நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

“திருச்சியை 2-ஆவது தலைநகராக அறிவிக்க வேண்டும்”: கனிமொழியிடம் அமைச்சர்கள் மனு

திருச்சி: 

தமிழகத்தில் வரக்கூடிய 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தமிழகம் முழுவதும் கருத்துக்களை கேட்டு வருகிறது.

அதன்படி திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பக்குழு கருத்துகேட்புக் கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுத் தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான எம்.பி கனிமொழி தலைமையிலான குழுவினர் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்ட திமுக நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டனர். 

தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சியை அறிவிக்கக் கோரி அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் ஆகியோர் மனு அளித்தனர்.

தொடர்ந்து அமைச்சர் நேரு பேசியதாவது: “திமுகவுக்கு எப்போதும் கதாநாயகன் தேர்தல் அறிக்கை என்று கருணாநிதி கூறுவார். வெற்றிக்கு பிரதானமாக அமையும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு கனிமொழி தலைமை வகித்து கருத்துக்களை கேட்டு வருகிறார். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருக. நீங்கள் தரும் தேர்தல் அறிக்கையில் பிரதானமாக திருச்சி இருக்க வேண்டும்.

‘அழுதக் குழந்தை தான் பால்குடிக்கும்’ என்பார்கள். திருச்சிக்கு வேளாண் பல்கலைக்கழகம், பல், சித்தா மருத்துவக் கல்லூரிகள், ஸ்ரீரங்கத்துக்கு செல்வதை போல குடமுருட்டியிலிருந்து தடுப்பணையுடன் கூடிய பாலம் வேண்டும். 

சமயபுரம், திருவெறும்பூர், திருச்சி, அல்லித்துறை வரை சென்று பெரிய வட்டமாக சுற்றுச்சாலை அமைத்தால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். அனைத்து தொகுதியிலும் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. திருச்சி கிழக்கு, மண்ணச்சநல்லூர் ஆகிய 2 தொகுதிகளில் இல்லை. பெரிய மனது செய்து தேர்தல் அறிக்கையில் கொண்டு வாருங்கள். 

கடந்த முறை நான் வராமல் ஏமாந்துவிட்டேன். இந்த முறை ஏமாந்துவிடக்கூடாது. அதனால் முதல் ஆளாக ஓடி வந்துவிட்டேன். நாங்கள் கேட்பதை செய்து தர நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

“அமைச்சர் நேரு தேர்தல் அறிக்கையில் திருச்சி பிரதானமாக வரவேண்டும் என்றார். அவர் எங்கு இருக்கிறாரோ அதுதான் பிரதானமாக இருக்கும். திமுகவின் தேர்தல் அறிக்கை அனைவரும் எதிர்பார்க்கும் அறிக்கை. 

அதில் வெளியிடப்படும் வாக்குறுதி நிறைவேற்றித் தரப்படும் என அனைவருக்கும் தெரியும். ஊடகம், மக்கள், அமைப்புகள் என அனைவரது கோரிக்கையும் உருவாக்கப்படும். மக்கள் தேர்தல் அறிக்கையாக உருவாக்க வேண்டும் என முதல்வர் எங்களை பணித்துள்ளார்.

அமைச்சர் உள்ளிட்ட அனைவரது கருத்துகளும் எடுத்துக் கொண்டு எதெல்லாம் சாத்தியமோ அதை ஏற்று இணைத்துக் கொள்வோம். திமுக தேர்தல் அறிக்கை (டிஎன் மேனிஃபெஸ்டோ) போர்ட்டலில் கருத்துக்களை எழுதலாம். 

திமுக பாரம்பரியமிக்க இயக்கமாக இருந்தாலும் புதிய கண்டுபிடிப்புகளையும் இணைத்து எதிர்காலத்துக்கு தயாராக இருக்கும் இயக்கம். நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய, புதுமைகளை கொண்ட தேர்தல் அறிக்கையாக இருக்கும்” என்று எம்.பி கனிமொழி தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset