நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய அளவிலான செந்தமிழ் விழா சிலாங்கூர் மாநிலம் ஒட்டுமொத்த வெற்றியாளர்

ஷாஆலம்:

தேசிய அளவிலான செந்தமிழ் விழாவில் சிலாங்கூர் மாநிலம் ஒட்டுமொத்த வெற்றியாளராக தேர்வு பெற்றது.

தேசிய அளவில் நடைபெற்ற 9ஆம் ஆண்டு செந்தமிழ் விழாவில் சிலாங்கூர் மாநில தமிழ்மொழி பிரிவின் உதவி இயக்குநர் திரு செங்குட்டுவன் வீரன் தலைமையில்  21 மாணவர்கள் களம் இறங்கினர். 

மேலும் சிறப்பான போட்டி திறனை வெளிபடுத்தி் ஒட்டுமொத்த வெற்றியாளராக  சிலாங்கூர் மாநிலம் வாகை சூடியது.

கல்வியமைச்சின் விளையாட்டு, இணைப்பாடம், கலைப்பிரிவு ஏற்பாட்டில் 9ஆம் ஆண்டாக நடைபெற்ற இச்செந்தமிழ் விழா மலாக்கா, முட்ஷாஃபார் விடுதியில்  மூன்று தினங்களாக நடைபெற்றது.   

இவ்வாண்டு் பெர்லிஸ், கிளந்தான், சபா உட்பட மொத்தம் 12 மாநிலங்கள்,205 போட்டியாளர்கள்  தேசிய அளவிலான போட்டியில் களம் இறங்கினர். 

மாணவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் ஒரு களமாக அமைந்த இவ்விழாவின் உச்ச நிகழ்வாக நடைபெற்ற பரிசளிப்பு, நற்சான்றிதழ்கள் வழங்கும் இந்நிகழ்ச்சியைக் கல்வி துணையமைச்சர் ஓங் கா வோ அதிகாரப் பூர்வமாக உரையாற்றி  நிறைவு விழாவில் கலந்து சிறப்பித்தார்.  

போட்டியில் வெற்றிப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவரே பரிசுகளை எடுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாண்டு போட்டி சற்றுக் கடுமையாக இருந்த போதிலும், மாணவர்கள் அயராது புது உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் களம் கண்டு வெற்றி வாகை சூடி சிலாங்கூர் மாநிலத்திற்குப் பெருமையைத் தேடி தந்துள்ளனர். 

மாணவர்கள்  பேச்சுப்போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கதை கூறும் போட்டி,  இளையோர் கருத்தரங்கு, மேடைப் பேச்சு, இளம் நிருபர் ஆகிய 10 போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.  

சிலாங்கூர் மாநிலம் கடந்த ஆண்டும் ஒட்டுமொத்த வெற்றியாளர் சுழற்கிண்ணத்தை வென்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வேளையில் சிலாங்கூர் மாநிலத்தின் இந்த வெற்றிக்காக மிகவும் உறுதுணையாக இருந்த மாநில கல்வி இலாகாவிற்கும், அனைத்து  தலைமை ஆசிரியர்களுக்கும், துணைத் தலைமை ஆசிரியர்களுக்கும், போட்டிப் பயிற்றுனர்கள், தமிழ்மொழி பாடக்குழு தலைவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், 

மேலும் சிலாங்கூர் மாநிலத்தில் செந்தமிழ் விழா நடைபெறுவதற்கும், தேசிய ரீதியில் மாணவர்கள் வெற்றி அடைவதற்கும் உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் சிலாங்கூர் மாநில தமிழ்மொழி பிரிவின் உதவி இயக்குநர் வீ. செங்குட்டுவன் நன்றிதனைத் தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset