நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வெற்றிக் கொண்டாட்டங்கள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் அமையட்டும்: மு.க.ஸ்டாலின்

"கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது தி.மு.க. அரசு என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

''9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான மாபெரும் வெற்றியைப் பெற்று வரும் செய்தி கடந்த ஐந்துமாத கழக ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று ஆகும். சாதனைச் சரித்திரம் தொடர்வதற்கு மட்டுமல்ல, செய்த சாதனைகளுக்கான மக்களின் அங்கீகாரமாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது.
 
சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத நல்ல பல திட்டங்களையும் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றிக் காட்டி இருக்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது தி.மு.க. அரசு என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம். தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் கொடுத்துள்ள வெற்றி எங்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. ஊக்கமளிப்பதாக உள்ளது. மேலும் உங்களுக்காக உழைக்கத் தூண்டுகிறது.
 
ஐந்தாண்டுகளில் அடைய வேண்டிய நம்பிக்கையை ஐந்து மாதத்தில் பெற்ற பெருமித உணர்வை நான் அடைகிறேன். ஐந்தாண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை, ஐந்து மாதத்தில் செய்ததால் கிடைத்த வெற்றி இது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
 
இந்த மாபெரும் வெற்றிக்காக உழைத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர், அனைத்துக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சக்கணக்கான உடன்பிறப்புகள், தொண்டர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சத்தின் அடியாழத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி உங்கள் உழைப்பால், வியர்வையால் கிடைத்ததாகும். தமிழினத் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே நாங்கள் என்பதை உங்களது உழைப்பால் நிரூபித்துக் காட்டி விட்டீர்கள். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதுகூட பழைய மொழிதான். இந்தப் படை ஒன்றே வெல்லும் படை என்பதை புதிய மொழியாக்கிப் புறப்பட்டுள்ளீர்கள்.
 
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழக அரசு ஏராளமான திட்டங்களை மக்களுக்கு நிறைவேற்றி வருகிறது; இனியும் நிறைவேற்றித்தரப் போகிறது. இந்தத் திட்டப்பணிகளைக் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத்தான் இருக்கிறது. எத்தகைய நல்ல திட்டங்களை கோட்டையில் இருந்து உத்தரவிட்டாலும் அதனைக் குக்கிராமத்தில் வாழும் மக்களின் வாசலில் நிறுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளே; அதன் பிரதிநிதிகளான நீங்கள்தான். அதனை நெஞ்சில் வைத்து நீங்கள் அனைவரும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
வெற்றிக் கொண்டாட்டங்கள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் அமையட்டும் என்று கேட்டுக் கொண்டு, மக்கள் தொண்டு ஒன்றே நமது செயல்பாடுகள் என்று மக்கள் கொண்டாடும் வகையில் நமது பணிகள் அமையட்டும் என்றும் வாழ்த்துகிறேன். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்போம்! மக்களைக் காப்போம்!'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset