நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பொருளாதார நெருக்கடி: இலவச உணவுத் திட்டத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்கிறது இந்தோனேசியா

ஜகார்த்தா: 

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளவில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்விலிருந்து தனது பொருளாதாரத்தைப் பாதுகாக்க, இந்தோனேசிய அரசு இலவச உணவு வழங்கும் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. 

இதன் மூலம் சுமார் 40 டிரில்லியன் ரூபியா (2.3 பில்லியன் அமெரிக்க டாலர்) நிதியைச் சேமிக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மாணவர்களுக்கும் நலிந்த பிரிவினருக்கும் இதுவரை வாரம் ஆறு நாட்கள் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு, நாளை முதல் ஐந்து நாட்களாகக் குறைக்கப்படவுள்ளது.

மத்திய கிழக்குப் போரினால் உலகளாவிய எரிபொருள் விலை உயர்ந்து வருவதால், தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதாரமான இந்தோனேசியாவை அதன் பாதிப்பிலிருந்து காப்பதே இம் மாற்றத்தின் நோக்கம் என அந்நாட்டின் தேசிய ஊட்டச்சத்து முகமை தெரிவித்துள்ளது. 

இருப்பினும், ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாக உள்ள பகுதிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் வசிக்கும் குழந்தைகளுக்குத் தொடர்ந்து வாரம் ஆறு நாட்களும் உணவு வழங்கப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய இது ஒரு உத்தியோகபூர்வ நடவடிக்கை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் இத் திட்டம், இந்த ஆண்டு மட்டும் 335 டிரில்லியன் ரூபியா செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் என சுமார் 61 மில்லியன் மக்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

ஆனால், சமீபகாலமாகச் சில இடங்களில் ஏற்பட்ட உணவு நச்சுத்தன்மை, தூய்மை குறைபாடு காரணமாக இத்திட்டத்தை நிறுத்த வேண்டும் என எதிர்க்கருத்துகளும் எழுந்துள்ளன.

இந்நிலையில், போரின் தாக்கத்திலிருந்து பொருளாதாரத்தைப் பாதுகாக்க 80 டிரில்லியன் ரூபியா நிதியை இந்தோனேசியா ஒதுக்கி வைத்துள்ளதாக அதிபரின் செய்தித் தொடர்பாளர் பிரசெட்டியோ ஹாதி தெரிவித்துள்ளார்.

உலகளாவிய பொருளாதாரச் அறைகூவல்களுக்கு மத்தியில், மக்களின் அடிப்படைத் தேவைகளையும் நாட்டின் நிதி நிலைமையையும் சமநிலைப்படுத்த இந்தோனேசிய அரசு இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset