நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இலங்கை, இந்திய அரசுகளைக் கண்டித்து  ராமேஸ்வரம் மீனவர்கள் விசைப்படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் 

ராமேஸ்வரம்: 

இலங்கை மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து 700-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விசைப்படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

படகுகளை இலங்கை நாட்டுடைமை ஆக்குவதற்கும், மீனவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 மீனவர்கள் 2-ஆவது நாளாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4ம் தேதி 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 

2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்களில் 20 பேர் ஐந்து ஆண்டு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

எஞ்சிய 3 பேரில் இருவருக்கு 6 மாதம், ஒருவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோல் இரண்டு மாதங்களுக்கு முன்பும் ஒரு மீனவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரும் சிறையில் இருந்து வருகிறார்.

இலங்கை அரசின் புதிய கடல் தொழில் மீன்பிடி சட்டத்தின்படி, தமிழக மீனவர்களை கைது செய்வது, கோடி கணக்கில் அபராதம் விதிப்பது, படகுகளை அரசுடமையாக்குவது மற்றும் மீனவர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிப்பது போன்ற நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபடுகிறது.

இலங்கை அரசின் புதிய சட்டத்தை அமல்படுத்த விடாமல் தடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தினர்.

இந்நிலையில் இலங்கை மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset