
செய்திகள் கலைகள்
கண்டேன் ராஜாவை; கேட்டேன் சிம்பொனியை: ரவி பழனிவேல்
இளையராஜாவின் சிம்பொனி நிகழ்வை நேரில் கண்ட திரு ரவி பழனிவேலு அவர்களின் அனுபவம்.
இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்காவில் லண்டனுக்கு பறந்து வந்த ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டேன் ராஜாவை. கேட்டேன் சிம்பொனியை. பரவச அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்தும் கொள்வதில் மகிழ்ச்சி.
நிகழ்வு ஆரம்பமானவுடன் ரஷ்யன் சிம்பொனி இசை துணுக்கு ஒன்றை வாசித்து காண்பித்தார்கள். அதன் பிறகு ராஜா சார் மேடைக்கு வந்தார். வாத்திய கலைஞர்களை தலைமையேற்று நடத்தும் கண்டக்டர் மைக்கேல் அவர்கள் ராஜாவிடம் அனுமதி பெற்று நிகழ்ச்சியை ஆர்மபித்தார்.
ராஜாவின் சிம்பொனி 4 பாகங்களாக வாசிக்கப்பட்டது. ஒவ்வொரு பாகமும் 15 நிமிடம் நேரம் வரை வாசிக்கப்பட்டது. ஊசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்த அரங்கத்தில் ராஜாவின் இசை அங்கிருந்த அனைவரையும் ஊடுருவியது எனலாம். வாத்திய கலைஞர்கள் வாசிக்க வாசிக்க என்னில் எழுந்த உணர்வுகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. ஒவ்வொரு பாகம் வாசித்து முடித்தவுடன் எழுந்த கைதட்டல் அடங்க நேரமானது. அந்த கைதட்டலை கேட்கும் போதெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் மேலிட ராஜாவை பார்த்துக் கொண்டிருந்தேன்.
மூன்றாவது பாகம் ராஜாவின் உச்சம். மேடையில் இருந்த 77 இசைக்க கலைஞர்களுக்கும் வேலை கொடுத்திருக்கிறார். இதை எப்படி ஒரு மனிதர் எழுதியிருக்க முடியும் என்று ஆச்சரியப்படாதவர்கள் இருக்க முடியாது. அந்த பாகத்தை கேட்கும் போது தான் ராஜாவை நாம் சினிமா இசை எனும் கூண்டுக்குள் வைத்திருக்கிறோம் என்று தோன்றியது. ராஜா உலகம் எங்கும் பறக்க வேண்டிய ஒரு இசைப்பறவை. சினிமா பாடல்களை கொடுத்து 5 நிமிடத்திற்குள் ஒரு பாடல், அதில் 2 பி ஜி எம் என கூண்டுக்குள் இருந்த ஒரு பறவை, இன்று இந்த பிரபஞ்சத்தை ஆள கிளம்பி விட்டது என்றே தோன்றியது. மூன்றாவது பாகம் வாசிக்கும் போதும் திகைத்திருந்த ரசிகர் கூட்டம், அது முடிந்தவுடன் உச்சபட்ச ஆச்சரியத்தில் கைதட்டியது. பலத்த கைதட்டல் முடிய நேரம் ஆனது. அப்போதும் நான் உணர்வுகளின் பிடியில் இருந்தேன்.
நான்காவது பாகமும் அற்புதம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த இசை நிகழ்ச்சியில் எப்போதும் போல் அந்த மேடையிலேயே அமர்ந்து அவர் எழுதிய நோட்ஸ்களை கையில் வைத்து கொண்டு, அனைத்தும் சரியாக வாசிக்கப்படுகிறதா என்று சோதித்துக் கொண்டே இருந்தார் ராஜா. லைவ் கான்சர்டுகளில் 3 மணி நேரம் அசராமல் நின்று ஒவ்வொரு வாத்திய கலைஞர்களையும் தன் கண்ணசைவில் ஆட்டுவிக்கும் ராஜாவை நமக்கு தெரியாதா என்ன?
நிகழ்வு முடிந்தவுடன் அரங்கமே எழுந்து கைதட்டியது. கண்டக்ட்ரும் ராஜாவும் தலைகுனிந்து அந்த பாராட்டுகளை ஏற்றுக் கொண்டனர். ராஜாவை சில வார்த்தைகள் பேசுமாறு அழைத்தார். " சிம்பொனியை நான் எக்ஸ்பிலைன் செய்ய முடியாது, நீங்கள் எக்ஸ்பீரியன்ஸ் செய்வது தான் சரியாக இருக்கும்" என்று தனக்கே உரிய பாணியில் சொன்னார்.
அதன் பிறகு சிறிய இடைவேளை விடப்பட்டது. சிம்பொனி நிகழ்வில் ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக ஏற்கனவே ராஜா சொல்லியிருந்தார். இடைவேளைக்கு பிறகு ராஜாவின் அதி அற்புத சினிமா பாடல்களை ராயல் ஆர்கெஸ்டரா குழுவினர் வாசிக்க கேட்கும் பாக்கியம் கிடைத்தது. எத்தனையோ ஆயிரம் முறை கேட்ட பாடல்கள் நேற்று புதியதாக கேட்டன. மடை திறந்து, ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா, தும்பி வா, கண்ணே கலைமானே, பூவே செம்பூவே பாடல்கள் தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டது. இதை கேட்கும் போது தான் தெரிந்தது, இந்த சிம்பொனியை நமக்கு ராஜா எப்போதோ கொடுத்து விட்டார் என்று.
அதன் பிறகு முடிவடையாத சிம்பொனி என்ற தலைப்பில் மீன்று ஒரு இசை விருந்து ஆரம்பித்தது. அது என்ன பாடல் தெரியுமா? புதிய வார்ப்புகள் படத்தில் இடம் பெற்ற " இதயம் போகுதே" பாடல். " டேய் உங்களுக்கெல்லாம் 45 வருஷத்துக்கு முன்னாடியே நான் சிம்பொனியை கொடுத்திருக்கேண்டா" என்று சொல்லாமல் சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். ஜெயா டிவி நிகழ்ச்சி ஒன்றில் "சிம்போனினா என்ன சார்" என்று பிரகாஷ் ராஜ் கேட்கும் போது, இந்தப் பாடலைத்தான் வாசித்து காண்பித்தது நினைவு வந்தது. அப்படியானால் என் எண்ணம் சரிதான். அவர் சிம்பொனி செய்து 45 வருடங்கள் ஆகிவிட்டது. நமக்கு தான் புரியவில்லை.
இதயம் போகுதே பாடல் வாசிக்கும் போதே மெய் சிலிர்த்து போனேன். கூடுதல் போனஸாக அவர்கள் வாசிக்க ராஜா பாட ஆரம்பித்தார். அதுவும் ஆர்கெஸ்டரா வாசிப்பதற்கு ஏற்ப பாடியது ராஜாவின் திறமையை பறைசாற்றியது. நிகழ்ச்சி டிஜிட்டலில் வரும் போது மறக்காமல் பார்த்து விடுங்கள்.
அதன் பிறகு ராஜாவின் ஜகானிக் பி ஜி எம் கள் வாசிக்கப்பட்டது. ஏற்கனவே கேட்டது தான் என்றாலும், 77 இசை விற்பன்னர்கள் சேர்ந்து வாசிக்க கேட்கும் போது, பிரம்மாண்டமாக இருந்தது.
"இன்று என் வாழ்வில் மிக முக்கியமான நாள்" என்று ராஜா சொன்ன போது, ராஜா சாருடைய எதிர்பார்ப்பு தெரிந்தது. அவரது பேச்சில் மிகுந்த மனநிறைவு தெரிந்தது.
நமது கலாச்சாரப்படி இசை நிகழ்ச்சியை கண்டக்ட் செய்த மைக்கேல் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். அதன் பிறகு வாசித்த 77 கலைஞர்களையும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்க இருப்பதாக தெரிவித்தார்.
இசை நிகழ்ச்சி முடிந்து அறைக்கு வந்த பின்னும் பிரமிப்பு அடங்கவில்லை. ராஜா சார் வாழும் காலத்தில் நாமும் வாழ்வதே நமக்கு கொடுப்பினை தான். கோடிக்கணக்கான ராஜாவின் ரசிகர்களின் பிரதிநிதியாக இந்த நிகழ்ச்சியை பார்த்த அனுபவத்தை உங்கள் முன் பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி
குரல் வழிப் பதிவு: திரு. ரவி
எழுத்து வடிவம் : Mahadevan CM
தொடர்புடைய செய்திகள்
March 9, 2025, 5:32 pm
தனது மும்பை வீடுகளை ரூ.13 கோடிக்கு விற்ற நடிகை பிரியங்கா சோப்ரா
March 6, 2025, 11:49 am
இசைஞானி இளையராஜா தலைமையில் லண்டனில் முதல் சிம்போனி அரங்கேற்றம்
March 5, 2025, 2:21 pm
LADY SUPERSTAR என்று தன்னை அழைக்க வேண்டாம்: நடிகை நயன்தாரா அறிக்கை
March 4, 2025, 3:39 pm
கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிக்கும் தெலுங்கு படம்
March 4, 2025, 3:32 pm