நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மாலத்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர், படகுகளை விடுவிக்க ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: 

மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்கள், அவர்களின் படகுகளை விடுவிப்பதுடன், அபராத தொகையையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு முதல்வர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், 'ஹோலி ஸ்பிரிட்' என்ற படகில் கடந்த அக்.22-ம் தேதி மீன்பிடிக்க சென்றபோது, மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாலத் தீவு கடலோரக் காவல் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகின் ஓட்டுநருக்கு, கடந்த நவ.1-ஆம் தேதி, மாலத்தீவு குடியரசின் மீன்வளம், கடல் வளம் மற்றும் வேளாண்மை அமைச்சகம், இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.25 கோடி அபராதம் விதித்துள்ளது. 

அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் மேற்படி அபராதத் தொகையை செலுத்த வேண்டும். அதுவரை, அந்த மீன்பிடி படகு மாலத்தீவு காவல் படையினரின் வசம் இருக்கும் என்றும் மாலத் தீவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 
மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும் மீன்பிடித் தொழிலை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். 

தற்போது விதிக்கப்பட்டிருக்கும் இந்த அபராதத் தொகை மிக அதிகமானது. அவர்களது சக்திக்கு அப்பாற்பட்டது. இது அவர்களையும், குடும்பத்தினரையும் நிரந்தரமாக வறுமையில் தள்ளிவிடும்.

மாலத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் சார்பில், தாங்கள் உடனடியாக தலையிட்டு, படகுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்வதுடன், மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாங்கள் தக்க நேரத்தில் தலையிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கை, கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள தமிழக மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணத்தை அளிக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset