செய்திகள் தமிழ் தொடர்புகள்
நாங்கள் இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லையே, அதற்குள் அலறினால் எப்படி?: நடிகர் விஜய்
காஞ்சிபுரம்:
"மக்களிடமிருந்து ஓட்டு வாங்கப்போகும் நாங்கள் தற்குறிகள் என்றால், மக்களிடமிருந்து ஏற்கெனவே ஓட்டு வாங்கிய நீங்கள் யார்? மக்கள் எல்லோரும் உங்களுக்கு தற்குறிகளா? இந்த தற்குறிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்துதான், விடையே தெரியாத அளவுக்கு உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்க போகிறார்கள்" என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், “தனது வழிகாட்டி என்பதால், தான் ஆரம்பித்த கட்சியின் கொடியில் அன்ணாவை வைத்தவர் எம்ஜிஆர். அவர் ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் இப்போது என்னெவெல்லாம் பண்ணுறாங்கன்னு உங்களுக்கே தெரியுமே.
தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் அவர்களுக்கும், வாய்க்கால் வரப்பு தகராறு கிடையாது. அவர்களுக்கு வேண்டுமானால் நம் மீது வன்மம் இருக்கலாம்.
ஆனால், நாம் அப்படி கிடையாது. உங்களை, நம்மை பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நாடகமாடுபவர்களை கேள்வி கேட்காமல் விடப்போவது இல்லை. காஞ்சிபுரத்துக்கும் எனக்கும் தொடர்பு உண்டு. எனது முதல் களப்பயணம் பரந்தூரில்தான் தொடங்கியது.
இப்போது ஒரு பெரிய மன வேதனைக்குப் பின்னர் மக்கள் சந்திப்புக்கு வந்துள்ளதும் இந்த காஞ்சிபுரத்துக்குத்தான்.
எல்லா மக்களுக்கும் நல்லது செய்யவேண்டும் என்ற லட்சியத்தோடுதான் அரசியலுக்கு வந்துள்ளோம். அதனால்தான் மக்களிடம் செல் என்ற அண்ணாவின் வழியை பின்பற்றுகிறோம்.
ஆனால், மக்களிடம் செல் எனச் சொன்ன அண்ணாவை மறந்தது யார்? கொள்கை என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் கட்சியை நடத்தும் முதல்வர், நமக்கு கொள்கையில்லை என சொல்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என சொல்லும் நமக்கு கொள்கையில்லையா?
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சொன்னோம். சிஏஏவை எதிர்த்தோம், வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றோம், நமக்கு கொள்கை இல்லையா? நீட் தேர்வை ஒழிக்க கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர சொன்ன நமக்கு கொள்கையில்லையா? சமத்துவம், சமவாய்ப்பு என சொல்லும் நமக்கு கொள்கையில்லையா? இவர்களின் கொள்கையே கொள்ளைதானே. இது மக்களுக்கு தெரியாதா?
எங்கள் கட்சி ஒன்றும் சங்கர மடம் இல்லை என சொன்னது யார்? இப்போது அவர்கள் கட்சியில் நடப்பது என்ன? பவளவிழா பாப்பா, பாசாங்கு காட்டாதே பாப்பா, நீ நல்லவர்போல நடிப்பதை பார்த்து நாடே சிரிக்குது பாப்பா. பாப்பா என சொன்னதையே விமர்சனம் என்றால் எப்படி?
நாங்கள் இன்னும் விமர்சனம் பண்ண ஆரம்பிக்கவே இல்லை. இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லையே, அதற்குள் அலறினால் எப்படி? அதனால் அரசவை புலவர்களின் கண்ணீரை துடைத்துவிடுங்கள்.
காஞ்சிபுரத்தின் ஜீவநதி பாலாறை சுரண்டி அழித்துவிட்டார்கள். பாலாறில் அனுமதித்த அளவை தாண்டி 22 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மணலை கொள்ளையடித்துள்ளார்கள். இதன் மூலம் ரூ.4730 கோடி கொள்ளையடித்தார்கள். இதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் உள்ளது.
காஞ்சியின் பெருமையான பட்டை தயாரிக்கும் கைத்தறி நெசவாளர்கள் வறுமையில் உள்ளனர். இந்த தொழிலில் கூட்டுறவு சங்கங்களில் 40 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். ரூ.500 சம்பளம் கூட கிடைக்காமல் மழையால் கைத்தறி நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாலாஜாபாத் அவலூர் ஏரி அருகே பாலாறில் தடுப்பணை கட்ட வேண்டும். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கூடாது.
இதுபோல மக்கள் பிரச்சினைகளை பேசுவதால் தவெக மீது அவதூறை பரப்புகிறது திமுக. நாம ஆட்சிக்கு வந்தால்... அது என்ன வந்தால், வருவோம். மக்கள் நிச்சயமாக நம்மை ஆட்சிக்கு வரவைப்பார்கள். மக்களால் அமைக்கப்படும் நம் ஆட்சியில் என்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையில் சொல்வோம்.
நம் ஆட்சியில் எல்லோருக்கும் நிரந்தர வீடு, வீட்டுக்கு ஒரு பைக் இருக்க வேண்டும், வீட்டுக்கு ஒரு கார் இருப்பதும் நம் லட்சியம், வீட்டில் ஒருவர் டிகிரி படித்திருக்க வேண்டும். வீட்டில் ஒருவருக்குக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பை உருவாக்குவோம். தரமான அரசு மருத்துவமனைகள் இருக்கும். பருவமழையால் ஊர், மக்கள், விவசாயம் பாதிக்காத அளவு திட்டங்களை உருவாக்குவோம். நெசவாளர்கள், அரசு ஊழியர்களின் நலனை மேம்படுத்துவோம். சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருந்து, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம்.
இதனை எப்படி செயல்படுத்துவோம் என்பதை தேர்தல் அறிக்கையில் விளக்கமாக சொல்வோம். ஏற்கெனவே கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என தெளிவாக சொல்லியுள்ளோம். அதில் ஊசலாட்டமே இல்லை. நான் சொன்னதை செய்யாமல் விடமாட்டேன்.
அதென்ன தற்குறி? தவெகவை ஆதரிக்கும் லட்சக்கணக்கான நண்பா, நண்பிகள், ஜென் ஸி கிட்ஸ்களை தற்குறி என சொல்லிவிட்டு, இப்போது அப்படி சொல்லவேண்டாம் என்கிறார்கள்.
தற்போது நடத்திய அறிவுத்திருவிழாவில் பேசிய ஒரு எம்எல்ஏ தவெகவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் நம் கொள்கை தலைவர் அஞ்சலை அம்மாளின் சொந்தக்காரர். இந்த ஆதரவு இனி எல்லார் வீட்டிலும் எதிரொலிக்கும்.
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோதே, அதனை கூத்தாடி கட்சி என சொன்னார்கள். இப்போது நம்மையும் அப்படி சொல்கிறார்கள். மர்மயோகி படத்தில் எம்ஜிஆர், ‘குறிவைத்தால் தவறமாட்டேன். தவறுமானால் குறியே வைக்க மாட்டேன்’ என்று சொல்லியிருப்பார். அதேபோல, ஏன் இந்த விஜயை தொட்டோம், ஏன் விஜயுடன் உள்ள மக்களை தொட்டோம் என நினைத்து நினைத்து வருந்தப் போகிறீர்கள்.
மக்களிடமிருந்து ஓட்டு வாங்கப்போகும் நாங்கள் தற்குறிகள் என்றால், மக்களிடமிருந்து ஏற்கெனவே ஓட்டு வாங்கிய நீங்கள் யார்? மக்கள் எல்லோரும் உங்களுக்கு தற்குறிகளா? இந்த தற்குறிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்துதான், விடையே தெரியாத அளவுக்கு உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்க போகிறார்கள். இவர்கள் தற்குறிகள் கிடையாது. இவர்கள் தமிழக அரசியலின் ஆச்சர்ய குறி, மாற்றத்துக்கான அறிகுறி. இங்கே தவெகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி. மை டியர் அங்கிள் ஏற்கெனவே மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.” என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 24, 2025, 10:54 am
நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் கனமழை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
November 22, 2025, 6:00 pm
கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்
November 21, 2025, 10:53 am
சேலத்தில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டு தவெகவினர் மனு
November 20, 2025, 4:14 pm
தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
November 19, 2025, 4:22 pm
சென்னையில் நகை வணிகர்கள், தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை
November 19, 2025, 3:19 pm
எஸ்.ஐ.ஆர். பணியை கைவிட வலியுறுத்தி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு
November 19, 2025, 3:01 pm
விஜய் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஜனவரியில் முடிவு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
November 19, 2025, 2:03 pm
சபரிமலைக்கு விரைந்த அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை
November 18, 2025, 6:02 pm
