
செய்திகள் சிந்தனைகள்
நன்றி எனும் நற்பண்பு - வெள்ளிச் சிந்தனை
“நன்றியை மறந்தால் மன்னிக்கமாட்டேன்
பார்வையில் நெருப்பாவேன்” என்று பாடினார் கவியரசர்.
மனிதர்கள் ஒருவருக்கொருவர் நன்றி மறப்பேதே பெரிய பாவம் எனில்,
இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாவிட்டால் அது எவ்வளவு பெரிய பாவம்?
இறைவனுக்கு நன்றி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இலங்கைப் பேரறிஞர் அகார் முஹம்மத் அவர்கள் பின்வருமாறு அழகாகக் கூறுகிறார்.
ஒரு மனிதர் இருந்தார். அவர் கண்பார்வையை இழந்தவர்; கை,கால் இரண்டும் ஊனமுற்றவர்.
இந்த நிலையிலிருந்த அவர் உணர்வுபூர்வமாக ’அல்ஹம்துலில்லாஹ்’ எனக் கூறி இறைவனைப் புகழ்ந்துகொண்டிருந்தார்.
இதனைப் பார்த்த மற்றொருவர், ‘என்ன இது? உமக்கோ கண் பார்வையில்லை; கைகள் இல்லை; கால்களும் இல்லை. நீர் முடமாகக் கிடக்கின்றீர். ’அல்ஹம்துலில்லாஹ்’ என்று சொல்லி அவனைப் புகழ உம்மிடம் என்னதான் இருக்கின்றது‘ எனக்கேட்டார்.
அதற்கு அந்த மனிதரோ, ‘என்னிடம் என்ன இருக்கின்றதா?!
அவனுக்கு நன்றி சொல்ல எனக்கு ஒரு நா இருக்கின்றது;
அவனை அஞ்சிப் பயப்பட ஓர் இதயம் இருக்கின்றது;
சோதனைகளுக்கு முன்னால் பொறுமை காக்க ஓர் உடல் இருக்கின்றது.
இவற்றுக்காக அவனுக்கு நான் நன்றி சொல்லாமல் இருக்க முடியுமா‘ எனக் கூறினார்.
இந்த மனிதரே இறைவனைப் புகழ்கின்றார்; அவனுக்கு நன்றி பாராட்டுகின்றார் என்றிருந்தால் நானும் நீங்களும் எந்தளவு அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
முன், பின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்ட நபியவர்கள் (ஸல்) இரவெல்லாம் கால் வீங்கும் அளவுக்கு நின்று வணங்குவார் என்றால் எதற்காக?
இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
‘நான் அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள ஓர் அடியானாக இருக்க வேண்டாமா?’ என்பார் நபியவர்கள்.
இறைவனின் அருள்களையும் அருட்கொடைகளையும் மேலும் மேலும் நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்புகின்றீர்களா?
அதற்கான சிறந்த வழி இறைவனுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்துவதுதான்.
இறைவன் சொல்கின்றான்: ‘நீங்கள் (எனக்கு வழிபடுவதன் மூலம்) எனக்கு நன்றி செலுத்தினால் நான் எனது அருட்கொடைகளை மேலும் உங்களுக்கு அதிகரித்துத் தருவேன்‘. (குர்ஆன் 14:7)
இறைவன் தனது அடியார்கள் தனக்கு நன்றி பாராட்டுபவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றான்.‘
ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூருங்கள்; நானும் உங்களை நினைவு கூர்வேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.‘
இறைவன் நபி முஹம்மத் (ஸல்) அவர்களை விளித்துச் சொல்கின்றான்:
‘மேலும் நீர் நன்றி செலுத்துபவர்களில் ஒருவராக இருப்பீராக.‘
இதே விஷயத்தை நபி மூஸாவைப் பார்த்தும் சொல்லுகின்றான். நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இதே கட்டளையைப் பிறப்பிக்கின்றான்:
‘நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.‘
இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கான முறைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
முதலாவதாக அல்லாஹ் நம்மீது சொரிந்துள்ள அருட்கொடைகளை உள்ளத்தால் ஏற்க வேண்டும்.
அவற்றைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும். அவற்றுக்காக இறைவனை வாய் விட்டுப் புகழ வேண்டும்.
அவன் அருளிய அருட்கொடைகளை அவனுக்கு வழிபடும் விஷயங்களில் பயன்படுத்த வேண்டும். இவை இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கான வழிகள்.
அதிகாலையில் கண்விழித்தவுடன் தூக்கத்தின் மூலம் நம்மை மரணிக்கச் செய்து மீண்டும் விழிக்கச் செய்து நமக்கு உயிரளித்த இறைவனைப் புகழ்ந்து நன்றி சொல்கின்றோம்.
தொழுகை உட்பட நாம் நிறைவேற்றும் வணக்க வழிபாடுகள் எல்லாம் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் அமைந்தவைதான்.
இறைவனுக்கு நன்றி செலுத்துபவர் பெறும் நன்மைகள் பல.
ஆரம்பமாக நன்றி செலுத்துவது நம்பிக்கையாளர்களின் அடிப்படையான ஒரு பண்பு.
அது இறைவனுடைய திருப்தியைப் பெறுதற்கான சிறந்த வழி.
அவனது அருட்கொடைகளை மேலும் மேலும் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழியும் கூட.
ஈருலகிலும் இறைவனின் தண்டனைகளிலிருந்து தப்பிக் கொள்ளவும் மறுமையில் நிறைவான நற்கூலியைப் பெற்றுக் கொள்ளவும் அவனுக்கு நன்றி செலுத்தி வாழ்வது உதவும்.
நன்றியுள்ள நல்லடியார்களாக வாழ்வோம்; நலம் பெறுவோம்!
“நீங்கள் செய்வது அனைத்தையும் இறைவன் பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள்.”
(குர்ஆன்2:233)
- சிராஜுல்ஹஸன்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2025, 6:07 am
அந்தரத்தில் தொங்கவிடலாமா? - பெருநாள் சிந்தனை
March 28, 2025, 6:02 am
இதய வாசலில் நுழைகிற திறனும் தேர்ச்சியும் கைவசம் இருக்கின்றதா? - வெள்ளிச் சிந்தனை
March 22, 2025, 5:09 pm
உலக தண்ணீர் தினம்: மலேசியா எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்சினை
March 14, 2025, 6:11 am
விளிம்பு நிலை மக்களுக்கு உதவுங்கள் - வெள்ளிச் சிந்தனை
March 7, 2025, 6:09 am
அருள் கொழிக்கும் ரமலான்: பிரார்த்தனைகளின் வசந்தகாலம்
February 28, 2025, 10:07 am
மெழுகுவர்த்தி தரும் செய்தி - வெள்ளிச் சிந்தனை
February 21, 2025, 8:28 am
நீரென்ன குழப்பவாதியா? - வெள்ளிச் சிந்தனை
February 18, 2025, 4:33 pm
சிலர், பலராய் ஆகின்ற நாள் வரவே வேண்டும்; வேண்டும் - பாதாசன்
February 14, 2025, 9:21 am