செய்திகள் மலேசியா
தங்க வேட்டையில் உள்ளூர் பட்டதாரிகள்
தாவாவ்:
பெரும்பாலும் வெளிநாட்டு நிபுணத்துவம், மூடிய தொழில்நுட்பத்துடன் தொடர்புபடுத்தப்படும் சுரங்கத் தொழில் இப்போது அதிகமான உள்ளூர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இந்தத் துறையில் திறன்களையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தி வர வழி வகுத்துள்ளது.
பாலுங்கில் உள்ள புக்கிட் துண்டோங்கின் தங்கச் சுரங்கத்தில், உள்ளூர் இளைஞர்கள் செயல்பாட்டின் முதுகெலும்புகளில் ஒன்றாகக் காணப்படுகின்றனர். அவர்கள் இப்போது தொழில்நுட்ப பதவிகள் உட்பட பல்வேறு நிர்வாகங்களில் செயல்பட்டு வருகின்றனர்.
2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சபாவைத் தளமாகக் கொண்ட தங்கச் சுரங்க நிறுவனமான சவுத்சீ கோல்ட் எஸ்டி. பிஹெச்டி., தற்போது சுமார் 300 ஊழியர்களைக் கொண்டுள்ளது. அவர்களில் சுமார் 75 சதவீதம் பேர் 35 வயதுக்குட்பட்ட உள்ளூர் இளைஞர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவி புவியலாளர் ஷாஹிரா அதிரா லீ (27), தனது சுறுசுறுப்பான இயல்பும், களத்தில் வேலை செய்வதற்கான வாய்ப்புமே இந்தத் துறையில் தனக்கு ஆர்வத்தைத் தூண்டியதாகக் கூறினார். மலேசிய சபா பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அவர், ஒரு புவியலாளராகத் பணி புரிவது, பல்வேறு இடங்களை ஆராய்வதுடன், முழு சுரங்கச் செயல்முறையையும் பார்க்கும் வாய்ப்பைத் தருவதாகக் குறிப்பிட்டார்.
இந்தத் துறையில் இளைஞர்களின் ஈடுபாடு, புதிய தொழில் வாய்ப்புகளைத் திறப்பது மட்டுமல்லாமல், முன்னர் உள்ளூர் மக்களால் குறைவாகவே மேற்கொள்ளப்பட்ட ஒரு துறைக்கு வெளிப்பாட்டையும் தருவதாக ஷாஹிரா அதிரா கூறினார்.
"உண்மையில், இந்தத் துறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லாததால், நான் அதிர்ஷ்டசாலி என்றே கருதுகிறேன். இங்கு என்னால் ஆரம்ப கட்டத்திலிருந்து தங்க உற்பத்தி வரையிலான முழுச் செயல்முறையையும் பார்க்க முடிகிறது.
"புவியியல் தொழில் சுவாரஸ்யமானது. இதில் சுரங்கம், எண்ணெய், எரிவாயு, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு கிளைகள் உள்ளன" என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், நிர்வாக இயக்குநர் டத்துக் லோ ஃபுயி மிங், தொழிற்பயிற்சி உள்ளிட்ட உள்ளூர் பணியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான முயற்சிகள், அந்தத் துறையின் நிலைத்தன்மைக்கு மிகவும் முக்கியமானவை என்று தெரிவித்தார்.
தொழில்நுட்பம், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான அணுகுமுறையும், இந்தத் துறையில் அதிகமான உள்ளூர் மக்களை ஈடுபடுத்துவதற்கு ஊக்கியாக இருப்பதாக அவர் கூறினார்.
"இங்கு அதிகமான மக்கள் வர வேண்டும் என நான் விரும்புகிறேன். இப்போது நான் இளைஞர்களைப் பயிற்றுவித்து வருகிறேன். நாம் ஆரம்பத்திலிருந்தே நம் சொந்த மக்களைப் பயிற்றுவிக்கவில்லை என்றால், பின்னர் இந்தத் துறையை உண்மையிலேயே புரிந்துகொண்ட உள்ளூர் பணியாளர்களைக் கண்டுபிடிப்பது கடினமாக அமையும்.
"10 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தத் தொழிலைத் தொடங்கியபோது, தங்கச் சுரங்கத்தில் திறமையான உள்ளூர் பணியாளர்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது, ஏனெனில் பெரும்பாலானவை வெளி நாட்டுப் பணியாளர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன.
அதே நேரத்தில், உள்ளூர் தொழில்நுட்பத் திறன் தொடர்ந்து பிரகாசித்து வருகிறது. இந்த நிறுவனம் 95 சதவீதம் வரை தங்க மீட்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது, இது தொழில்துறையில் மிக உயர்ந்த ஒன்றாகும். மேலும், இது ஒரு மாதத்திற்கு 20 கிலோகிராம் தங்கத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
புவியியல், சுரங்கம் போன்ற தொடர்புடைய துறைகளில் ஆர்வமுள்ள பல்கலைக்கழக மாணவர்கள், அனுபவத்தைப் பெற, அந்த நிறுவனத்தில் தொழிற்பயிற்சி மேற்கொள்ள விண்ணப்பிக்குமாறும் லோ கேட்டுக்கொண்டார்.
20 க்கும் மேற்பட்ட தங்கச் சுரங்கப் பகுதிகள் கட்டமாக உருவாக்கப்படலாம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதால், சுரங்கத் துறையில் சபாவுக்கு பெரும் வாய்ப்பு இருப்பதாக லோ கூறினார்.
மேலும், 13 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள சுரங்க புவியியல் மேற்பார்வையாளர் நோர்ஃபாசிலா ரம்லான் (36), சபாவில் சுரங்கத் தொழில் இப்போது மீண்டும் வேகமாகச் செயல்படுவதாகத் தெரிவித்தார்.
இந்த முன்னேற்றம், புவியியல் துறையில் திறமையான பணியாளர்களுக்கான தேவையை அதிகரிப்பதுடன், பெண்கள் உட்பட இளைஞர்களுக்கும் அதிக வாய்ப்புகளைத் திறப்பதாக அவர் கூறினார்.
"பரந்த கனிமப் பரவலை அடிப்படையாகக் கொண்ட சுரங்கத் துறையில் சபாவுக்கு பெரும் வாய்ப்பு உள்ளது, ஆனால் அதை நிலையான முறையில் மேம்படுத்த அதிக முதலீடு தேவைப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், மூத்த உலோகவியல் பொறியியாளர் நோர் சியாஹிரா ருஸ்டி (30), சபாவில் சுரங்கத் தொழில், வெளி மாநிலங்களுக்கு இடம்பெயராமலேயே, உள்ளூர் மக்களுக்குப் பரந்த வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறினார்.
ஆறு வருட அனுபவமுள்ள அவர், பொறியியல், புவியியல் போன்ற தொழில்முறைத் துறைகளில் மட்டுமல்லாமல், ஆபரேட்டர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணியாளர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகத் தெரிவித்தார்.
"சுரங்கத் தொழில், குறிப்பாக தாவாவில் உள்ள உள்ளூர் மக்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும், அவர்கள் குடும்பத்திற்கு நெருக்கமாக வேலை செய்வதையும் சாத்தியமாக்குகிறது" என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 6, 2026, 11:21 pm
ஐஜேஎம்மை கையகப்படுத்த சன்வே நிறுவனம் தவறியது
April 6, 2026, 8:56 pm
முதல் மலேசியக் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்தது: அளித்த வாக்குறுதியை ஈரான் நிறைவேற்றியது
April 6, 2026, 6:01 pm
அடையாள அட்டையை மற்றவர்களிடம் கொடுப்பது சட்டப்படி குற்றமா?: ஜேபிஎன் இயக்குனர் விளக்கம்
April 6, 2026, 4:53 pm
மேக விதைப்பு நடவடிக்கை இன்று முதல் வியாழக்கிழமை வரை செயல்படுத்தப்படுகிறது
April 6, 2026, 4:19 pm
மத்திய கிழக்கு பதற்றம்: கட்டணங்களை 40 சதவீதம் வரை உயர்த்தும் ஏர்ஏசியா எக்ஸ்
April 6, 2026, 3:42 pm
