செய்திகள் தமிழ் தொடர்புகள்
வரைவு வாக்காளர் பட்டியலில் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
சென்னை:
தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
கடந்த அக்.27-ஆம் தேதி நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 5.44 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த அக். 27-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. நவ.4-ஆம் தேதி எஸ்ஐஆர் பணிகள் தொடங்கின.
இப்பணியில் 68 ஆயிரம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் வீடு வீடாக சென்று, எஸ்ஐஆர் படிவங்களை வழங்கி, ஆய்வு செய்து, பூர்த்தி செய்த படிவங்களை கணினியில் பதிவேற்றினர். இப்பணிகள் கடந்த டிச.14-ஆம் தேதி நிறைவடைந்தன.
ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்களை, சம்பந்தப்பட்ட தொகுதிகள் இடம்பெற்றுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்டனர்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், கணக்கெடுப்பு பணி நிறைவுற்று வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், சிறப்பு முகாம்களிலும் மக்கள் பார்வைக்காக இந்த பட்டியல் வைக்கப்படும்.
http://www.elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.
இதில் மக்கள் தங்களது பெயர் மற்றும் குடும்பத்தில் உள்ள வாக்காளர்களின் பெயர் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஜன.18 வரை விண்ணப்பம்: இந்த பட்டியலின் அடிப்படையில், தகுதியுள்ள வாக்காளர்களை புதிதாக சேர்க்க அல்லது தகுதியற்ற வாக்காளர்களை நீக்க எந்த ஒரு வாக்காளரும், அரசியல் கட்சியும் தங்கள் ஆட்சேபனைகளை டிச.19-ஆம் தேதி (நேற்று) முதல் 2026 ஜனவரி 18-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.
இதை ஆய்வு செய்ய 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 1,776 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் பணியில் உள்ளனர்.
இந்த காலகட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், வரும் ஜன.1-ம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வழங்கலாம். வாக்காளர் பட்டியலில் நிரந்தர இடமாற்ற பதிவுகள், உயிரிழந்தோர் உள்ளிட்ட ஆட்சேபனை தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், தொகுதிகளிலேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட, தொடர்புடைய பகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறும்போது உரிய படிவங்களை பிஎல்ஓக்களிடமும் சமர்ப்பிக்கலாம். www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ளலாம். தமிழகத்தில் 68,467 வாக்குச்சாவடிகள் இருந்த நிலையில், தற்போது புதிதாக 6,568 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டு, மொத்தம் 75,035 சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த அக்.27 நிலவரப்படி, 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 584 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. நடந்து முடிந்த எஸ்ஐஆர் திருத்தத்தின்படி, தமிழகத்தில் 2,66,63,233 ஆண் வாக்காளர்கள், 2,77,06,332 பெண் வாக்காளர்கள், 7,191 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்களின் பெயர்கள் வரைவுவாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
உயிரிழந்த வாக்காளர்கள் 26,95,672 பேர், இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3,98,278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த எஸ்ஐஆர் பணிகளின்போதே 5.19 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் இருந்து படிவம்-6 பெறப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் ஜன18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், ஆட்சேபனைகளையும் வழங்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:34 pm
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000: எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
February 21, 2026, 11:33 pm
தேர்தல் வெற்றிக்குப் பின் அதிகாரப் பகிர்வு பற்றி பேசலாம்: திருமாவளவன்
February 20, 2026, 1:58 am
காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
February 16, 2026, 12:01 am
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸார் கைது
February 14, 2026, 10:17 am
சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர் சிராஜ் உயிரிழந்தார்
February 14, 2026, 10:01 am
வலைதள அறிவரங்கம்: மஜகவின் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடலில் உற்சாகம்
February 14, 2026, 9:44 am
