நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

லஞ்ச ஊழல் புகாரில் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி; தொடைப் புண் நடையில் காட்டுகிறது: ஜவாஹிருல்லா

சென்னை:

வேலியே பயிரை மேய்ந்த கதையாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர்
எம் எச் ஜவாஹிருல்லா கூறினார்.

அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பணியாற்றிய அங்கிட் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி திண்டுக்கல்லில் தனி நபரிடம் ரூபாய் 20 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினரால் பிடிபட்டிருக்கிறார். 

தமிழ்நாட்டு அமைச்சர்கள், உயரதிகாரிகள் மீது ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை தீவிரமாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த சம்பவம் நடந்தேறி இருப்பது கவனத்திற்குரியது. 

விசாரணையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் ஒன்றில் நடவடிக்கையைக் கைவிட உறுதியளித்து ரூ 20 லட்சம் லஞ்சம் திவாரி கேட்டதாகத் தெரியவந்துள்ளது. 

தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சஒழிப்புத் துறையினால்  கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. 

தொடையில் உள்ள புண் நடையில் காட்டும் என்று பழமொழி உள்ளது. அதைப்போலக் கடந்த மாதம் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் அமலாக்கத் துறையில் பணிபுரிந்த நாவல் கிஷோர் மீனா என்பவர் 15 லட்சம் லஞ்சம் பெற்றதாக ராஜஸ்தான் மாநில லஞ்சஒழிப்புத் துறை கைது செய்யப்பட்டு இருப்பதும் கவனிக்கத்தக்கது.

லஞ்ச ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் ஏவல்துறையாக மட்டுமே இருப்பது நகைப்புக்குரியது.

இவ்வாறு மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset