நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை எண்ணூரில் உர தொழிற்சாலையில் வாயு கசிவு: 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: 

எண்ணூரில் உள்ள தனியார் ரசாயன உர தொழிற்சாலையின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அமோனியா வாயு திடீரென வெளியேறியது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வடசென்னையில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கன மழையின்போது எண்ணெய் கழிவு வெளியேற்றப்பட்ட நிலையில், அமோனியா வாயு கசிந்த சம்பவம் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தொழிற்சாலையை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. 

சென்னை எண்ணூர், பெரியகுப்பம் அருகே கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் என்ற தனியார் ரசாயன உரத்தொழிற்சாலை 1963 முதல் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் 270 நிரந்தர ஊழியர்கள், 375 தற்காலிக ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் என 600க்கும் மேற்பட்டோர் 3 ஷிப்ட்டுகளாக வேலை செய்கின்றனர். 

இங்கு ரசாயன உரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு கன்டெய்னர்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. 

கடந்த 36 மணி நேரமாக அமோனியா திரவம் வரும் குழாய்களை குளிர்விக்கும் முன்னேற்பாடு பணிகளில் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அமோனியா திரவம் கொண்டு வரப்படும் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் கடல் நீர் வெள்ளையாக மாறியது. இந்நிறுவனத்தை சுற்றியுள்ள பெரியகுப்பம், சின்னகுப்பம் உள்பட சுமார் 5 கிமீ தூரத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அமோனியா வாயு கசிவால் பயங்கர துர்நாற்றம் வீசியது. 

அப்பகுதிகளில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் அமோனியா வாயு கசிவால் திடீரென மூச்சுத் திணறல், இருமல் மற்றும் வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதில் பலர் முகத்தை துணியால் கட்டிக்கொண்டு, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினர்.

தகவலறிந்து எண்ணூர் போலீசார், தீயணைப்பு துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல், மீன்வளத்துறை மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். முன்னதாக, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று  வரை அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்த 50க்கும் மேற்பட்டோரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அமோனியா வாயு கசிந்த கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் தனியார் தொழிற்சாலையை உடனடியாக மூட வலியுறுத்தி தொழிற்சாலை வளாகம் மற்றும் காமராஜர் சாலையில் நேற்று 500க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset