நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

செயல்படாமல் கிடக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்குங்கள்: ஒன்றிய அரசிடம் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் அவர் செவ்வாய்க்கிழமை பேசியது: தமிழகத்தின் செங்கல்பட்டில் சுமார் ரூ. 800 கோடி மதிப்பிலான மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனம் 12 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. 

இந்த திட்டத்துக்கான ஒப்புதல் வழங்கப்பட்டபோது அது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. காரணம், பி.சி.ஜி., தட்டம்மை, ரேபிஸ், ஹெபாடைடிஸ் உள்ளிட்ட 75 சதவீத தடுப்பூசி தேவைகளை இது பூர்த்தி செய்யும் நோக்கத்தை கொண்டிருந்தது. இது இந்தியாவின் சுகாதார பாதுகாப்புக்கு முக்கியமானது. ஆனால், அந்த நோக்கங்களை நிறைவேற்ற முடியவில்லை. 

செயல்படாமல் கிடக்கும் இந்த தடுப்பூசி மையத்தை தமிழக அரசு பயன்படுத்த முடிவெடுத்து, அதை குத்தகைக்கு வழங்குமாறு மத்திய அரசிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை கேட்டுள்ளார். இந்தத் திட்டத்துக்கு நிலம் வழங்கியதே தமிழக அரசுதான். அதனால் அதன் செயல்பாட்டுக்கு உரிமை கோருவது ஒரு வகையில் நியாயமாகும். 

எனவே, உள்நாட்டு தடுப்பூசி உற்பத்திக்கான அவசரத் தேவையையும், மகத்தான வளங்கள் பயன்பாடற்றுக் கிடப்பதையும் கருத்தில் கொண்டு தமிழக அரசுக்கு தடுப்பூசி மையத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். 

தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி திறன்களை மேம்படுத்த குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவன செயல்பாடுகளை மீண்டும் முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset