நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

விவசாயிகளை மனிதாபிமானம் இன்றி தாக்கும் ஒன்றிய அரசு அனைத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்: ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை:

விவசாயிகள் என்ன தேசத் துரோகிகளா? கண்மூடித்தனமாக காவல்துறையினரையும் துணை இராணுவப் படையையும் வைத்து மனிதாபிமானமே இல்லாமல் காட்டுமிரான்டித்தனமாகத் தாக்கும் ஒன்றிய அரசு தனது ஜனநாயக விரோதப்  போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கூறினார்.

கடந்த 2021ல் விவசாயிகளின் மாபெரும் எழுச்சிமிக்க போராட்டத்திற்கு அடிபணிந்த ஒன்றிய பாஜக அரசு பல்வேறு வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு வழங்கியது. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மீண்டும் டெல்லி நோக்கி இந்திய விவசாயிகள் அணி திரளுகின்றனர்.

விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சாரச் சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடும் பணிகளும் முள்வேலி அமைக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி நுழைபவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும் தடியடி நடத்தியும் கலைக்கும் முயற்சியை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது.

மிகக் கொடுமையாக இரவுநேரங்களிலும் விவசாயிகள் மீது ட்ரோண்கள் வாயிலாகக் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்துவதை ஒருக்காலும் அங்கீகரிக்க முடியாது.  எதிரி நாட்டு இராணுவத்தை எதிர்கொள்வதைப் போல் விவசாயிகளை ஒன்றிய அரசு கருதி தாக்கி வருகிறது.

தேசத் துரோகிகள் போலவும் மிகப்பெரிய கொடும் குற்றவாளிகள் போலவும் விவசாயிகளை ஒன்றிய அரசு கையாளுகிறது.

ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும் வேளையில் மறுபுறம் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் விதத்தில் அரசு செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டுஅடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்று நினைக்கும் ஒன்றிய அரசுக்கு விவசாயிகள்அனைவரும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். 

கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கையைநடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். விவசாயிகளின் நியாயமான போராட்டம் வெற்றி பெறஎங்களுடைய ஆதரவுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset