நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் - அமெரிக்கா மோதல் உச்சம்: வளைகுடா நாடுகளிலுள்ள கல்வி வளாகங்களை விட்டு வெளியேற உத்தரவு

தெஹ்ரான்:

ஈரானிலுள்ள இரண்டு பல்கலைக்கழகங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைத் தாக்கப்போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஈரானியக் கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதலை வாஷிங்டன் அதிகாரப்பூர்வமாகக் கண்டிக்கத் தவறினால், அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரான் ஊடகங்கள் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவிற்கு நிபந்தனை விதித்துள்ள ஈரான், மார்ச் 30 திங்கட்கிழமை தெஹ்ரான் நேரப்படி நண்பகல் 12 மணிக்குள் அமெரிக்க அரசு இந்தத் தாக்குதல்களைக் கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வளைகுடா நாடுகளில் செயல்பட்டு வரும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஈரானின் பதில் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி, இந்த வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழக வளாகங்களில் பணியாற்றும் விரிவுரையாளர்கள், மாணவர்கள், அருகில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பல்கலைக்கழகங்களிலிருந்து குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் இருக்குமாறு ஈரான் அறிவுறுத்தியுள்ளது. 

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தெஹ்ரானில் உள்ள அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்தன, இருப்பினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நிலவும் இந்த அசாதாரணச் சூழலால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. கல்வி நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்த மிரட்டல்கள் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்துப் பாதுகாப்பு வல்லுநர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset