செய்திகள் உலகம்
‘டிஜிட்டல் காலனித்துவத்தின்’ கருவியாக AI மாறும் அபாயம்: அன்வார் எச்சரிக்கை
டோக்கியோ:
உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், எதிர்காலத்தில் ‘டிஜிட்டல் காலனித்துவத்தின்’ புதிய ஆயுதமாக மாறக்கூடும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
AI தொழில்நுட்பம் உற்பத்தித் திறனைப் பலமடங்கு உயர்த்தவும், தொழில்துறையின் முகத்தையே மாற்றியமைக்கவும், வளர்ச்சிக்கான புதிய வாயில்களைத் திறக்கவும் வல்லமை கொண்டிருந்தாலும், அதன் பின்னணியில் மறைந்திருக்கும் அபாயங்களை அலட்சியப்படுத்த முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
AI வளர்ச்சி, உலக நாடுகளுக்கிடையிலான பொருளாதார, தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வுகளை மேலும் தீவிரப்படுத்துவதுடன், அதிகாரத்தை சில சக்திவாய்ந்த நிறுவனங்கள், தரப்பினரின் கைகளில் குவிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
“AI இந்தப் புதிய யுகத்தின் நம்பிக்கையையும் அபாயத்தையும் ஒருசேர பிரதிபலிக்கிறது. அது வளர்ச்சியின் கதவுகளைத் திறக்கக்கூடும். ஆனால் அதே நேரத்தில் சமத்துவமின்மையை அதிகரித்து, அதிகாரத்தை சிலரின் கைகளில் மட்டுமே குவிக்கக்கூடும்,” என்று அவர் கூறினார்.
டோக்கியோவில் நடைபெற்ற 31-ஆவது நிக்கெய் சர்வதேச மாநாட்டில் ‘மூலோபாய நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வது’ என்ற தலைப்பில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி, தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
AI தொழில்நுட்பத்தின் எதிர்காலம், அதன் வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தும் சில பன்னாட்டு நிறுவனங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படக் கூடாது என அன்வார் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலாக, வளரும் நாடுகளுக்கும் உலக மக்களின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும் விதிமுறைகள், நிர்வாகக் கட்டமைப்புகளை வடிவமைப்பதில் வலுவான பங்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.
“புதிய நவீனமயமாக்கல் என்ற பெயரிலோ, டிஜிட்டல் காலனித்துவம் என்ற பெயரிலோ வந்தாலும், தொழில்நுட்பத்தின் எந்த புதிய வடிவத்தையும் நாம் நிராகரிக்க வேண்டும்.
கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விதிமுறைகளை உருவாக்கும் மேசையில் வளரும் நாடுகளின் குரலும் ஒலிக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
AI ஏற்படுத்தும் சவால்கள், தொழில்நுட்ப பிரச்சினைகளை எந்த ஒரு நாடும் தனித்து சமாளிக்க முடியாது என்பதை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை, பல தரப்பினரின் நலன்களை ஒருங்கிணைக்கும் வலுவான அமைப்புகளே தொழில்நுட்ப முன்னேற்றம் அனைவருக்கும் பயனளிப்பதை உறுதி செய்யும் என அவர் கூறினார்.
இதற்காக, மலேசியாவும் ஜப்பானும் டிஜிட்டல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், உருவாக்கப்படும் புத்தாக்கங்கள் மக்களை மையமாகக் கொண்டதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
