நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்ததால் ஓய்வூதியத்தை இழக்கும் 85 இலங்கை எம்.பி.க்கள்

கொழும்பு: 

இலங்கை நாடாளுமன்றம் 10 மாதங்களுக்கு முன்னதாகவே கலைக்கப் ட்டதால் முதல்முறையாக தேர்வான 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் தகுதியை இழந்துள்ளனர். 

இலங்கையில் கடந்த செப்.21-ஆம் தேதி நடைபெற்ற 9-ஆவது அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி)யின்தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்று கடந்த திங்கள்கிழமை அதிபராக பதவியேற்றுக் கொண்டார். 

இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை அதேகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹரிணி அமரசூரிய, இடைக்கால பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருந்த நிலையில், செப்.24-ம் தேதி இரவு அதிபர் அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து, இலங்கையின் தேர்தல் ஆணையம், நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நவ.14-ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுத் தாக்கல் அக். 4-ஆம் தேதி தொடங்கி அக்.11-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்தலுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றம் நவ.21 அன்று கூடும் என்றும் அறிவித்தது. 

இலங்கையின் 1977-ம் ஆண்டு ஓய்வூதிய சட்டவிதிகளின்படி அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த சட்ட விதிகளின்படி ஓய்வூதியம் பெறுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் 5 ஆண்டுகள் முழுமையாக பதவிக் காலத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும். 

5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பூர்த்தி செய்திருந்தால் இலங்கை ரூபாயில் மாதம் 45 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும். அதே சமயம் இரண்டு முறை, அதாவது 10 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் இலங்கை ரூபாயில் மாதம் 55 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

ஆனால், முன்னதாகவே இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் அநுர குமார திசாநாயக்க கலைத்ததால், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதிதாக தேர்வான அதாவது முதல்முறையாக வெற்றிபெற்ற 85 உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் தகுதியை இழந்துள்ளனர். 

இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கடந்த செவ்வாய்க் கிழமை மாலை கொழும்புவில் சந்தித்துக்கொண்டனர். 

அப்போது, அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்தும், நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் இம்மூவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset