
செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பவள விழா: தமிழக முதவர் ஸ்டாலின் இன்று பங்கேற்பு
சென்னை:
இந்திய முஸ்லிம் லீக்கின் 75 ஆண்டு கால பவள விழா அகில இந்திய மாநாடு சென்னையில் இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது. இறுதி நாளான வெள்ளிக்கிழமை மாலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.
ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இதற்காக பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரம் முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
தேசப் பிரிவினையின்போது முஸ்லிம் லீக்கும் இரண்டாகப் பிரிந்தது. இந்தியாவின் உயிரோடும் உணர்வோடும் கலந்த முஸ்லிம்கள் 1948 மார்ச் 10 அன்று, சென்னை ராஜாஜி ஹாலில் காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமையில் கூடி இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ என்ற பெயரில் செயல்படுவது என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு முடிவை எடுத்தனர்.
அன்று முதலாக தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பண்பாட்டு தனித்தன்மையைப் பாதுகாத்தல், நலிந்த மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தல் ஆகியவற்றையே பணியாகக் கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தன் பயணத்தைத் தொடர்கிறது.
சுதந்திர இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டில் முஸ்லிம் லீக்கின் பங்களிப்பு அளப்பரியது. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் சாகிப், கே.டி.எம்.அஹமது இப்ராஹிம், போக்கர் சாகிப், மகபூப் அலி பேக் உள்ளிட்ட முஸ்லிம் லீக் தலைவர்கள் இடம்பெற்று இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக துணை நின்றனர். சுதந்திர இந்தியாவின் முதல் நாடாளுமன்ற அவையிலிருந்து தொடர்ந்து அங்கம் வகிக்கும் வாய்ப்பை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெற்றுவருகிறது.
பவள விழாவின் மூன்று நாள் மாநாட்டில் முதல் நாள் நிகழ்ச்சியாக புதன்கிழமை அன்று அகில இந்திய கே.எம்.சி.சி. சார்பில் 75 ஜோடிகளுக்கு, கூட்டுத் திருமண நிகழ்ச்சி நடைபெற்று முடிந்துள்ளது.
தேசிய தலைவர் கே.எம். காதர் மொய்தீன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக பிரதிநிதிகள் மாநாடு - சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
"மதச்சார்பற்ற இந்தியாவை நிலைநிறுத்திட அரசியல் கட்சிகளின் பங்களிப்பு" எனும் தலைப்பில் பிரதிநிதிகள் பொது அமர்வு நடைபெற்றது.
கேரள முன்னாள் அமைச்சர் குட்டி அகமது குட்டி நிகழ்ச்சி அறிமுக உரையாற்ற, வரலாற்று ஆய்வாளர்களான சேயன் இப்ராஹிம், பி.ஏ. ரஷீது ஆகியோர் - வெளியிடப்பட்ட நூல்கள் குறித்து அறிமுக உரையாற்றினர்.
இவ்விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றையும், இஸ்லாம் மார்க்கம் குறித்தும் 12 தலைப்புகளில் தமிழ், மலையாளம், உர்தூ, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நூல்கள் வெளியிடப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மலப்புரம் மாவட்ட தலைவர் செய்யித் அப்பாஸ் அலி ஷிஹாப் தங்ஙள் நூல்களை வெளியிட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 8:36 am
கொடைக்கானலில் கோடைவிழா: மலர்க் கண்காட்சிக்குத் தயாராகி வருகிறது பிரையன்ட் பூங்கா
May 3, 2025, 7:24 pm