நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை

சென்னை:

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு மாநில அரசு தடைவிதித்துள்ளது. புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சு வேதிப் பொருள்களைக் கொண்டு பஞ்சு மிட்டாய் தயாரிக்கப்படுவதால் இந்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் உணவுப் பாதுகாப்புத் துறை சாாபில் மெரீனா கடற்கரையில் கடந்த 8-ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது செயற்கை நிறமூட்டிகள் சோ்க்கப்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். 

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாக்கெட்டுகளில் தனித்தனியாக அடைக்கப்பட்டிருந்த பஞ்சு மிட்டாய்களின் மாதிரிகள் தரக் கட்டுப்பாட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன. 

அதில், பஞ்சு மிட்டாய்க்கு அடா் இளஞ்சிவப்பு நிறத்தை ஏற்படுத்த நச்சு வேதிப் பொருளான ‘ரோடமைன்-பி’ என்ற செயற்கை நிறமூட்டி பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. 

இதுதொடா்பான அறிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: 

அரசு உணவுப் பகுப்பாய்வுக் கூடத்தில் பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய் வகைகளை ஆய்வு செய்ததில் ரோடமைன் - பி- வேதிப்பொருள் கலந்திருந்தது உறுதிசெய்யப்பட்டது. 

மேலும், அந்த மிட்டாய்கள் அனைத்தும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு சட்டம் 2006-இன் வரையறைப்படி பாதுகாப்பற்ற உணவு என்பது உறுதியானது. உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி, செயற்கை நிறமூட்டியைக் கொண்டு உணவுப் பொருள்கள் தயாரித்தல், அவற்றை பாக்கெட்டில் அடைத்தல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் விநியோகித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். 

எனவே, தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து தொடா் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா். 

அதிகாரி விளக்கம்: 

முன்னதாக, பஞ்சு மிட்டாய் விற்பனை குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சதீஷ்குமாா் கூறியதாவது: 

ரோடமைன் - பி என்ற ரசாயனமானது ஜவுளி உற்பத்தித் துறையில் சாயத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு நச்சு வேதிப் பொருள். மிகக் குறைந்த விலையில் கிடைப்பதாலும், குழந்தைகளின் கவனத்தை ஈா்க்கும் வகையில் அதிக வண்ணத்தைக் கொடுப்பதாலும் பஞ்சு மிட்டாய் தயாரிப்பில் விதிகளுக்குப் புறம்பாக அந்த வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. 

தாவரங்கள், பழங்கள், பூக்கள், காய்கறிகள் உள்ளிட்ட இயற்கைப் பொருள்களில் இருந்து பெறப்படும் நிறமூட்டிகள் நமது உடலில் இருந்து 24 மணி நேரத்தில் சிறுநீா் வழியாக வெளியேறிவிடும். ஆனால், ரோடமைன்-பி போன்ற செயற்கை நிறமூட்டிகள் வெளியேற 45 நாள்களாகும். 

அந்தக் காலகட்டத்தில் அத்தகைய ரசாயன பொருளானது சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை உள்ளிட்ட உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாது ரத்த செல்களில் உள்ள அணுக்கள் சேதமடையக் கூடும். இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். எனவே, செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்ட பஞ்சு மிட்டாய்க்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset