செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை அருகே புயல் உருவாகிறது: செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று வலுப்பெற்றது. இது சென்னை அருகே புயலாக நாளை உருவாகிறது. இதன் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆழ்கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக சமீபத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மட்டுமே வலுப்பெற்றது.
அதேநேரம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையவில்லை.
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்த போதிலும் பெரிய அளவில் மழை என்பது இல்லை. இதனிடையே வலு குறைந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியதால் மழைப்பொழிவு என்பது குறைந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை நேற்று காலையில் மழை பெய்தது. அதன் பிறகு வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானி பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று நேற்று முன்தினம் மாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவியது.
இது, நேற்று காலை 5.30 மணி அளவில், மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 8.30 மணி அளவில் அதே பகுதிகளில், போர்ட் பிளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கு-தென்மேற்கே சுமார் 440 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 970 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 990 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 26ம் தேதி (இன்று) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 27ம் தேதி (நாளை) காலை, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். 28ம் தேதி வாக்கில் தீவிரப்புயலாக வலுப்பெறக்கூடும்.
மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோர பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிர புயலாக 28ஆம் தேதி மாலை, இரவு நேரத்தில் கடக்கக்கூடும்.
அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:34 pm
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000: எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
February 21, 2026, 11:33 pm
தேர்தல் வெற்றிக்குப் பின் அதிகாரப் பகிர்வு பற்றி பேசலாம்: திருமாவளவன்
February 20, 2026, 1:58 am
காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
February 16, 2026, 12:01 am
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸார் கைது
February 14, 2026, 10:17 am
சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர் சிராஜ் உயிரிழந்தார்
February 14, 2026, 10:01 am
வலைதள அறிவரங்கம்: மஜகவின் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடலில் உற்சாகம்
February 14, 2026, 9:44 am
