நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பெரும்பான்மை என்பது சர்வாதிகாரமல்ல: தமீமுன் அன்சாரி எச்சரிக்கை

சென்னை:

இந்தியாவின் ஜனநாயகம் மதவெறியர்களால் பலமுறை படுகாய படுத்தப்பட்டிருக்கிறது என்று ம ஜ க கட்சித் தலைவரும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான தமீமுன் அன்சாரி கூறினார்.

1948-ஆம் ஆண்டு தீவிரவாதி கோட்சேயால் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்டபோதும், 1992-ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாள் மதவெறி குண்டர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டப்போதும் இந்த நாட்டின் ஜனநாயகம் வலியால் துடித்தது.

தற்போது அதிகார பலம் இருக்கிறது என்ற ஆணவத்தில், சட்டத்தின் பெயரால் நாடாளுமன்றத்திலேயே ஒரு ஜனநாயக படுகொலையை செய்திருக்கிறார்கள்.

வக்பு சட்டத்தை நிறைவேற்றியதன் மூலமாக கோட்சேவின் கொள்கை வாரிசுகள் தங்களின் மற்றொரு ஃபாசிச முகத்தை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

முஸ்லிம் சமுதாயம் ரமலான் பண்டிகையை கொண்டாடி, 24 மணி நேரம் கழிவதற்கு உள்ளாகவே, அவர்களை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கிறது ஒன்றிய அரசு .

ஃபாசிஸ்டுகளின் இத்தகைய கொடூர மனநிலையை என்னவென்பது?

மக்களவையிலும், பிறகு மாநிலங்களவையிலும் வக்பு திருத்த சட்டத்தை முறையான விவாதங்களுடன் நடத்தி வெற்றி கண்டதாக ஒன்றிய பாஜக கூட்டணி அரசு இறுமாப்புடன்  சிரிக்கிறது.

' பெரும்பான்மை பலம் என்பது சர்வாதிகாரம் அல்ல' என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

 இந்திய மண்ணின் செல்வங்களான 22 கோடிக்கும் அதிகமான முஸ்லிம்களின் இதயங்களை நொறுக்கிவிட்டு;  அவர்களை துயரத்தில் ஆழ்த்தி விட்டு  ஒரு சட்டத்தை நிறைவேற்றி இருப்பதை அவர்கள் வெற்றியாக கருதலாம் .

பல நூறு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரு பலசாலி, எந்த ஆயுதங்களுமற்ற ஒரு எளியவனை வீழ்த்துவதை வெற்றியாகவோ, பெருமையாகவோ கருத முடியாது என்பதை ஃபாசிஸ்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். 

 ஒரு சமூகத்தை வலியால் துடிக்க வைத்து விட்டு அவர்களின் மீது நெருப்பை அள்ளி கொட்டி விட்டு; அந்த சமூகத்தின் நலனுக்காகத்தான் எல்லாவற்றையும் செய்கிறோம் என்று; உண்மைக்கு மாறாக பேச கோட்சேவின் வாரிசுகளால் மட்டும் தான் முடியும். 

இத்தருணத்தில் ஜனநாயகத்தை காக்கும் அறப்போரில், இந்த சட்டத்துக்கு எதிராக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்த்து வாக்களித்த இந்தியா கூட்டணி   கட்சிகளுக்கும், இதர கட்சிகளுக்கும், அவர்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பாக இச்சட்டத்திற்கான மசோதாவின் ஆரம்ப நிலையிலிருந்தே; வலிமையான கொள்கை பலத்துடனும்; உரிய புள்ளி விவரங்களுடன் தங்களின் பிரதி நிதிகளை செயலாற்றிட செய்த திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும்,  அக்கட்சியின் தலைவர் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் கூடுதல் நன்றிகளை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.

சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்கள் மிகுந்த தைரியத்தோடு இருக்க வேண்டிய நேரம் இது. அவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில் நாட்டில் வாழும் பெரும்பான்மை இந்து பெருங்குடி மக்கள், முஸ்லிம்களின் இந்த வேதனையை உணர்ந்து கொண்டு; தங்களுடைய ஆறுதலையும், வருத்தங்களையும் தெரிவிக்கிறார்கள் .

அவர்கள் ஃபாசிஸ்டுகளின் இந்த அநீதியை ஏற்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டிலுள்ள ஜனநாயக ஆற்றல்களும், முதன்மையான தலைவர்களும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து வாதாடி வருகிறார்கள்.

 இந்த நாட்டில் ஃபாசிஸ்டுகள், எவ்வளவுதான் மத வெறியை பற்ற வைத்தாலும்; அதை அணைப்பதற்கான தீயணைப்பு வாகனங்களாக அவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. 

ஒன்றிய பாஜக கூட்டணி அரசு கொண்டு வந்திருக்கும் இந்த கருப்பு சட்டத்திற்கு எதிராக, மனிதநேய ஜனநாயக கட்சி அனைத்து ஜனநாயக ஆற்றல்களுடனும்  இணைந்து தொடர்ந்து களமாடும். அது போல் சட்ட நடவடிக்கைகளிலும் சமரசம் இன்றி செயலாற்றும்.

உடனடி எதிர்வினையாக; ஒன்றிய அரசின் ஃபாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக; துறைமுகம், விமான நிலையம், ரயில் நிலையம், தபால் தந்தி அலுவலகம், BSNL அலுவலகம், அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன் தொலைக்காட்சி உள்ளிட்ட ஒன்றிய அரசின் நிலையங்களின்  முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டங்கள் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து நடத்தப்படும் என்பதை அறிவிப்பு செய்கிறோம்.

இது ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் துவக்கம் தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு  தமீமுன் அன்சாரி கூறினார்.

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset