நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையவேண்டும் என்கின்ற ‘Target’ எங்களுக்கு இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 

“2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையவேண்டும் என்கின்ற இலக்கு ‘Target’ எங்களுக்கு இருக்கிறது. எனவே, அதிகமான முதலீட்டாளர்களை தமிழ்நாட்டை நோக்கி அழைத்துக் கொண்டு வாருங்கள்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் நடந்த தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, இவ்வாறு தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலருக்கு எங்களுடைய செயலின் மூலம் பதில் சொல்லும் மாநாடு தான் இந்த செயலாக்க மாநாடு.

தொழில்துறை அமைச்சர் இங்கே சொன்ன ஒவ்வொரு Data-வும், எங்களை விமர்சனம் செய்தவர்களுக்கான பதில் அதுதான். இங்கே அவர் சொன்ன ஒவ்வொரு நம்பரும், எங்கள் Team-க்கான ஐந்து வருட கடுமையான உழைப்பிற்கான நம்பர்.

தொழில்துறையில் நாங்கள் செய்திருக்கக்கூடிய சாதனையை அடித்துச் சொல்கிறேன் அடுத்து, நாங்கள் வந்துதான் முறியடிக்கப் போகிறோம். இது உறுதி.

இன்றைக்கு இந்த மாநாட்டில் மட்டும் 52 நிறுவனங்களுடைய திறப்பு விழா. 71 நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா. 2 புதிய நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தம் என சாதனை சொல்கின்ற மாநாடாக இது நடைபெறுகிறது.

இன்றைக்கு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் சராசரியைவிட அதிகம். தமிழ்நாட்டின் வளர்ச்சி 11.19 சதவிகிதம். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த ஆண்டு, இந்தியாவின் உற்பத்தித் துறை வளர்ச்சி, 4.5 சதவிகிதம். அதேசமயம், தமிழ்நாட்டின் வளர்ச்சி அதைவிட மூன்று மடங்கு அதிகமாக, 14.7 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்றால், அதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் போதே, அதற்காக ஒரு ‘Dash Board’ உருவாக்கிடுவோம். அதை நானே Monitor செய்வேன். 

அதில், எந்த மாவட்டத்தில் திட்டம் வருகிறது? எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும்? தொடங்கப் போகின்ற திட்டத்திற்கு எந்தத் துறைகளில் இருந்து அனுமதி தேவை? எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும்? அந்த அனுமதி எல்லாம் நாங்கள் சொன்ன தேதியில் கிடைக்கிறதா? என்று Follow செய்வோம்.

அது முடிந்ததும், அடிக்கல் நாட்டு விழா எப்போது? கட்டுமானப் பணிகளை எப்போது தொடங்கப் போகிறோம்? இதனால், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்? குறிப்பாக, பெண்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அதில் கிடைக்கும்? எப்போது Production-யை Start செய்வார்கள்? இப்படி எல்லாவற்றையும் நாங்கள் Follow செய்வோம்.

அதைத் திறந்து வைக்கின்ற வரை, எங்கள் வேலை முடியாது. எல்லாம் முடிந்தால்தான் Dash Board-ல் அதை நாங்கள் Close செய்வோம். இதுதான் எங்களுடைய செயல்பாட்டு பாணி (Working Style).

திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு சிறப்பம்சம் என்பது, காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்யாமல், மாநில நலனை முன்னிறுத்தி, அரசியல் செய்வது. தொழில்துறை என்று மட்டுமல்லாமல், அனைத்துத் துறைகளிலும், கடந்த ஆட்சியில், போடப்பட்ட ஒப்பந்தங்களாக இருந்தாலும், மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை கிடப்பில் போடாமல், எந்த பாகுபாடும் பார்க்காமல், ஒத்துழைப்பு கொடுத்து நிறைவேற்றியிருக்கிறோம்.

இங்கே இருக்கின்ற பல முதலீட்டாளர்களும் தமிழ்நாட்டில், தாங்கள் பெற்ற நேர்மறையான அனுபவங்களை, மற்ற முதலீட்டாளர்களிடம்கூட நீங்கள் ஷேர் செய்ததால்தான், எங்களுடைய வெற்றி இன்றைக்கு சாத்தியமாகியிருக்கிறது. 

அதற்காக, இந்த நேரத்தில், அவர்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த நேரத்தில், நான் உங்களிடம் வைக்கின்ற வேண்டுகோள் எல்லாம், சாதனைகளைச் செய்யும் எங்கள் திராவிட மாடலுடன் சேர்ந்து, உங்களுடைய பயணத்தை தொடருங்கள். புதுத் திட்டம் தொடங்க வேண்டும் என்றால், உங்களுக்கு யோசனை வந்தவுடனேயே, அதை தமிழ்நாட்டில்தான் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வந்து உங்களுக்கு சேரும்.

உங்களுக்கு எப்படி இலக்கு இருக்கிறதோ, அது மாதிரி எங்களுக்கும், 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையவேண்டும் என்கின்ற ‘Target’ இருக்கிறது. எனவே, அதிகமான முதலீட்டாளர்களை தமிழ்நாட்டை நோக்கி அழைத்துக் கொண்டு வாருங்கள்… உங்கள் இலக்கையும், எங்கள் இலக்கையும் அடைய, இணைந்தே பயணிப்போம்” இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset