நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஓபிஎஸ் ஒரு வேஸ்ட் பீஸ் என்று புறக்கணித்த பா ஜ க

இன்றைக்கு ஒ.பி.எஸ்சுக்கு ஊடகங்கள் தந்த அதி முக்கியத்துவம் எனக்கு சிரிப்பை வர வழைத்தது. ஒபிஎஸ் இன்று முக்கிய அரசியல் முடிவு எடுக்கப் போகிறார். 

அந்தக் கட்சியோடு சேர்கிறார். 
இந்தக் கட்சியோடு  போக வாய்ப்புண்டு..
என ஆளாளுக்கும் வியாக்கியானம் செய்கிறார்கள்!

இவர் ஏதோ பெரிய மக்கள் தலைவரைப் போலவும், இவர் எடுக்கும் முடிவால் தமிழக அரசியலே தலைகீழாகி விடும் என்பது போலவும் முக்கியத்துவம் தரப்பட்டன.

முதலில் ஒபிஎஸ் ஒரு தலைவரே அல்ல.

சந்தர்ப்ப வசத்தால் தான் மூன்று முறை முதல்வராகும் வாய்ப்பு பெற்றார். இவர் திறமைசாலி என்பதாலோ, அறிவாளி என்பதாலோ, மக்கள் செல்வாக்கு பெற்றவர் என்பதாலோ முதலமைச்சர் ஆக்கப்படவில்லை.

உண்மையில் இது போன்ற தகுதிகள் எதுவும் இல்லை. இந்த நபர் வெறும் களிமண் என்பதாலேயே ஜெயலலிதாவால் இரு இக்கட்டான சூழல்களில்  முதல்வராக்கப்பட்டார்.
 
மூன்றாவது முறை முதல்வராகும் வாய்ப்பு அவருக்கு பாஜக நெருக்கடியால் தரப்பட்டது. இவர் எப்போதும் எடுப்பார் கைபிள்ளை. தற்போது இவரை பாஜக கையில் எடுத்துக் கொண்டது என சுதாரித்துக் கொண்டு தான் சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கி சிறை சென்றார்.

தான் உருவாகிய இடத்திற்கே துரோகம் செய்து, தன்நலத்திற்கு மட்டுமே ஒ.பிஎஸ் முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால், அப்போதே அதிமுகவில் முக்கியத்துவம் இழந்து விட்டார்.

குருமூர்த்தி சொல்லைக் கேட்டு, ஜெயலலிதா சமாதி முன்பு தர்மயுத்தம் என்ற பெயரில் போய் உட்கார்ந்த போதும், இவர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்திற்கு நியாயம் கேட்ட போதும் பாஜக பின்புலத்தில் மிகப்  பெரிய மீடியா கவரேஜ் தரப்பட்டு, மக்கள் ஆதரவு அலைகடலென திரண்டது.

அப்போது சுதாரித்து இருந்தால் கூட, இவர் அதிமுகவின் அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்து இருப்பார். 
ஆனால், ஒரு கட்சியில் தலைவராக இருப்பதற்கு அயராத உழைப்பை தர வேண்டும். சுற்றிச் சுழன்று  மாவட்டம் தோறும் பயணம் செய்ய வேண்டும். நிர்வாக ரீதியினான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஆற்றல் வேண்டும், எல்லாவற்றுக்கும் மேல் சம்பாதித்த பணத்தை கட்சி வளர்ச்சிக்கு கொஞ்சமேனும் செலவழிக்க வேண்டும்..!

இவை எதற்குமே எப்போதும் தயார் இல்லாதவர் தான் ஒ.பன்னீர் செல்வம். எந்த முயற்சியும் இல்லாமல் மூன்று முறை முதல்வரானது போல, பதவிக்கு ஆசைப்பட்டாரே அன்றி, அதற்காக தன்னை தகுதிபடுத்திக் கொண்டு பாடுபட கடுகளவும் முன்வரவில்லை. 

அதனால் தான் இவரை ஆதரித்து பின் சென்றவர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் சுதாரித்து பின் வாங்கிவிட்டனர். இன்று போக்கிடம் இல்லாத சிலரே இவரை  சூழ்ந்து கொண்டுள்ளனர்.

சொந்த மாவட்டத்திலேயே சுத்தமாக செல்வாக்கு இல்லாதவர் ஒபிஎஸ். இவர் வசிக்கும் பகுதியில் ஒரு வார்டு கவுன்சிலராகக் கூட இவரது ஆதரவாளர் யாரும் வர முடியாது என்பதல்ல, டெபாசிட் கூட பெற முடியாது.  அந்த அளவுக்கு தனது உச்சபட்ச சுயநலத்தால் சொந்த ஊரிலேயே அந்நியப்பட்டு கிடப்பவர்.

சேர்த்து வைத்துள்ள சொத்து கொஞ்சம் நஞ்சமல்ல. மிகுந்த சொகுசு வாழ்க்கைக்கு பழகிவிட்டார். இவர் ஒரு ’வேஸ்ட் பீஸ்’ என்பதால் தான் பாஜக இவரை பகடை காயாகப் பயன்படுத்தி தூர எறிந்துள்ளது. இவரை வைத்து தான் அதிமுகவுக்கு இன்று வரை இரட்டை இலை கிடைக்காமல், பாஜக கேம் விளையாடியது. 

ஆனால், தற்போது இவர் பாஜக எதிர்ப்பு அரசியல் செய்வதை யாரும் நம்பப் போவதில்லை. எப்போது வேண்டுமானாலும் நிலை மாறக் கூடியவர்.

இன்று ஒபிஎஸ் அரசியல் அனாதையாக போனதற்கு அவர் மட்டுமே காரணம். தூர தூக்கி எறிந்துவிட்டு,  மறந்து போய்விட வேண்டிய மனிதரே இவர். 

நமத்துப் போன பட்டாஸான இவரை காட்டி, ஏதோ அரசியல் சரவெடி வெடிக்க உள்ளது என மீடியாக்கள் மக்களை முட்டாளாக்குவதிலும் ஒரு அரசியல் சூழ்ச்சி உள்ளது. 

மக்களின் உண்மையான பிரச்சினைகளை பின் தள்ளி, இது போன்ற வெத்து நபர்களை பற்றிய பிம்மங்களை காலந்தோறும் கற்பித்து மக்களை மாயையிலேயே வைத்திருப்பது தான் அதிகார மையங்களின் அடியாளாக  பழக்கப்பட்ட ஊடக அரசியலாகும்.

- சாவித்திரி கண்ணன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset