செய்திகள் தமிழ் தொடர்புகள்
தவெக ஆட்சியில் 10 மணி நேரம் சட்டப்பேரவை நடைபெறுகிறது என்று பெருமையாகச் சொல்கிறார்கள்; ஆனால் 3 மணி நேரம் தான் அவை நடைபெறுகிறது: எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
சென்னை:
“ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி பிரச்சினையில் சட்டப்பேரவை நேரம் வீணடிக்கப்படுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியது:
“தமிழக சட்டப்பேரவையில் தினந்தோறும் ஏதேனும் பிரச்சினை ஏற்படுகிறது. நிதிநிலை அறிக்கை, விவாதத்திலும் பிரச்சினை. மானியக் கோரிக்கையிலும் பிரச்சினை. அதனால் மக்கள் பிரச்சினைகளை அவையில் முழுமையாகப் பேச முடியவில்லை.
இன்றைக்கும், சட்டப்பேரவையில் கேள்வி நேரம் ஆரம்பித்ததும் திமுகவினர் பேச முற்படும்போது பிரச்சினை ஏற்பட்டது. வழக்கமாகவே திமுகவினர் பேசும்போது அமைச்சர்களோ, ஆளும் கட்சி எம்எல்ஏக்களோ ஏதாவது ஒரு பிரச்சினையை, குற்றச்சாட்டை எதிர்க்கட்சி மீது சுமத்துகிறார்கள்.
பிறகு எதிர்க்கட்சித் தரப்பில் பதில், அதற்கு ஆளுங்கட்சியினர் விளக்கம், மீண்டும் எதிர்க்கட்சி பதில் என்று மாறி மாறி இருதரப்பினரும் பதில் சொல்லி அவை நேரம் வீணடிக்கப்படுகிறது. இன்றைக்கும் சுமார் 1 மணி நேரம் வீணானது.
பின்னர் சபாநாயகர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அவை நடந்தாலும், மீண்டும் ஆளும் கட்சியினர் திமுக ஆட்சி மீது குற்றம் சாட்டுகின்றனர்.
இதில், தவெக ஆட்சியில் 10 மணி நேரம் சட்டப்பேரவை நடைபெறுகிறது என்று பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால் 3 மணி நேரம் தான் அவை நடைபெறுகிறது. மீதி 7 மணி நேரம் ஆளும், எதிர்க்கட்சியின் பிரச்சினையால் சட்டப்பேரவை நேரம் வீணடிக்கப்படுகிறது.
மற்ற உறுப்பினர்களால் கேள்வி கேட்கவே முடியவில்லை. கேள்வி கேட்டாலும் பதில் இல்லை. அதேபோல் எல்லா கேள்விகளுக்கும் பெரும்பாலும் 3 அமைச்சர்கள் தான் பதில் சொல்கிறார்கள். அதனால் எந்தப் பயனும் இல்லை. அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் சொல்வதே தீர்வுக்கான வழி. இதுதான் கடந்தகால வரலாறு. ஆனால் தவெக ஆட்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு உரிய அமைச்சர்களின் பதில் இல்லை.
உதாரணத்துக்கு, தமிழ்நாடு காவல் துறை, தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் நான் கலந்து கொண்டு எனது கருத்துகளை பதிவு செய்தேன். ஆனால், என் கேள்விகளுக்கு முதல்வரிடம் இருந்து பதிலில்லை.
முதல்வர் பதிலுரையில் மேலோட்டமாகப் பேசுகிறார். ஒரே ஒரு பதில் காவல் துறை காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதே வந்தது. அதுவும்கூட எப்போது என்ற தகவல் இல்லை.
அதேபோல் இணையவழிக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. FQL ஆன்லைன் மோசடி மூலம் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் பணத்தை இழந்துள்ளனர். ரூ.1,000 கோடி அளவில் ஏழை மக்கள் பணம் நவீன முறையில் மோசடி செய்யப்பட்டுள்ளது. அது மிக முக்கியமான பிரச்சினை. அதற்கும் பதில் இல்லை.
சாலை விபத்துகளை தடுக்கும் நடவடிக்கைகள் பற்றி எதுவுமே சொல்லவில்லை. நீண்ட நாட்களாக பணியில் உள்ள காவலர்களின் பதவி உயர்வு குறித்தும் எந்தப் பதிலும் இல்லை. காவலர்களின் அடிப்படைச் சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.27 ஆயிரமாக உயர்த்துவது உட்பட எனது எந்தவித கோரிக்கைக்கும் பதில் இல்லை.
தமிழகத்தில் பொருளாதாரக் குற்றங்கள் அதிகரித்துள்ளது. சீட்டு மோசடி அதிகரித்துள்ளது. அது எதிர்காலத்தில் நடக்கக் கூடாது என்று பேசினேன். அதற்கும் பதில் இல்லை.
இதையெல்லாம் விட்டுவிட்டு 45 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை எடுத்துப் பேசி அவையில் கலாட்டா நடைபெறுகிறது. இதைப் பேசிப் பேசி சோர்ந்துவிட்டோம். அப்படிப்பட்ட பேச்சுகளால் அவையின் நேரத்தை வீணடிக்கிறார்கள். சட்டப்பேரவையில் எங்கள் கேள்விகளுக்கு பதில் இல்லாமல், எப்போதும் ஆளுங்கட்சிக்கு - எதிர்க்கட்சிக்கு இடையேயான பிரச்சினையே நடக்கிறது.
முதல்வர் பதிலுரையில் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் சீண்டல்கள், போதைக் குற்றங்கள் உள்ளிட்டவை நீண்ட காலமாகவே நடக்கின்றன. திடீரென்று நிறுத்த முடியாது என்கிறார். குற்றங்களை தடுக்கும் இடத்தில் இருப்பவர், காவல் துறையை கையில் வைத்திருப்பவர் இப்படி பதில் சொல்லக் கூடாது.
தவெக அரசு செயலிழந்த அரசாங்கமாகவே இருக்கிறது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் சீண்டல்கள், போதைக் குற்றங்கள் இந்த ஆட்சியில் பலமடங்கு அதிகரித்துள்ளது. பட்டப்பகலில் நடக்கும் கொலை பதைபதைக்க வைப்பதாக தவெகவுக்கு ஆதரவளித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சியே விமர்சித்துள்ளது” என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 7, 2026, 10:06 pm
இனிமேல் பெண்களப் பற்றி அசிங்கமாகப் பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்: பேரவையில் முதல்வர் விஜய் எச்சரிக்கை
September 5, 2026, 10:07 pm
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை நிலையம்
September 3, 2026, 3:14 pm
சென்னை விமான நிலையத்தில் 1.20 கோடி ரூபாய் மதிப்புடைய 3.45 கிலோ கஞ்சா கடத்த முயற்சி: மலேசிய ஆடவர் கைது
September 3, 2026, 2:07 pm
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
September 2, 2026, 2:55 pm
மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாள்களாக உயா்த்தியது தமிழக அரசு
August 30, 2026, 9:40 pm
