செய்திகள் மலேசியா
அதிகாரத்தின் அராஜகம்: அந்தரங்க வீடியோக்களை வைத்து மிரட்டிய போலிஸ்காரர், சட்டம் தன் கடமையைச் செய்ததா?
புத்ராஜெயா:
நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு (எம்.சி.ஓ) அமலில் இருந்த காலத்தில், காதலியுடன் இருந்த தனிப்பட்ட வீடியோக்களை மத அதிகாரிகளிடம் வெளியிடுவதாக மிரட்டி, அப்பாவி இளைஞரிடம் பணம் பறித்த முன்னாள் போலிஸ் கோப்ரலுக்கு, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று முதல் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளது.
36 வயதான முஹம்மத் அமான் முஸ்தபா, தைப்பிங் உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 5, 2025 அன்று விதித்த தண்டனையை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த இறுதி மேல்முறையீடு, நீதிபதி டத்தோ அஸ்மான் அப்துல்லா தலைமையிலான மூவர் அமர்வால் ஒருமனதாக நிராகரிக்கப்பட்டது.
டத்தோ நூரின் படாருடின், டத்தோ முஹம்மத் ரட்ஸி அப்துல் ஹமீட் ஆகியோர் அடங்கிய அமர்வில், குற்றவாளியை உடனடியாக கைது செய்து தண்டனையை அமல்படுத்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மேல்முறையீட்டு தீர்ப்பு வெளியாகும் வரை அவருக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனை இடைநிறுத்தமும் இதன் மூலம் ரத்து செய்யப்பட்டது.
2020 ஜூன் 18ஆம் தேதி அதிகாலை, பேராக்கின் செலாமா போலிஸ் தலைமையகத்தில், தனது காதலியுடன் இருந்த நெருக்கமான காணொலிகளை வெளியிடுவதாகவும், மத அதிகாரிகளிடம் புகார் செய்வதாகவும் மிரட்டி, பாதிக்கப்பட்ட இளைஞரிடமிருந்து 300 ரிங்கிட் பணம் பறித்த குற்றம் அவர்மீது சுமத்தப்பட்டது.
இந்த வழக்கில், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 385-ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றம் முதலில் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருந்தது. பின்னர், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றம் அதனை ஐந்து ஆண்டுகளாக உயர்த்தியது.
இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி நூரின், “ஒரு போலிஸ் அதிகாரி மக்களைப் பாதுகாக்க வேண்டியவர். ஆனால், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி சாதாரண குடிமகனை அச்சுறுத்தி, பணம் பறித்திருப்பது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம்,” என்று கடுமையாக சாடினார்.
மேலும், குற்றவாளி சட்ட அனுமதி இன்றி பாதிக்கப்பட்டவரின் கைப்பேசியை பறிமுதல் செய்து, அதிலிருந்த தனிப்பட்ட வீடியோக்களை மிரட்டலுக்கான ஆயுதமாக பயன்படுத்தியதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
“300 ரிங்கிட்டை மட்டும் கேட்டு நிற்காமல், மொத்தம் 10,800 ரிங்கிட் வசூலிக்க திட்டமிட்டிருந்தது, இந்த மிரட்டல் எவ்வளவு திட்டமிட்ட, கொடூரமானது என்பதை காட்டுகிறது,” என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும், விசாரணை முழுவதும் குற்றவாளி தனது செயல்களுக்கு வருந்தாமல் காட்டாமல், பாதிக்கப்பட்டவரையே குற்றம்சாட்டியதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்த தீர்ப்பு, அதிகாரத்தின் பின்னால் மறைந்து பொதுமக்களை அச்சுறுத்த நினைப்போருக்கு கடும் எச்சரிக்கை மணி என சட்ட வட்டாரங்கள் கருதுகின்றன.
ஒரு போலிஸ் அதிகாரியின் சீரழிந்த செயல், முழு சட்ட அமலாக்க அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையையே குலைக்கிறது. அதிகார துஷ்பிரயோகத்திற்கு கடுமையான தண்டனை வழங்கப்படாவிட்டால், ‘சட்டம்’ என்ற பெயரில் அச்சுறுத்தும் கலாசாரம் வேரூன்றிவிடும் அபாயம் தலைத்தோங்கியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 7, 2026, 1:37 pm
அம்னோ மீண்டும் சரியான அரசியல் பாதைக்கு திரும்ப வேண்டும்: ஹாடி
May 7, 2026, 1:36 pm
2026 ஜொகூர் வருகை ஆண்டு; இலக்கை அடையும் பாதையில் உள்ளது: ரவீன்குமார்
May 7, 2026, 1:00 pm
ஜொகூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்படாது: ஓன் ஹபிஸ்
May 7, 2026, 12:59 pm
முதியவர் ஜெயகோபியை கொலை செய்த வழக்கில் நான்கு நண்பர்கள் மீது குற்றச்சாட்டு
May 7, 2026, 12:19 pm
