செய்திகள் தமிழ் தொடர்புகள்
இன்று முதல் வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழு வீச்சில் தொடங்குகிறது
சென்னை:
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று முதல் முழுவீச்சில் தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்புக்கான படிவங்களை வழங்க உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்ப்பது, உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களை கண்டறிந்து நீக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் 1951 முதல் 2004 வரை 8 முறை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் பிஹாரில் இப்பணி நடைபெற்றது. விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணி கடந்த 28-ம் தேதி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, பணிகளில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சி, அரசியல் கட்சிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் ஆகியவை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஏற்கெனவேவெளியிடப்பட்ட பட்டியல் அடிப்படையில், வீடு வீடாக அலுவலர்கள் வந்து விண்ணப்ப படிவங்களை வழங்கி பூர்த்தி செய்து பெறும் பணி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று முழுவீச்சில் தொடங்குகிறது.
இன்று முதல் டிச.4-ம் தேதி வரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வாளர்கள். அப்போது, அனைத்து வாக்காளர்களுக்கும் பகுதியளவு முன்நிரப்பப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தின் 2 பிரதிகளை வழங்குவார்கள். அந்த படிவத்தை வாக்காளர்கள் நிரப்ப வேண்டும். நிரப்புவதில் சிரமம் இருந்தால், நிலை அலுவலர்கள் உதவுவார்கள்.
வீட்டுக்கு 3 முறை வருவார்கள்: நிரப்பிய கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொண்டு, அதன் ஒரு நகலில் படிவத்தை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையை அலுவலர் வழங்குவார். இவ்வாறாக ஒரு வீட்டுக்கு வாக்குச்சாவடிநிலை அலுவலர் 3 முறை செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தின் 2 பிரதிகளையும் நிரப்ப வேண்டும். தேவைப்பட்டால், சமீபத்திய புகைப்படத்தை படிவத்தில் ஒட்டலாம். இந்த கணக்கெடுப்பின்போது வாக்காளரிடம் இருந்து எந்த ஒரு ஆவணமும் பெறப்படாது.
இணையதளம், செயலியிலும் வசதிமேலும், கணக்கெடுப்பு படிவத்தை இணையதளம் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம். பகுதியளவு நிரப்பப்பட்ட படிவத்தை ‘ECINET’ என்ற செயலிமூலம் பதிவேற்ற முடியும். இல்லாவிட்டால் ‘voters.eci.gov.in’ என்ற இணையதளத்தில் கணக்கெடுப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி, அதன்பின் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.
வீடு வீடாக வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் கடந்த 2002-05-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல்தான் இருக்கும். அதன் அடிப்படையில்தான் கணக்கெடுப்பு நடைபெறும். எந்த வீடுகளில் உள்ள வாக்காளர்கள் 2002, 2005 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்களோ, அவர்களது வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வார்கள். அந்த வீடுகளில் இருப்பவர்களிடம் வாக்காளர்பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்த்து, படிவத்தை வழங்கி பூர்த்தி செய்து பெறுவார்கள். அங்கு 18 வயது நிரம்பியவர்கள் இருந்தால் அவர்களுக்கும் படிவங்கள் வழங்கப்படும். 2002 அல்லது 2005 பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால் அதை தெரிவிக்கலாம். உரிய ஆவணங்களை காட்டி விண்ணப்பிக்கலாம்.
இதன்மூலம் வரும் டிச.9-ம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்ய முடியும். முகவரி மாற்றம் இருந்தால் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாது. முகவரி மாறியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் இதுவரை சேர்க்காதவர்கள் அதற்கான ஆவணங்களுடன் டிச.9-ம் தேதி முதல் 2026 ஜன.8-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை சேர்த்து வழங்கி தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். அதன்பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்.7-ம் தேதி வெளியிடப்படும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 5:04 pm
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவர் கைது
November 2, 2025, 5:26 pm
இன்று கல்லறை திருநாள், நாளை முகூர்த்தநாள்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
November 2, 2025, 11:19 am
அதிமுக தலைமைக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை: செங்கோட்டையன் நீக்கம் குறித்து இபிஎஸ் விளக்கம்
October 31, 2025, 11:51 am
‘செந்தமிழர் சீமான்’ என்று வாழ்த்தி முழக்கமிட்ட வைகோ: தொண்டர்கள் மகிழ்ச்சி
October 29, 2025, 5:59 pm
குப்பை ஊழலில் புதுவை முதல்வருடன் இருப்பவருக்கு தொடர்பு: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
October 27, 2025, 10:42 pm
கரூர் சம்பவம்; என்னை மன்னித்துவிடுங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்
October 27, 2025, 12:49 pm
