நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் அதிகமான தமிழ் பத்திரிகைகளை நடத்தியவர்கள் இந்திய முஸ்லிம்கள்: மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி

பினாங்கு: 

முன்பு மலாயா என்று அன்று அழைக்கப்பட்ட இன்றைய மலேசியாவில்   கிடா (கடாரம்) பகுதியில் தான் நமது முன்னோர்கள் தமிழகத்தில் இருந்து கப்பல்களில் வந்திறங்கினார்கள் .

பிறகு மலாக்காவில் குடியேறினார்கள். அதன் பிறகு அவர்கள் அதிகமாக குடியேறியது பினாங்கில்தான் என்று வேற்றுமையில் ஒற்றுமை எனும் கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறினார்.

அவர்களின் வரலாறுகளும், வலிகளும், பினாங்கின் வீதிகளில் புதைந்து கிடக்கின்றன.

கடுமையாக உழைத்தார்கள் காலை ஏழு மணியிலிருந்து இரவு 7 மணி வரை அவர்களது உழைப்பு தொடர்ந்தது. மாலை நேரங்களில் தாயகத்தில் இருந்து வருபவர்களை சந்தித்து தங்கள் உறவுகளின் ஊரின், நாட்டின் செய்திகளை அறிந்துகொண்டார்கள்.

மகிழ்ச்சி, துக்கம் , கவலை  என அவர்களது இரவு  வாழ்க்கை இருந்திருக்கிறது. 

தாங்கள் இங்கு தொழுவதற்கு மஸ்ஜித் கப்பிதான் கிளிங்  என்ற பள்ளியைக் கட்டினார்கள் .

இந்து சமுதாய சொந்தங்கள்  இதற்கு அருகிலேயே மாரியம்மன் கோயிலை கட்டினார்கள் .

எல்லோரும் அருகருகே இணைந்து வாழ்ந்தார்கள் .

இங்கே சூலியா தெரு இருக்கிறது.

சோழர் ஆட்சி செய்த பகுதியில் உள்ள பூம்பூகார், நாகப்பட்டினம்  துறைமுகங்களின் வழியாக வந்தவர்களைத்தான் சோழியாக்கள் என இங்கு அழைக்கிறார்கள் .

கடாரத்தை (கெடா)  அக்காலத்தில் வெற்றி கொண்ட ராஜேந்திர சோழனுடைய வெற்றி, தமிழர்களின் வருகை என பல வரலாற்று ஆதாரங்கள் பூஜான் பள்ளத்தாக்கில் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள்.

அன்றைய மலாயாவில் இணைந்திருந்த ஒரு மாநிலமாக இருந்த சிங்கப்பூரிலும், பினாங்கிலும் தான் தமிழ்நாட்டு வம்சாவளி முஸ்லிம்கள் அதிகமாக குடியேறினார்கள்.

அவர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்து இங்கு அழைத்து வந்திருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் இன்று பினாங்கு மாநிலத்தில் முதல்வராகவோ, துணை முதல்வராக இருந்திருக்க முடியும் .

ஆனால் அன்று பர்மாவில் ஏற்பட்ட துரத்தியடித்தலை மனதில் கொண்டு, தங்களுடைய எதிர்காலம் எப்படி அமையும்? என்ற குழப்பத்தில், குடும்பத்தினரை அழைத்து வராமல் போய்விட்டனர்.

அந்த வரலாற்று தவறால் இன்று அவர்கடைய  சமுதாய மக்கள் தொகை பினாங்கில் குறைந்து போய்விட்டது.

இதே பினாங்கு பயனீட்டாளத்  சங்கமான CAP தலைவர் ஹாஜி எஸ். எம். இத்ரிஸ் அவர்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று நகரமன்ற உறுப்பினராக இருந்தார்கள். அதேபோல் பேராசிரியர் ஹிதாயத்துல்லா அவர்களும் நகரமன்ற உறுப்பினராக இருந்தார்கள்.

இன்று இந்தப் பதவிக்கு கூட யாரும் வர இயலாத நிலை உள்ளது .

1957 -ல் பினாங்கு கால்பந்தாட்ட சங்க தலைவராக A.S. முஹம்மது மைதீன் என்ற தமிழர்தான் செயல்பட்டார்.

மேலும் இதே பினாங்கு மாநிலத்தில் எண்ணற்ற தமிழ் பத்திரிகைகளை தொடங்கி நடத்தியவர்கள் இந்திய முஸ்லிம்கள் .

1883-ல் குலாம் காதிர் நாவலர் அவர்கள் ஞானாசிரியன், வித்தியா விசாரினி  இதழ்களை நடத்தினார்.

1932-ல் தேசநேசன் நாளிதழ், 1936 -இல் நூருல் இஸ்லாம் மாத இதழ் ஆகியன செயல்பட்டன.

1950-ல் அஹமது (எனும்) கவிஞர் சாரண பாஸ்கரன் களஞ்சியம் நாளிதழை நடத்தினார்.

1963-ல் அபு இக்பால் என்பவர் மலாயன் குரல் என்ற மாதமிருமுறை இதழை நடத்தினார்.

1978-ல் முன்னேற்றம் மாத இதழும் வெளிவந்தது.

புலவர் நாச்சிக் குளத்தார் (எ) யூசுப், அலி அக்பர், அப்துல் ரஹ்மான், இறையருட் கவிஞர் சீனி நைனா முஹம்மது, புலவர் ப மு அன்வர், ஆர் டி எம் மைதீ சுல்தான், மைதீ அசன் கனி, எழுத்தாளர் சை. பீர்முஹம்மது, பட்டர்வொர்த் பாவலர் திலகம் S.M. ஜெய்னுதீன், எம் எம் எஸ் ஃபாரூக், திருகிம் போன்ற இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என அவர்களால் பினாங்கில் தமிழ் மணம் வீசியது. 

இப்படிப்பட்ட தமிழ் ஆளுமைகள் ஈப்போ , தைபிங், சுங்கை சிபுட், கப்பலா பத்தாஸ் , கெடா என இப் பகுதியை சுற்றிலும் வாழ்ந்திருக்கின்றனர்.

சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தை 1928 ஆம் ஆண்டு உருவாக்கியவர்களும் அவர்கள்தான்.

இதில் R.E. முஹம்மது காசிம், பீர் முஹம்மது , இஸ்மாயில் கனி ஆகியோர் முதன்மையானவர்கள். இதில் கணபதி பிள்ளையும் முக்கியமானவர்.

அன்று துன்சம்பந்தன் அவர்களுடன் இணைந்து மலேசிய இந்தியர் காங்கிரசை வலிமைப்படுத்துவதில் ஆர்வம் காட்டினர். டான்ஸ்ரீ உபைதுல்லா அவர்கள் ம இ கா வின் முன்னணித் தலைவராகவும் நாடாளுமன்ற சபாநாயகராகவும் இருந்துள்ளார். அவரது அரசியல் பணியும் தான் பிறந்த ஊரான தமிழகத்தின் இராஜகிரியில் டான் ஸ்ரீ உபைதுல்லா மேனிலைப் பள்ளியும் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

மலேசிய தமிழ் சமுதாயத்திற்கு தமிழ் முஸ்லிம்கள் மிகப்பெரிய அளவில்  பொருளாதார உதவிகளையும் செய்துள்ளனர்.

கோலாலம்பூரில் உள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்துக்கு பெருமளவில்  நிதி உதவி அளித்தவர்களும் அவர்கள்தான் .

தற்போது வணிகத்தில் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் முன்னோர்களின் வரலாறுகளையும், தியாகத்தையும் மறந்து விடக்கூடாது.

அவற்றை அடுத்த தலைமுறை  நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இங்கு தமிழையும் தமிழ் இதழ்களையும் உருவாக்கி வெற்றிகரமாக நடத்திய பாரம்பரியம் உங்களுடையது .

ஆனால் உங்கள் வீடுகளில் தமிழ் உரையாடல் குறைந்து போய் உள்ளது கவலை அளிக்கிறது .

சமூக வலைதளங்கள் பெருகி உள்ள இக்காலகட்டத்தில், தமிழை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் .

உங்கள் நாட்டின் தேசிய மொழியை பாவியுங்கள். ஆனால் தாய்மொழியை மறந்து விடாதீர்கள்.

உங்கள் பிள்ளைகளிடம் தமிழில் பேசி பழகுங்கள்.

முன்பு இந்த பினாங்கின் வீதிகளில் இருந்த கடைகளில் தமிழில் கடைகளின்  பெயர்கள் இருக்கும் .

இப்போது அது குறைந்து இருக்கிறது.

உங்கள் நாடு மலேசியா .

உங்களுடைய வாழ்வும் ,வளமும் வரலாறும் மலேசியவை சார்ந்துள்ளது.

உங்களோடு இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் சக தமிழ்நாட்டு வம்சாவளியினரான செட்டியார்கள், வன்னியர்கள், தேவர், தலித், கவுண்டர் உள்ளிட்ட சக  சமூக மக்களுடன் எப்போதும் போல் அந்த உறவுகளை கொண்டாட வேண்டும்.

காலமாற்றங்களில் அது பாதிக்கப்பட்டு விடக்கூடாது .

உங்கள் நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைக்க வேண்டும்.  அவர்களின் நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் செல்ல வேண்டும் .

இது தொடரப்பட வேண்டும் .

அதற்கு தான் இந்த 'வேற்றுமையில் ஒற்றுமை ' நிகழ்ச்சிகளை இங்கு நடத்துகிறோம்.

 இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் மலேசிய இந்திய காங்கிரஸின் பினாங்கு மாநிலத் தலைவர் டத்தோ - தினகரன் அவர்களும், ம.இ.காவின் முக்கிய பேராளர்களும் கலந்து கொண்டனர்.

டத்தோ. தினகரன் அவர்கள் பேசும்போது, ஒருங்கிணைந்து எல்லோரும் செயல்பட வேண்டும் என்றும், இது போன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்த வேண்டும் என்றும் தனது விருப்பத்தை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் M. முஹம்மது நாசர், சுபைதா குழுமத்தின் தலைவர் டத்தோ. அப்துல் அஜீஸ், MACMA தலைவர் பென் ஊய்,  உஸ்தாத் முபாரக் அலி, இக்ர மதானி ஹாஜி அமீர் அலி, ஈமான் பேரவை தலைவர் வழக்கறிஞர் ஷாகுல் ஹமீது, லீகா முஸ்லிம் பினாங்கு, மஸ்ஜித் கப்பிதான் கில்லிங், பெலிட்டா ஆகியவற்றின்  நிர்வாகிகள், சமூக ஆர்வலர் ஜாபர், கிளந்தான் சுல்தான்  உள்ளிட்ட பல்வேறு சமூக பிரமுகர்கள், வணிக ஆளுமைகள் என பலரும் பங்கேற்றனர் 

இந்நிகழ்வுக்கு பெலிடா சங்கத்தின் தலைவர் நஸீர் முஹைதீன். தலைமை வகித்தார் .

இதில் பினாங்கு, பேராக், கெடா மாநிலங்களைச் சேர்ந்த மஜக கட்சியைச் சார்ந்தவர்களும் வருகை தந்திருந்தனர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset