
செய்திகள் தமிழ் தொடர்புகள்
டெங்கு குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை:
டெங்கு குறித்து பெரிய அளவில் அச்சம் கொள்ள தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தாழ்வானபகுதிகள், தெருக்கள், சாலைகளில் மழைநீர் தேங்குவதால், சுத்தமான தண்ணீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது.
இதனால், சென்னைஉட்பட பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்குவின் தீவிரத்தால் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. தமிழகம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணியை சிறப்பாக செய்து, இறப்பு இல்லாத நிலையை ஏற்படுத்துவதற்காக தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையிலான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் சமீபத்தில் நடந்தது.
அதன் தொடர்ச்சியாக மாநிலஅளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான கலந்தாய்வு கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டெங்கு, மலேரியா போன்ற நோய் பாதிப்புகள் பருவமழைக்கு முன்பு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அதிகரிப்பது என்பது இயல்பானது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4048 பேர் ஆகும். இதுவரை 3 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், டெங்குவால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. டெங்கு பாதிப்பு அதிகரிக்கக் கூடாது என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் வலியுறுத்தியுள்ளார் என்று அவர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 8:36 am
கொடைக்கானலில் கோடைவிழா: மலர்க் கண்காட்சிக்குத் தயாராகி வருகிறது பிரையன்ட் பூங்கா
May 3, 2025, 7:24 pm
தமிழகம் முழுவதும் மே 5-ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை: வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு
May 1, 2025, 7:39 pm