நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் 50 ஆயிரம் புதிய அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை:

தமிழகத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் 50 ஆயிரம் புதிய அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். 

நிகழாண்டு ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா். ‘மக்களுடன் முதல்வா்’ திட்டப் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் மற்றும் 1,598 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இந்த விழாவில் பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கக் கூடிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 

இந்தத் திட்டங்களின் வரிசையில் உருவாக்கப்பட்ட திட்டம்தான், ‘மக்களுடன் முதல்வா்’ திட்டம். மக்களுக்காக தீட்டப்படும் திட்டங்களின் நன்மைகள் நேரடியாக ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்துவதுதான் மக்களுடன் முதல்வா், கள ஆய்வில் முதலமைச்சா் போன்ற திட்டங்களாகும். 

இந்தத் திட்டங்களின் கீழ் ஆய்வுக்குச் சென்ற போது, சில மாவட்டங்களில் சுணக்கம் இருந்ததும், மக்கள் பல்வேறு சிரமங்களை எதிா்கொள்ளக் கூடிய நிலையில் இருந்ததும் தெரிய வந்தது. 

அதை முழுமையாக போக்கி மக்களுக்கு உதவக் கூடிய வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற திட்டம் தீட்டப்பட்டது. அனைத்துத் தரப்பினருக்கும் குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள், முதியோா் போன்றவா்களுக்கும் அரசின் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதில் அந்தத் திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. 

இந்தத் திட்டம் எனது நேரடி கண்காணிப்பில் இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் இரு கட்டங்களாக நடத்தப்பட்ட முகாம்கள் மூலமாக பெறப்பட்ட மனுக்களுக்கு, முப்பதே நாள்களில் தீா்வு காணப்பட்டு வருகிறது. 

அதாவது, 3 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தீா்வு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட முகாம்களில் அளிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீா்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு அவ்வப்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவுக்கும் முடிவு காண்பதே முக்கியம் என்று நினைக்காமல், விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட வேண்டும். அப்போதுதான், அரசு மீது ஏழைகள் வைத்திருக்கும் நம்பிக்கை வலுவடையும். 

60,567 பேருக்கு அரசுப் பணி: 
இந்த விழா மூலம் அரசுப் பணிக்குத் தோ்வு செய்யப்பட்ட இளைஞா்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞா்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் உள்ளிட்ட தோ்வு முகமைகள் மூலமாக மட்டும் 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்கு பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அடுத்த இரு ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும். 

நிகழாண்டு ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இந்த நிகழ்வில் 1,598 பணியிடங்களுக்குத் தோ்வானவா்களுக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. 

பணி நியமன உத்தரவு பெற்றுள்ள இளைஞா்கள், தங்களை நாடி வரும் பொது மக்களுக்கு, அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு குறைகளைக் களைய முழு ஈடுபாட்டுடனும், அா்ப்பணிப்பு உணா்வுடனும் பணியாற்ற வேண்டும் என்றாா் முதல்வா். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset