செய்திகள் தமிழ் தொடர்புகள்
கபடியில் உயிரிழந்த மாணவர் சடலத்துடன் போராட்டம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலை கண்டித்து வாணியம்பாடியில் சாலை மறியல்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அருகே நேற்று நடைபெற்ற கபடி போட்டியில் கலந்துகொண்ட 12-ஆம் வகுப்பு மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெரிவித்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டும் வாணியம்பாடியில் உறவினர்கள், இளைஞர்கள் இன்று மாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் பகுதியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவர் முகேஷ். வளையாம்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வட்டார அளவில் பள்ளிகளுக்கிடையே நேற்று நடைப்பெற்ற கபடி போட்டியில் பங்கேற்றார்.
அப்போது எதிர்பாராவிதமாக மாணவர் முகேஷ் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாணவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கபடி போட்டி நடைப்பெற்ற விளையாட்டு மைதானத்தில், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை, விளையாட்டு வீரர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை, விளையாட்டு மைதானத்தில் உரிய மருத்துவ வசதிகள் இல்லை, மயங்கி விழுந்த மாணவர் முகேஷை காலதாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இதற்கிடையே தமிழக சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வாணியம்பாடி பள்ளி மாணவர் முகேஷ் உயிரிழந்த விவகாரம் குறித்து இன்று கேள்வி எழுப்பி பேசினார். அதற்கு பதில் அளித்த பொதுப் பணித் துறை, விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பொறுப்பற்ற முறையில் பதில் கூறியதாக உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
தொடர்ந்து அமைச்சர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைக் கண்டித்தும், உயிரிழந்த மாணவர் முகேஷ் சடலத்துடன் வாணியம்பாடி - திம்மாம்பேட்டை பிரதான சாலையில் உறவினர்கள், நண்பர்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் இன்று (செவ்வாய்கிழமை) மாலை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, முகேஷ் பல்வேறு கபடி போட்டிகளில் பங்கேற்று வெற்றிப்பெற்ற சான்றிதழ்கள், கோப்பைகளை நடுரோட்டில் வைத்து போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை கண்டித்தும், உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி இழப்பீடு கேட்டும், பாதுகாப்பற்ற முறையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் கூடுதல் எஸ்.பி. முத்துகுமார் தலைமையில், வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், போலீஸார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும், முகேஷ் குடும்பத்தாருக்கு அரசு வேலை வாங்கி தருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும், இழப்பீடு பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.
இதனை ஏற்றுக்கொண்ட முகேஷ் தரப்பினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் வாணியம்பாடி - திம்மாம்பேட்டை சாலையில் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2026, 9:40 pm
தமிழகத்தில் செப்.3 வரை அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி வரை உயரும்: சென்னை வானிலை நிலையம் அறிவிப்பு
August 26, 2026, 8:18 pm
அரசுப் பள்ளியின் காலை உணவில் பல்லி: உணவு சமைத்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
August 25, 2026, 10:02 pm
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் விமான நிலையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்
August 24, 2026, 4:12 pm
