நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பழஞ்சுவடி காப்பகங்கள் ஒரு சமூகத்தின் அடையாளத்தைப் பாதுகாக்கின்றன: யுனேஸ்வரன்

சென்னை:

ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு, மொழி மற்றும் அடையாளத்தைப் புரிந்துகொள்வதற்கு பழஞ்சுவடி காப்பகங்கள் முக்கிய தளங்களாக விளங்குகின்றன.

தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் இதனை கூறினார்.

சென்னைக்கான தனது அலுவலக் பயணத்தின் போது, எழும்பூரில் அமைந்துள்ள தமிழ்நாட்டின்பழஞ்சுவடி காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை அவர் பார்வையிட்டார்.

தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வப் பழஞ்சுவடி காப்பகமாக செயல்பட்டு வரும் இந்த மையம், வரலாற்றுப் பதிவுகள், அரசாங்க ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், நிலப் பதிவுகள், அரசிதழ்கள் மற்றும் தமிழ்நாடு, முன்னாள் மெட்ராஸ் தொடர்பான ஆய்வுப் பொருட்களைப் பாதுகாத்து வருவதாக அவர் கூறினார்.

1805ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் காப்பகம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதாகவும், 1909-ஆம் ஆண்டு மெட்ராஸ் பதிவகமாகச் செயல்பட்ட பின்னர், 1973ஆம் ஆண்டு தமிழ்நாடு பழஞ்சுவடி காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் என மறுபெயரிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு 1670 முதல் 1857 வரையிலான கிழக்கிந்திய கம்பெனி ஆவணங்கள், டச்சு, டேனிஷ் மற்றும் பாரசீக மொழிப் பதிவுகள், போர்ட் செயின்ட் ஜார்ஜ் அரசிதழ்கள் உள்ளிட்ட பல அரிய ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்தப் பயணம் தனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்ததாகக் கூறிய அவர், மலேசிய தேசிய பழஞ்சுவடி காப்பகமும் தேசிய ஒருமைப்பாட்டு மைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கி வருவதைச் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வரலாற்றுப் பதிவுகள், அரசாங்க ஆவணங்கள் மற்றும் எழுத்து வடிவிலான பாரம்பரியச் செல்வங்களைப் பாதுகாத்து, இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கான முக்கிய ஆதாரமாக விளங்குவது அதன் மிகப்பெரிய பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.

பழஞ்சுவடி காப்பகம் என்பது பழைய ஆவணங்களைப் பாதுகாக்கும் இடம் மட்டுமல்ல; அஃது அறிவின் மையமாகவும், ஒரு நாட்டின் நினைவகமாகவும், சமூகத்தின் வரலாறு மற்றும் அடையாளத்தைப் புரிந்துகொள்ள உதவும் முக்கிய தளமாகவும் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இளைஞர்கள் வரலாற்றை வெறும் கடந்தகாலக் கதையாகப் பார்க்காமல், எதிர்காலத்தை நம்பிக்கையுடனும் தெளிவுடனும் கட்டியெழுப்ப உதவும் வழிகாட்டியாகக் காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்தப் பயணம் மலேசியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான அறிவுப் பரிமாற்றம், பண்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset