நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மீனவர் பிரச்னையில் இலங்கையை மோடி கண்டிக்காதது ஏன்?: கனிமொழி, நவாஸ் கனி ஆதரவு பிரச்சாரத்தில் ஸ்டாலின் கேள்வி

தூத்துக்குடி:

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்னையில் இலங்கையை பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்காதது ஏன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி மாவட்டம், சிந்தலக்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், ராமநாதபுரம், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கனிமொழி (திமுக) ஆகியோரை அறிமுகம் செய்து அவர் பேசியதாவது:

திமுகவை குடும்ப அரசியல் செய்யும் கட்சி என பிரதமர் மோடி கூறுகிறார். திமுக மீது எந்தக் குற்றச்சாட்டும், விமர்சனமும் வைக்க முடியாதவர்கள் செய்யும் அவதூறு அது. திமுக குடும்பக் கட்சி என்பது உண்மைதான்; தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நன்மை செய்யும் கட்சி.

தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் பகல் கனவைச் சிதைப்பதால், திமுகவை பார்த்தால் பாஜகவுக்கு கசக்கிறது. அதன் காரணமாகவே, கனிமொழி எம்.பி. அவமதிக்கப்பட்டார். அது தூத்துக்குடி மக்களையே அவமதித்ததைப் போன்றதாகும்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: முந்தைய அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் கொடூரமான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 13 பேர் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியது பொய் என அவர் அமைத்த ஆணையமே கூறிவிட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தத் துயரங்களுக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக உச்சநீதிமன்றத்தில் உறுதியான வாதங்களை முன்வைத்து வெற்றி பெறப்பட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியின் அவலங்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதை நினைவில் வைத்துதான் இந்தத் தேர்தலில் மக்கள் முடிவெடுக்கவுள்ளனர்.

மீனவர்கள் கைது விவகாரம்: நான் ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர்கூட தாக்கப்பட மாட்டார்; கைது செய்யப்படமாட்டார் என்று பிரதமர் மோடி கூறினார். ஆனால், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது, பலருக்கு சிறைத் தண்டனை, படகுகள் பறிமுதல், படகுகள் நாட்டுடைமை, கடும் அபராதம் என அறிவிக்கப்படாத போரை இலங்கைக் கடற்படை  நடத்துவது மத்திய பாஜக ஆட்சியில்தான்.

குஜராத் மீனவர்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தினால், சிறையில் அடைத்தால், படகுகளை நாட்டுடைமை ஆக்கினால் இப்படித்தான் அமைதியாக இருப்பீர்களா?. பிரதமரை பெரிய விஸ்வ குரு என்கிறார்கள். அப்படியெனில் இலங்கையைக் கண்டிக்க முடியாதா?.

திசைதிருப்பும் பிரதமர்: தமிழ்நாட்டு மீனவர்களைக் காப்பாற்றத் தவறிய பிரதமர் மோடி, திசைதிருப்பும் எண்ணத்துடன் திமுக மற்றும் காங்கிரஸ் மீது குறை சொல்கிறார்.

தேர்தல் பிரசாரத்தில், தனது ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளைக் கூறி பிரதமர் வாக்கு கேட்பதற்குப் பதிலாக, எதிர்க்கட்சிகளைத் திட்டுவதில் நேரத்தைச் செலவிடுகிறார். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இப்போது மோடி ஆட்சியில்தான் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டுவந்து அவர்களைப் போராட வைத்த பாஜக அரசு, அவர்களைக் கடுமையாகத் தாக்கியது. அனைவருக்கும் வீடு என்று பிரதமரின் பெயரில் திட்டத்தை அறிவித்துவிட்டு, அதில் 60 சதவீத தொகையை மாநில அரசின் பங்களிப்பு என்கின்றனர். 

திட்டங்களை நிறைவேற்றாத மத்திய அரசு: ராமேசுவரம் உலகத் தரத்தில் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இந்தத் திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு நான் தடையாக இருந்தேன் என்று கூறுகிறார். உண்மையில் மத்திய பாஜக அரசுக்குத்தான் தமிழகத்தில் திட்டங்களை நிறைவேற்ற மனமில்லை.

திமுக அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, மத்தியில் "இந்தியா' கூட்டணி ஆட்சி அமைந்தால், எரிபொருள் விலை குறைக்கப்படும், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து, சுங்கச் சாவடிகள் அகற்றப்படும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலைநாள்கள் 150 நாள்களாக அதிகரிக்கப்படும், மீனவர் நலன் காக்கப்படும், மீனவர்களுக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும், மீனவ சமுதாய மக்களை அவசர காலத்தில் பாதுகாக்க "ஹெலிகாப்டர் தளம்" தேவையான இடங்களில் அமைக்கப்படும். திமுக "சொல்வதை செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்', இதுதான் வரலாறு. இந்த வரலாறு தொடர "இந்தியா' கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.

சென்னை மற்றும் தென்மாவட்டங்களில்  வெள்ளம் பாதித்தபோது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் பார்வையிட்ட பிறகு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று என்னிடம் பிரதமர் கூறினார். பிரதமர் கூறினாரே என்று நம்பினேன்.

வழக்கமாக, மக்களுக்குக் கூறும் பொய்யைத்தான் எனக்கும் பரிசாகக் கொடுத்தார். பொய்களை மட்டுமே பரிசாகத் தரும் பிரதமருக்கு, ஏமாற்றத்தைப் பரிசாக அளிக்க ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராகிவிட்டது என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset