
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழக எம்.பி.க்களை அநாகரிகமானவர்கள் என்று கூறிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பேச்சை திரும்பப் பெற்றார்
புதுடெல்லி:
திமுக உறுப்பினர்கள் ‘ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள், அநாகரிகமானவர்கள்’ என்று மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர் மீது கனிமொழி எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியதை அடுத்து, தனது பேச்சை திரும்ப பெறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்துக்கு கல்வி நிதி ஒதுக்கப்படாத விவகாரத்தை மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று எழுப்பினார். ‘‘பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்துக்கு ரூ.2,000 கோடி வழங்க மத்திய அரசு உறுதி அளித்தது. நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் தமிழகத்துக்கு நிதி மறுக்கப்படுகிறது. மத்திய அரசின் செயல், தமிழக பள்ளி மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது" என்று அவர் கூறினார்.
இதற்கு பதில் அளித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தினோம். பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக முதல்வர் தயாராக இருந்தார். ஆனால், சூப்பர் முதல்வரின் பேச்சை கேட்டு, தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திடாமல் தமிழக அரசு திடீரென ‘யு-டர்ன்’ அடித்தது. உண்மையில், தமிழக மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை மாநில அரசுதான் பாழடிக்கிறது. தமிழக மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
வடமாநில மாணவர்கள் 3 மொழிகளை கற்கின்றனர். என் மகள் படிக்கும்போது 3-வது மொழியாக மராத்தி கற்றார். தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. அரசியல் காரணமாக மும்மொழி கொள்கையை திமுகவினர் எதிர்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
சர்ச்சை வார்த்தைகள் நீக்கம்: தர்மேந்திர பிரதான் பேசும்போது, ‘திமுக உறுப்பினர்கள் ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள், அநாகரிகமானவர்கள்’ ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தினார். இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். திமுக எம்.பி. கனிமொழி பேசும்போது, ‘‘எங்கள் கவுரவத்தை அமைச்சர் இழிவுபடுத்தி உள்ளார். நாங்கள் அநாகரிகமானவர்கள் என்று விமர்சித்துள்ளார். இதை ஒருபோதும் ஏற்கமுடியாது’’ என்றார். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸும் வழங்கினார்.
இதையடுத்து, அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசும்போது, ‘‘தமிழக அரசை, தமிழக எம்.பி.க்களை, தமிழக மக்களை அநாகரிகமானவர்கள் என்று நான் கூறியதாக கனிமொழி குற்றம்சாட்டுகிறார். நான் அவ்வாறு கூறவில்லை. எனினும், அந்த வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்’’ என்றார். இதைத் தொடர்ந்து, அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்ட வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2025, 1:20 pm
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்: சென்னை வானிலை ஆய்வு மையம்
March 8, 2025, 4:00 pm
2026இல் திமுகவை மாற்றுவோம்: மகளிர் மகளிர் தின வாழ்த்து செய்தியில் விஜய்
March 6, 2025, 9:04 pm