செய்திகள் தமிழ் தொடர்புகள்
1967, 1977-ஐ போல் 2026-ல் ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை உருவாக்குவோம்’: விஜய்
சென்னை:
“1967 இல் தமிழக அரசியலில் ஒருபெரும் மாற்றம் தொடங்கியது. அதன் பின்னர், 1977இல் மீண்டும் ஓர் அரசியல் அதிர்வு ஏற்பட்டது. அத்தகைய ஓர் அரசியல் பெருவெளிச்சத்தைக் கொண்ட ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை 2026 தேர்தலில் நாம் உருவாக்கிக் காட்டுவோம். நம்மோடு இணைந்து மக்களும் மனதளவில் அதற்குத் தயாராகி வருகின்றனர்.” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். இதயம் மகிழும் தருணத்தில், உங்களோடு பேசவே இக்கடிதம். இன்று, ஒரு வெற்றிப் பெரும்படையின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கம். ஆம். தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் பெரும்படையைக் கட்டமைத்தது பற்றி அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது.
மக்கள் இயக்கமாக, மக்களுக்கான நலத்திட்டங்களைச் செய்து வந்த நாம், அரசியல் களத்தைக் கையாளத் தொடங்கி, இதோ இப்போது இரண்டாம் வருடத்தின் வாயிலில் கட்சி தொடங்கியதற்கான அறிவிப்பு, உறுப்பினர் சேர்க்கை என நமது அரசியல் பயணத்தின் ஒவ்வோர் அடியையும் அளந்து, நிதானமாக வைத்து முன்னேறி வருகிறோம்.
மக்களுக்கான அரசியலை, மக்களோடு மக்களாக நிற்பதை, மக்களுடன் நின்றே அறிவித்தோம். அதுதான் நமது முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவானது.
அதில்தான் கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்களை, மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகளை, மாபெரும் செயல்திட்டங்களை அறிவித்தோம். அதன் வாயிலாக, அரசியல் களத்தின் அத்தனை திசைகளையும் அதிர வைத்தோம்.
இதோ இந்த ஓராண்டுக்குள் எத்தனை எதிர்ப்புகளை, ஏகடியங்களைக் கடந்திருப்போம்? எதற்கும் அஞ்சாமல், எதைக் கண்டும் பதறாமல் நம் கருத்திலும் கருத்தியலிலும் நின்று நிதானித்து, நேர்மையாக நடைபோட்டு வருகிறோம்.
குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடங்கி பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு வரை மக்கள் பிரச்சினைகளை மட்டுமே மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம்.
தனி மனிதர்களுக்கு எதிரான அரசியலைத் தவிர்த்தே வருகிறோம். இனியும் இப்படியேதான் தொடர்வோம்.
காரணம் தனி மனிதர்களைவிடத் தனித்து உயர்ந்தது. மக்களரசியல் மட்டுமே.
தொடரும் இப்பயணத்தில், கழகத்தின் உட்கட்டமைப்பை உறுதிப்படுத்தி, விரிவாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன.
அதன் வெளிப்பாடாகத்தான் நம் தோழர்கள் தேர்ந்தெடுத்த கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளை அறிவித்து வருகிறோம். தலைமைக் கழகத்துக்கான புதிய பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறோம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ரத்த நாளங்களான நம் கழகத் தோழர்களை அரசியல்மயப்படுத்தி, மக்கள் மத்தியில் அவர்களுக்கெனத் தனிப்பெரும் மரியாதையை மக்கள் பணிகள் மூலம் உருவாக்குவதே எப்போதும் நமது இலக்காக இருக்கும்.
அந்த இலக்கின் முதல் படிதான் வருகிற 2026 தேர்தல். இந்த வேளையில், கழகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவைக் கொண்டாடும் பொருட்டு, தமிழகமெங்கும் மக்கள் நலத்திட்டப் பணிகளை நம் தோழர்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் பணி வாயிலாக, நம் மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி, ஒரு வீடு விடாமல், தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் கழகத்தின் மணித்திருக்கொடியை ஏற்றி வைக்க வேண்டியது நம் தோழர்கள் ஒவ்வொருவரின் கடமை. இதை நீங்கள் அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என்று எனக்குத் தெரியும். இருந்தும், உங்களுக்கு நினைவூட்டவே இங்கு சொல்கிறேன்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான தேர்தலில், மக்கள் சக்தியுடன் நாம் கரம் கோத்து, நமது வலிமையை நாட்டுக்குப் பறைசாற்றி, அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஆகப்பெரும் ஜனநாயகப் பெருநிகழ்வைத் தமிழகத்தில் உருவாக்கிக் காட்டப் போகிறோம்.
அந்த அரசியல் பேரிலக்கை நோக்கி, நீங்கள் இப்போதே உழைக்கத் தொடங்க வேண்டும். மக்களோடு சேர்ந்து, மக்களோடு மக்களாகத் தொடர்ந்து உழைத்தால்தான் தமிழக அரசியலின் கிழக்குத் திசையாகவும், கிளர்ந்தெழும் புதிய விசையாகவும் நம் தமிழக வெற்றிக் கழகம் மாறும். அதை நாம் நிறைவேற்றியே காட்ட வேண்டும்.
வேறு யாரையும் போல வாயாடலில் மட்டுமே மக்களுடன் நிற்காமல், உள்ளத்தில் இருக்கும் உண்மையான உணர்வுடன் மக்களுடன் களத்தில் நிற்பதுதான் நாம் செய்ய வேண்டிய ஒரே பணி.
1967 இல் தமிழக அரசியலில் ஆகப்பெரும் அதிர்வுடன் ஒருபெரும் மாற்றம் தொடங்கியது. அதன் பின்னர், 1977இல் மீண்டும் ஓர் அரசியல் அதிர்வு ஏற்பட்டது. மக்கள் சக்தியின் மாபெரும் வலிமை நிரூபிக்கப்பட்டது. இவ்விரண்டு தேர்தல் அரசியல் முடிவுகளிலும்தான்.
அப்போது இருந்தோரின் பெரும் உழைப்பே இந்தப் பெருவெற்றிகளுக்கான அடிப்படைக் காரணமாகும். அத்தகைய ஓர் அரசியல் பெருவெளிச்சத்தைக் கொண்ட ஒரு புதிய அரசியல் அதிகாரப் பாதையை 2026 தேர்தலில் நாம் உருவாக்கிக் காட்டுவோம். நம்மோடு இணைந்து மக்களும் மனதளவில் அதற்குத் தயாராகி வருகின்றனர்.
தோழர்களே, தமிழக மண்ணைச் சேர்ந்த இந்த மகன் உங்களோடு நிற்கிறேன். நாம், நமது மக்களோடு சேர்ந்து களத்தில் நிற்போம். மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம். இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம். வாகைப் பூ மாலை சூடுவோம். வெற்றி நிச்சயம்..” என தெரிவித்துள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
February 3, 2025, 1:22 pm
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கக் கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
January 31, 2025, 12:59 pm
தெருவில் திரியும் நாய்களுக்கும், மாடுகளுக்கும் மைக்ரோ சிப் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு
January 29, 2025, 10:49 pm
உதயநிதிக்கு எதிரான சனாதன தர்ம வழக்கு தள்ளுபடி
January 28, 2025, 5:27 pm
திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது: ஸ்டாலின்
January 27, 2025, 12:50 pm
பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்தை மலரச் செய்யுங்கள்: சீமான் அறைகூவல்
January 27, 2025, 12:43 pm
குடியரசு தின விழாவில் பதக்கம், விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
January 24, 2025, 8:32 pm
நாடாளுமன்ற வக்ஃபு கூட்டுக் குழுவின் 10 எம்பிகள் இடைநீக்கம் ஒரு ஜனநாயக படுகொலை: ஜவாஹிருல்லா கண்டனம்
January 24, 2025, 6:08 pm
ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால்தான் மக்களுக்கு வெளிச்சம்: சீமான்
January 24, 2025, 2:46 pm