நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் சிங்களர்கள் அஞ்சலி

கொழும்பு:

இலங்கை முள்ளிவாய்க்கால் 13ஆவது நினைவு தினத்தையொட்டி, போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு முதல் முறையாக சிங்களர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இணைத்து தமிழர்களுக்காக தமிழ் ஈழம் அமைக்க வலியுறுத்தி, அந்நாட்டு ராணுவத்தினருக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையே 40 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வந்தது.

கடந்த 2009ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிக்கட்ட போர் நடைபெற்றது.

அந்த ஆண்டு மே 18ஆம் தேதி தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டார்.

இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் கொன்று குவித்தனர்..

தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டு வரும் சூழலில், அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட போரின்போது அந்நாட்டு பாதுகாப்புச் செயலராக இருந்த இலங்கையின் தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகக் கோரி, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் 13ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கொழும்பில் அதிபர் கோத்தபய ராஜபட்சவின் அலுவலகத்துக்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், போரில் உயிரிழந்த தமிழர்கள், தமிழ் கிளர்ச்சியாளர்கள், ராணுவத்தினர் மற்றும் போரின்போது காணாமல் போனவர்களுக்கு முதல் முறையாக கொழும்புவில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலி நிகழ்வில் பௌத்த துறவிகள், ஹிந்து அர்ச்சகர்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள் பங்குபெற்றனர்.

இதுகுறித்து இலங்கை வடக்கு மாகாண தமிழ் எம்.பி. தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறுகையில், "போரில் உயிரிழந்த தமிழர்கள் முதல் முறையாக கொழும்பில் பகிரங்கமாக பொதுவெளியில் நினைவுகூரப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்தார்.

போர் முடிவுக்கு வந்த தினத்தை வெற்றி தினமாக ராணுவம் கொண்டாடியது.

இதனிடையே, இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்ச புதன்கிழமை பங்கேற்றார். அவரது மகனும் எம்.பி.யுமான நமல் ராஜபட்சவும் கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset