நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

மழலைகள் மீது குண்டு மழை பொழியும் மாபாதகர்களே, உங்ளுக்கு சமர்ப்பணம்! - வெள்ளிச் சிந்தனை

01▪︎பச்சிளம் குழந்தைகளை
ஒருபோதும் கொலை செய்யாதீர்கள்!

'இறைவனுக்கு இணையாக எதையும் கருதுவதில்லை. திருடுவதில்லை. விபச்சாரம் செய்வதில்லை. உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை. நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் யார் மீதும் அவதூறு கூறுவதில்லை. எந்த நல்ல காரியத்திலும் எனக்கு மாறு செய்வதில்லை!' 
என்று என்னிடம் பைஅத் - ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், அவற்றை நிறைவேற்றுபவரது நற்கூலி இறைவனிடம் உள்ளது.[ஸஹீஹ் புகாரி 18] 

02▪︎குழந்தைகள்உங்களை 
நரகிலிருந்து பாதுகாக்கும் கேடயங்கள்!

'நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு தங்களிடம் எப்போதும் ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார்கள். எனவே, தாங்களா கவே எங்களுக்கென்று ஒருநாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். 

அவர்களும் அப்பெண்களுக்கென ஒருநாளை வாக்க ளித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். மார்க்கக் கட்டளைகளை ஏவினார்கள். 

அவர்கள் தங்களது அறிவுரையில், 'உங்களில் ஒரு பெண், தனது குழந்தைகளில் மூவரை மரணத்தின் மூலம் இழந்துவிட்டாள் என்றால், அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்!' என்று கூறினார்கள். 

அப்போது ஒருபெண், 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?' என்று கேட்டதற்கு, நபியவர்கள், 'இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும்தான்' என்று கூறினார்கள். [ஸஹீஹ் புகாரி :101] 

03▪︎குழந்தைகள் மீது இரக்கம் 
காட்டியவர்களுக்கு சுவனம் நிச்சயம்!

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று குழந்தைகள் மரணித்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத் தால் அவரை அல்லாஹ் சுவனத்தில் நுழையச் செய்வான்.' [ஸஹீஹ் புகாரி : 1248] 

04▪︎ஸாலிஹான - நல்லகுழந்தைகள் பிறக்க நாயனிடம் இப்படி பிரார்த்தனை புரியுங்கள்!

'உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளச் செல்லும்போது, 'இறைவனின் திருப்பெயரால் உடலுறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு! இந்த உறவு மூலம் நீ எங்களுக்கு அளிக்கப் போகும் குழந்தைப் பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து' 

என்று சொல்லிவிட்டு உறவுகொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால், அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.[ஸஹீஹ் புகாரி :141] 

05▪︎குழந்தைகளின் சிறுநீர் 
பெரியதொரு அசுத்தமல்ல!

'தாய்ப் பாலைத் தவிர வேறு உணவு சாப்பிடாத எனது சிறிய ஆண் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபியவர்கள் அக்குழந்தையைத் தங்களது மடியில் உட்கார வைத்தபோது, அக்குழந்தை நபியவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டு வரச் செய்து சிறுநீர் பட்ட இடத்தில் தெளிக்க மட்டும் செய்தார்கள். அதைக் கழுவவில்லை!' என உம்மு கைஸ் (ரளி) அறிவித்தார். [ஸஹீஹ் புகாரி : 223] 

06▪︎தொழுகையில் நபி (ஸல்)
தோளின்மீது ஏறி விளையாடிய பேரக் குழந்தை!

அபூகதாதா அல் அன்ஸாரி (ரளி) அறிவித்தார் : நபி (ஸல்) அவர்கள் தங்களது மகள் ஸைனபின் குழந்தை 'உமாமா' வைத் தோளில் சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இறக்கிவிடுவார்கள். நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள். [ஸஹீஹ் புகாரி : 516] 

07▪︎குழந்தைகளின்அழுகைக்காக 
தொழுகையைச் சுருக்கிக் கொண்ட நபி (ஸல்)!

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். எனக்குப் பின்னால் தொழுது கொண்டி ருக்கும் அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்'. என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
[ஸஹீஹ் புகாரி : 707] 

அனஸ் இப்னு மாலிக்(ரளி) அறிவித்தார் : நபி (ஸல்) அவர்களை விட தொழுகையைச் சுருக்கமாகவும் அதே சமயம் முழுமையாகவும் தொழுகை நடத்தக் கூடிய வேறு எந்த இமாமின் பின்னாலும் நான் தொழுதது கிடையாது. 

ஒரு குழந்தையின் அழுகுரலை அவர்கள் கேட்க நேர்ந்தால், அக்குழந்தையின் தாயாருக்குச் சஞ்சலம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தொழுகையைச் சுருக்கமாகவே முடித்துக் கொள்வார்கள். 
[ஸஹீஹ் புகாரி : 708] 

08▪︎குழந்தைகளின் பசித் துயர் நீக்க 
பிரார்த்தனை செய்த பெருமான் நபியவர்கள்!

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். நபி (ஸல்) அவர் களது காலத்தில் ஒருமுறை மக்களைப் பஞ்சம் வாட்டியது. ஜும்ஆ நாளில் நபியவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டி ருந்தபோது ஒரு கிராமவாசி எழுந்து, 

'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. குழந்தை குட்டிகள் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்!' என்று கூறினார். 
நபியவர்கள் தங்களது இரண்டு கைகளையும் உயர்த்தி னார்கள். அந்த நேரத்தில் வானத்தில் எந்த மழை மேகத்தையும் நாங்கள் பார்க்கவில்லை. எனது உயிர்  கைவசனம் உள்ள அந்த இறைவன் மேல் ஆணையாக நபியவர்கள் தமது கைகளைக் கீழே இறக்கும் முன்பாக மலைகளைப் போல் மேகங்கள் திரண்டு வந்தன. 

நபியவர்கள் மிம்பரிலிருந்து இறங்குவதற்குள்ளாக மழை கொட்டி அவர்களது தாடியிலிருந்து வழிந்ததை நான் பார்த்தேன். அன்றைய தினமும் அதற்கடுத்த நாளும் அதற்குமடுத்த நாளும் அதற்கு மறு ஜும்ஆ வரையிலும் எங்களுக்கு மழை பொழிந்தது. 

மறு ஜும்ஆவில் அதே கிராமவாசி அல்லது வேறொருவர் எழுந்து 'இறைத்தூதர் அவர்களே! கட்டிடங்கள் இடிந்து விழுகின்றன. செல்வங்கள் மூழ்குகின்றன. எனவே எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!' என்றார். 

நபியவர்கள் தங்களது கைகளை உயர்த்தி 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களை நோக்கி இதை திருப்பு வாயாக! எங்களுக்குக் கேடு தருவதாக இம்மழையை ஆக்கிவிடாதே!' என்று கூறினார்கள். 

மேகம் உள்ள பகுதியை நோக்கி நபியவர்கள் சைகை செய்த போதெல்லாம் அம்மேகம் விலகிச் சென்றது. மதீனா நகர் பெரும் பள்ளமாக மாறியது. இம்மழையால் 'கனாத்' எனும் ஓடை ஒருமாதம் ஓடியது. பல்வேறு பகுதிகளிலிருந்து வருபவர்களும் இம்மழையைப் பற்றிப் பேசாமலிருந்ததில்லை. [ஸஹீஹ் புகாரி : 93] 

09▪︎பேரக் குழந்தை மரணச் செய்தி கேட்டு மனம்விட்டு அழுத கருணை நபி (ஸல்)!

உஸாமா இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார். தனது மகன் மரணத் தருவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி (ஸல்) அவர்களது மகள் ஸைனப் (ரளி) நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். 

நபியவர்கள், தமதூ மகளுக்கு ஸலாம் கூறி அனுப்பிய தோடு, 'எடுத்ததும் கொடுத்ததும் இறைவனுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!' என்றும் கூறி அனுப்பினார்கள். 

அப்போது அவர்களது மகள் இறைவன் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபியவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஃத் இப்னு உபாதா, முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஃபு, ஸைத் இப்னு ஸாபித் (ரளி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர். 

அங்கு சென்ற நபியவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள். இற்றுப்போன பழைய தோல் துருத்தி போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபிவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. 

'இறைத்தூதர் அவர்களே! என்ன இது? அழுகிறீர்கள்!' என ஸஃத் (ரளி) கேட்டதற்கு நபியவர்கள், 'இது இறைவன் தனது அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வு. உறுதியாக இறைவன் தனது அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்!' என்றார்கள். [ஸஹீஹ் புகாரி : 1284] 

10▪︎ ஒரு குழந்தை மரணத்துக்காக பொறுமை காத்த பெண்மணிக்கு ஒன்பது ஹாஃபிழ் குழந்தைகள் பரிசு!

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : அபூதல்ஹாவின் (ரளி) மகன் நோயுற்றிருந்தார். ஒருநாள் அபூதல்ஹா  வெளியே சென்றிருந்தபோது குழந்தை இறந்துவிட்டது. இதைக் கண்ட அபூதல்ஹாவின் மனைவி உடனே கொஞ்சம் உணவைத் தயார் செய்தார். பிறகு மய்யித்தை வீட்டின் ஒரு மூலையில் வைத்தார். 

வெளியே சென்றிருந்த அபூதல்ஹா வீடு திரும்பிய உடன் மகன் எவ்வாறுள்ளான்? எனக் கேட்டார் அதற்கு அவரது மனைவி, 'அமைதியாகிவிட்டான். நிம்மதி - ஓய்வு பெற்று விட்டிருப்பான் என்பதே எனது எதிர்பார்ப்பு' என பதில ளித்தார். அபூதல்ஹா தமது மனைவி கூறியது உண்மை தான் என்றெண்ணி நிம்மதியுடன் தமது மனைவியோடு இரவைக் கழித்தார். 

பொழுது விடிந்து குளித்துவிட்டுத் தொழுகைக்காக வெளியே செல்ல நாடியபோது மகன் இறந்துவிட்டதை மனைவி கூறினார். அபூதல்ஹா நபி (ஸல்) அவர்களோடு தொழுதுவிட்டுத் தமது வீட்டில் நடந்த சம்பவத்தை அவர்களிடம் கூறினார். அதற்கு நபியவர்கள் 'இந்த இரவு நடந்தவற்றில் இறைவன் உங்கள் இருவருக்கும் பறக்கத் - நற்பேறு வழங்கலாம்' என்றார்கள். 

'இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை நான் கண்டேன். அவர்கள் அனைவரும் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர் என மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார். 
[ஸஹீஹ் புகாரி :1301] 

[குறிப்பு : ஃபலஸ்தீனத்தில் இப்றாஹீம் என்ற தனது குழந்தையைப் பறிகொடுத்தும் பொறுமை காத்த ஒரு வீரத் தாயின் வாக்குமூல காணொலி நினைவுக்கு வருகிறது!]

தொகுப்பு : கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

தொடர்புடைய செய்திகள்

+ - reset