்டத்தின் உண்மைகளை மறுக்கின்றவர் ஆகின்றார்.
முற்றிலும் இதே போன்றுதான் ஆதரவுக்கரங்களைத் தேடித் தேடி இங்குமங்கும் அலைபாய்கின்ற கண்களை - தேவையுள்ளவரின் யாசிக்கின்ற கண்களை - ஒருவர் கண்கூடாகப் பார்த்துவிட்ட பிறகும் அந்தத் தேவையுள்ள மனிதரின் தேவைகளை நிறைவேற்ற முற்படுவதில்லை, விசாரிப்பதில்லையெனில் அவர் உண்மையில் அவர் தம்முடைய மனத்தில் இருக்கின்ற ஈர உணர்வுகளை நசுக்கியவர் ஆகின்றார். இன்னும் சொல்லப்போனால் அந்த ஈர உணர்வுகள்தாம் அவரிடம் இறைவனால் அமானிதமாக ஒப்படைக்கப்பட்ட விலை மதிப்பற்ற சொத்து ஆகும். இவ்வாறு அவர் தம்முடைய மனத்தின் ஈர உணர்வுகளை நசுக்குகின்ற அதே வேளையில் அவர் மறுபக்கம் யாசிக்கின்ற கண்களின் வடிவில் தமக்கு முன்னால் வெளிப்பட்ட கோரிக்கைகளையும் அர்த்தமற்றவையாய் ஆக்கிவிடுகின்றார்.
எவரோ ஒருவரின் இயலாமையும் இக்கட்டான, நிர்க்கதியான நிலைமையும் கண்ணாடியாய் மாறி அவருக்கு முன்னால் தோன்றியது. ஆனால் அந்தக் கண்ணாடியில் அவருடைய தோற்றம் தென்பட்டதே, அது எத்தகையதாய் இருந்தது என்பதை எவரும் எளிதில் உணர்ந்துக்கொள்ள முடியும்.
சந்தையில் கிடைக்கின்ற கண்ணாடிகள் நம்முடைய முகத்தின் தோற்றத்தையும் எழிலையும் உள்ளது உள்ளபடி வெளிப்படுத்துகின்றன.
ஆனால், ஒருவரின் இயலாமை, நிர்க்கதியான நிலைமை ஆகியவற்றின் வடிவில் தோன்றுகின்ற இந்தக் கண்ணாடிகளோ நம்முடைய அகத்தின் அழகை வெளிப்படுத்துபவையாய் இருக்கின்றன. நம்முடைய ‘அகம்’ எப்படி இருக்கின்றது? நம்முடைய ‘இதயத்தின்’ நிலைமை எப்படி இருக்கின்றது என்பவற்றையெல்லாம் இந்த 'அகக் கண்ணாடிகள்’ வெளிப்படுத்தி விடுகின்றன.
செல்வச் செழிப்பும் பொருள் வளமும் நிரம்பப் பெற்றவர்கள் எல்லாவகையான அருள்வளங்கள் கொட்டிக் கொடுக்கப்பட்டிருந்தாலும்கூட எந்தவொரு மனிதரின் தேவையை நிறைவேற்றுவதற்கும் முன் வராதவர்களாய் இறுகிப் போன இதயங்களுடன் இந்த உலகில் நடமாடுவதையும் நாம் அன்றாடம் பார்க்கத்தானே செய்கின்றோம்.
இவர்களுக்கு நேர்மாறாக வாழ்க்கை வசதியிலும் செல்வ வளத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையிலும் தமக்கு முன்னால் தேவையுள்ளவர்கள் எவரேனும் வருகின்ற போது அவர்களுக்கு உதவுவதற்காகத் தம்மால் இயன்ற அளவுக்கு முயல்கின்ற, அவ்வாறு உதவி செய்ய இயலாத போது தேவையுள்ளவர்களின் சிரமங்களைப் பார்த்து ஏதோ தமக்கே அந்தச் சிரமங்கள் ஏற்பட்டுவிட்டதைப் போன்று வருந்துகின்ற மனிதர்களையும் பார்க்கத்தானே செய்கின்றோம்.
எந்த மனிதர்களிடம் இந்த இரக்க உணர்வும் பிறரின் துன்பங்களைப் பார்த்து துயருறுகின்ற இளகிய மனதும் இல்லையோ அவர்களின் வாழ்வில் மிகப்பெரும் குறை ஏற்பட்டுவிடுகின்றது. இதன் காரணமாக அவர்கள் என்னதான் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் உயர, உயர மேலோங்கிக்கொண்டே போனாலும் உண்மையான மேன்மையை அவர்களால் எய்தவே முடிவதில்லை.
அவர்களிடம் பணமும் பொருளும் என்னதான் கொட்டிக் கிடந்தாலும் அவர்களால் தம்முடைய ஆளுமையில் விழுந்துவிட்டுள்ள இந்த ஓட்டையை வேறு எதனைக் கொண்டும் அடைக்க முடியாது.
ஒருவரிடம் மனிதநேயமும், இரக்க உணர்வும், பிறரின் சிரமங்களைக் கண்டு துயருறுகின்ற இளகிய மனதும் இருக்கின்றனவெனில் அவற்றின் தாக்கங்கள் அவருடைய குடும்ப வாழ்விலும் வெளிப்படும். அவர் தம்முடைய குடும்பத்தாரிடம் மிக மிகப் பரிவோடு நடப்பவராக இருப்பார். எந்தத் தந்தையின் முகத்தைப் பார்ப்பதற்கும் மகன் குலைநடுங்கி வெடவெடத்துப் போகின்றானோ அந்தத் தந்தையைப் போன்று அவர் எந்தக்காலத்திலும் நடக்க மாட்டார்.
பெரிய மனம் படைத்த சான்றோர்களுக்கு அடையாளம் என்னவெனில் அவர்கள் சிந்தனைக்கும் மூளைக்கும் விருந்தளிப்பதோடு நின்றுவிட மாட்டார்கள். அதற்கும் மேலாக இதயத்திற்கு மருந்தையும் உணவையும் ஊட்டுவதற்கே முன்னுரிமை கொடுப்பார்கள். அவர்கள் அனாதைகளின் காயப்பட்ட உள்ளங்களுக்கு இதமான ஒத்தடமாக இருப்பார்கள்.
வாழ்வில் நொடிந்துபோய் எல்லாவற்றையும பறி கொடுத்து பரிதவித்து நிற்கின்ற மக்களுக்கு ஆறுதல் அளிப்பவர்களும் அவர்கள்தாம்.
இறைவன் எவருக்கெல்லாம் வசதி வாய்ப்பையும் அருள்வளங்களையும் அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கின்றானோ அவர்கள் உண்மையில் மிகப் பெரும் சோதனையில் ஆழ்த்தப்படுகின்றார்கள். பொதுவாக இந்தச் சோதனையில் தோற்றுப் போகின்றவர்கள்தாம் அதிகம்.
இத்தகைய மனிதர்கள் உதவுவதற்குப் பதிலாக அக்கிரமிழைப்பதிலும் வரம்புகளை மீறி கொடுமை புரிவதிலும் இறங்கிவிடுகின்றார்கள். கொடுமை இழைப்பதில் இறங்குகின்ற மனிதர்கள் மற்றவர்கள் மீது கொடுமை இழைப்பதற்கு முன்பு தமக்குத்தாமே கொடுமை இழைத்துக்கொள்கின்றார்கள் என்கிற உண்மையை உணர்வதே இல்லை.
- மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2025, 6:20 pm
அன்னை தெரசா பல்கலைக் கழகமும் எம் ஜி ஆரும்
August 15, 2025, 8:57 am
உண்மையான அடியார்கள் யார் எனில்..! - வெள்ளிச் சிந்தனை
August 8, 2025, 8:18 am
நண்பர்களை எதிரிகளாக்கும் அபார ஆற்றல் பெற்றது புறம் - வெள்ளிச் சிந்தனை
August 6, 2025, 11:13 pm
ஐயா.செ.சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்டம்
July 25, 2025, 9:32 am
ஹலால்- ஹராம் - வெள்ளிச் சிந்தனை
July 18, 2025, 12:18 pm
கவிக்கோ அப்துல் ரஹ்மான் கவிதைகள் காட்டும் மனித விழுமியங்கள்: டாக்டர் கிருஷ்ணன் மணியம்
June 29, 2025, 11:24 am