நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான்; தி.மு.க தான் சிறுபான்மை இன மக்களை காக்கக்கூடிய காவல் அரண்; இந்த அமைதி சூழல் சிலரின் கண்களை உறுத்துகிறது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநாட்டில் ஸ்டாலின்

கும்பகோணம்:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ``பயணங்களில் வரும் அலைச்சலை விட, நீங்கள் தரும் அன்புதான் எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தருகிறது. பள்ளிவாசலை மையமாக வைத்து சமூக உதவிகள், சேவைகள், சீர்திருத்தங்கள் செய்யும் சமூகப் பணிகளாக ஆற்றக்கூடிய மஹல்லா ஜமாஅத் அமைப்புகள் இஸ்லாமிய பண்பாட்டில் முக்கியமானவை. வழிபாட்டு தலங்கள் தொழுகைக்கான இடங்களாக மட்டும் இல்லாமல், சமூக ஒற்றுமை, வளர்ச்சி, கல்வி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டதாக நிரூபித்து வருகிறீர்கள். தி.மு.க எப்போதும் இஸ்லாமியர்களுடன் இருப்பவர்கள். உள்ளத்தாலும், உணர்வாலும் உடன்பிறப்புகள் நாம்.

இஸ்லாமியர்களுக்கு தி.மு.க செய்த நன்மைகளில் முக்கியமானதாக, தி.மு.க முதல்முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் மீலாடி நபிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதை அ.தி.மு.க ரத்து செய்தாலும், கருணாநிதி அரசாணை வெளியிட்டு மீண்டும் மீலாடி நபிக்கு விடுமுறை அளித்தார். உருது பேசும் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இட ஒதுக்கீடு 3.5 சதவீதமாக வழங்கப்பட்டது. இஸ்லாமியர்கள் வேறு என நினைத்தது இல்லை. அந்த உணர்வோடு தான் திராவிட மாடல் ஆட்சியும், ஸ்டாலினும் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் இஸ்லாமிய மக்களுக்கு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஹஜ் மாநில குழுவுக்கு ஆண்டு நிர்வாக மானியம் 80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளில், ஹஜ் புனித பயணத்திற்காக 24.56 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு, 11,364 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் 207 கோடி ரூபாயில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு சிறுபான்மை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கிய கல்வி உதவியை நிறுத்திவிட்டது. இந்தாண்டு 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10,159 இஸ்லாமிய மாணவ, மாணவியர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் புனரமைப்பு பணிக்காக 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடுஇஸ்லாமியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக சிந்தித்து செயல்பட்டு வருகிறது. திட்டங்களை வாரி வழங்குவது தான் திராவிட மாடல். இஸ்லாமியர்களின் கோரிக்கை தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள 1,537 உலமார்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம், 44 உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் 1,500 வழங்கப்படுகிறது. இனி ரூ.5,000 ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். உலமார்கள் நலவாரியத்தில் 15,060 பேர் உள்ளனர். இதில் முதற்கட்டமாக 1,000 பேருக்கு டூவீலர்கள் வாங்க வழங்கப்படும் ரூ.25,000 அரசு மானியத் தொகை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

சென்னை, மதுரை வக்பு வாரிய தீர்ப்பாயம் செயல்பட்டு வரும் நிலையில், கோவையில் கூடுதலாக வக்பு வாரிய தீர்ப்பாயம் அமைக்கப்படும். கல்லறைத் தோட்டம் மற்றும் கபரிஸ்தான் இல்லாத இடங்களில் மாநகராட்சிகளால் அரசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு அமைக்கப்படும். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 10 உருது ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். மீதமுள்ள கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை பாராட்டி, திராவிட மாடல் அரசு தான் தொடர்ந்து வர வேண்டும் என நம்பிக்கையோடு தீர்மானங்கள் போட்டதற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையை நிச்சயமாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காப்பாற்றுவான். சிறுபான்மை சமூகத்தினர் அனைவரும் தீர்மானங்களை பரப்புரை செய்தால் மீண்டும் தி.மு.க ஆட்சி உறுதியாக வரும்.

இஸ்லாமிய மக்கள் எப்படிப்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான். தி.மு.க தான் சிறுபான்மை இன மக்களை காக்கக்கூடிய காவல் அரண். அதனால் தான் கும்பல் வன்முறை தலை எடுக்காமல் உள்ளது. இந்த அமைதி சூழல் சிலரின் கண்களை உறுத்துகிறது. தமிழகத்தை எப்படியாவது குழப்பங்களில் தள்ளலாமா என போடும் அவர்களின் ராஜதந்திரங்கள் வீணாகி வருகிறது. தங்களுக்கு ஏற்ற அடிமையான சி.பி.ஐ, இ.டி., ஐ.டி., போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டி, தங்களுக்கான கூட்டணியாக உருவாக்கி மேடை ஏறியுள்ளனர்.

துரோகங்களுக்கு அர்த்தமான அகராதியாக இடம் பெற்றுள்ளார் 10 தோல்வி பழனிசாமி. இஸ்லாமியர்களுக்கான துரோகப் பயணத்தை பழனிசாமி தொடர்ந்து கொண்டு இருக்கிறார். பழனிசாமியின் துரோகத்தை நாம் எண்ணிப் பார்த்தால் சீனப் பெருஞ்சுவரைப் போன்றது. பழனிசாமிக்கு தெரிந்தது எல்லாம் ஒன்று காலில் விழுவது, மற்றொன்று காலை வாரி விடுவது. அவர் இஸ்லாமிய மக்களுக்கு செய்த துரோகத்தின் பட்டியல் நீளமானது. 2019ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் வர அ.தி.மு.க ஆதரவு தெரிவித்தது. இதற்காக போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபை தீர்மானம் நிறைவேற்ற தி.மு.க கோரிக்கை வைத்தபோது, பழனிசாமி மறுத்துவிட்டார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பா.ஜ.கவிற்க்கு பயந்து அ.தி.மு.க ஆதரவு தரவில்லை. சி.ஏ.ஏ., சட்டம், முத்தலாக் சட்டம், வக்பு சட்ட திருத்தம் ஆகியவற்றில் அ.தி.மு.க இரட்டை வேடம் போட்டது. தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் கடுமையாக போராடினோம். பிரதமருக்கு கடிதம் எழுதினோம். சட்டசபை தீர்மானம் நிறைவேற்றினோம். மக்கள் முன்பாக அம்பலப்பட்டுவிடுவோமே என்ற பயத்தில் வக்பு சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும், டெல்லி எஜமானர்கள் கோபித்துக் கொள்வார்கள் என கருப்பு பேட்ஜ் கூட அணியவில்லை.

அ.தி.மு.க எம்.பி., தம்பிதுரை வக்பு சட்ட திருத்த மசோதாவை திருத்த வேண்டும் என கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார். இப்படியாக துரோகம் செய்து விட்டு, கூட்டணி தர்மத்திற்காக தங்களுக்கு விருப்பமில்லாத சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததாக பழனிசாமி பச்சை பொய் கூறினார். எனவே ஒட்டுமொத்தமாக அந்த கூட்டணியை விரட்டும் வலிமை மதச்சார்பற்ற கூட்டணிக்கே உள்ளது. சிறுபான்மை மக்கள் மீதான அ.தி.மு.க-வின் சதி எண்ணத்தை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக உள்ள பிரதமர் மோடிக்கும், தமிழகத்திற்கு நடக்கக் கூடிய தேர்தல் இது. பா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைந்தால், வளர்ந்த தமிழகத்தை நாசப்படுத்தும். அதைத் தடுக்கிற துணிச்சலும், தைரியமும் தி.மு.க., கூட்டணிக்கே உள்ளது. நாம் ஒற்றுமையாக இருந்தால், தமிழகத்தின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது. சுயநலத்திற்காக தமிழக நலனை அடகு வைத்துள்ள அடிமைகளுக்கும், அவர்களுக்கு கட்டளையிடும் டில்லி எஜமானர்களுக்கும் புரிகிறபடி உரக்க சொல்லுவோம். தன்மானம் மிக்க தமிழகம் தலைகுனியாது. தமிழகம் வெல்லும்" என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset