நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

முன்ஜாமீன் மனு தள்ளுபடி: புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் கைதாகிறார்கள்

மதுரை: 

கரூரில் நடிகர் விஜய்யின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியாகின. 

இதனால், இருவரும் எந்நேரமும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கரூரில் கடந்த 27ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இதற்கு முக்கிய காரணம் 7 மணி நேரம் தாமதமாக விஜய் வந்ததும், நாமக்கல் மற்றும் கரூர் எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்ததும் தான் என்று கூறப்படுகிறது. 

இதையடுத்து, கரூர் போலீசார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் தவெக மாவட்ட தலைவர் மதியழகன் உள்ளிட்டோர் மீது மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் மதியழகன், அவருக்கு அடைக்கலம் கொடுத்த தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார் தரப்பில் முன்ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்கள் நீதிபதி எம்.ஜோதிராமன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘‘போலீசாரின் எப்ஐஆரில் எங்களிடம் அறிவுரை வழங்கியும் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அது என்ன என கூறவில்லை.

எங்களது கட்சித் தொண்டர்களை நாங்கள் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றே காக்க வைத்து தாமதமாக வந்ததுபோல கூறப்பட்டுள்ளது. எப்ஐஆரில் தவறான பல தகவல்கள் உள்ளன. இது திட்டமிட்ட செயல் அல்ல. விபத்து தான். அதிகளவில் மக்கள் போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதாலும், குறுகிய சாலை என்பதாலும் இருபக்கமும் மறைக்கும் நிலை வருமெனக்கூறி அனுமதி மறுத்திருக்கலாம். வேலுச்சாமிபுரத்தில் அனுமதி கோரிய போது காவல்துறை இதனை செய்திருக்கலாம். எங்களுக்கு அது குறித்து தெரியவில்லை.

ஒட்டுமொத்த மக்களும் கூடிய நிலையில் காவல்துறை தடியடி நடத்தினர். வெவ்வேறு இடங்களில் பொதுக்கூட்டம் நடத்திய போது, மக்கள் கூட்டம் வந்தது. இங்கும் வருமென காவல்துறை கணித்திருக்க வேண்டும். நாங்கள் அதில் புலமை பெற்றவர்கள் அல்ல. 

ஒரு நாளைக்கு முன்பே வேறு இடத்தில் நடத்த அனுமதி கோரி முறையிட வந்தோம். அன்று நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் முறையிட இயலவில்லை. 

அதனால் வேலுச்சாமிபுரத்தில் நடத்தும் நிலை ஏற்பட்டது. காலியான ஆம்புலன்ஸ் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது.

கூட்ட நெரிசலுக்கு யார் காரணம்? யார் மீதும் தவறு இருக்கலாம். விபத்துகளை விபத்துகளாக பார்க்க வேண்டும். அதற்காக பொதுச்செயலாளர் மீது எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும்?

கட்சித்தலைவரை பார்ப்பதற்காக கூட்டத்தினர் காத்திருக்கின்றனர். சிலர் கூட்டத்தில் காலணி, சில ரசாயனங்களை எறிந்தனர். உடனே, காவல்துறையினர் எவ்வித எச்சரிக்கையும் கொடுக்காமல் தடியடி நடத்தினர். இதன் காரணமாகவே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

காவல்துறையினரே சரியாக கையாள தவறிவிட்டனர். எச்சரிக்கையின்றி தடியடி நடத்தப்பட்டதன் காரணம் என்ன? ஸ்பிரே பயன்படுத்தியுள்ளனர். 

நடிகர் ஷாருக்கான் வழக்கில், குற்றவியல் வழக்கு பதியவில்லை. நீதிமன்றம் இவ்வாறு நடக்க வேண்டுமென்ற நோக்கில் இவ்வாறு நடைபெறவில்லையே என குறிப்பிட்டது. கூட்டம் அதிகமிருப்பதால், நிகழ்வை ரத்து செய்யுமாறு காவல்துறை கூறியிருக்கலாம். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு உள்ளது.

ஆனால் கடமையைச் செய்யாமல் காவல்துறையினர் கட்சியினர் மீது குற்றம் சுமத்துகின்றனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தான். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. 

இந்த சம்பவத்துக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. காவல் துறை தனது கடமையில் இருந்து தவறிவிட்டது’’ என கூறப்பட்டது. 

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் முன்ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடியாகியுள்ளன என்று குறிப்பிட்டார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset