நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது மீது அவதூறு: GAPEIM-பினாங்கு இந்திய முஸ்லீம் சங்கங்களின் கூட்டமைப்பு கண்டனம்

பினாங்கு:

இறையருட் கவிஞர் ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள், ‘தேன்கூடு’, ‘நல்ல தமிழ் இலக்கணம்’, ‘புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்’, ‘தொல்காப்பியக் கடலின் ஒரு துளி’, ‘உங்கள் குரல்’, ‘கவிதைப் பூங்கொத்து’, ‘தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர்’ முதலிய சிறப்புமிகு நூல்களைத் தமிழ் உலகிற்கு அளித்தவர்.

மலேசியத் தமிழ் மண்ணில் தொல்காப்பியச் சிந்தனை விதையைத் தூவியவர். கவிதை வகுப்புகள், சொற்பொழிவுகள், இலக்கண இலக்கியப் பட்டறைகள் எனத் தம் தமிழ்ப்பணிக்கு எல்லையே இல்லாமல் தொண்டாற்றியவர். 

இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் இந்நாட்டு தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகளாவிய தமிழர்களுக்கும் பெரும் தமிழ்ச் சொத்தாக நற்றமிழறிஞாரக விளங்கியவர்.  உலகத் தமிழ்மொழி வளர்ச்சிக்காக ஐயா தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர் என்பதுவும் குறிப்பிடத் தக்கதாகும். 

பலதரப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழக விரிவுரைஞர்களுக்கும் பேராசியர்களுக்கும் தெளிவு தந்த பேராசானாக விளங்கியவர். ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டின் சிறப்பினை வெறும் வார்த்தைகளால் சொல்லி கடந்துவிட முடியாது.

இறையருட் கவிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்களால் இயற்றப்பெற்ற இலக்கணச் செறிவும், தமிழ் வரலாறும், தமிழர் பெருமையும் ஒருங்கே மிளிர்ந்த ‘காப்பியனை ஈன்றவளே’ என்னும் மலேசியத் தமிழ் வாழ்த்துப்பாடல் அன்றைய மலேசிய எழுத்தாளர் சங்கத்தால் மலேசியாவில் நடைபெறும் அனைத்து தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடப்பட வேண்டுமென ஊக்கமூட்டி செயல்படுத்தப்பட்டது. இன்று மலேசியத் திருநாட்டில், பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கின்றது. 

இதுநாள் வரை எவ்வித சிக்கலுமின்றி ஒருமனதாக இந்நாட்டு தமிழ்ச் சமூகத்தால் ஏற்று முழங்கப்பட்ட அந்த அமுதான தமிழ் வாழ்த்து பாடலையும் அதை எழுதிய ஐயா சீனி நைனா முகம்மதுவையும் மதம் மாறிய மிசனரிகள்... அதுவும் ஒரு முஸ்லிம்  என்று இழிவுப்படுத்தும் குரல் பதிவை வெளியிட்டவருக்கு எதிராக பினாங்கு இந்திய முஸ்லீம் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக  கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 

மதமும் இனமும் வேறு! இனம் என்பது மொழியால் அடையாளப்படுத்தப்படுவது. மதத்தின் பெயரால் இனத்தை கூறுபோட வேண்டாம். அவ்வாறு கூறுபோட நினைக்கும் அவர்கள் கண்டிப்பாக ஒரு தமிழராக இருக்க முடியாது.

இதுபோன்ற அவதூறு பேச்சுக்களால் தமிழ் மக்களிடையே சச்சரவுகள் ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் அவரே ஏற்க வேண்டும் என்று கூறிக்கொள்கிறோம்.

உலகம் போற்றும் ஒரு தலைசிறந்த தமிழறிஞர் மீதான களங்கத்தை விளைவிக்கும் இதுபோன்ற அவதூறுகளைக் களையும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 

நட்புறவும் சகோதரத்துவமும் கொண்டு வாழும் தமிழர்களான இந்து முஸ்லீம் மதத்தினரிடையே இது போன்ற அபத்தமான, பொறுப்பற்ற  குரல் பதிவுகள் பிரிவினையையும் பேதைமையையும் உருவாக்கி சமூக அமைதியைக் குழைக்கும் என்பதால் காவல் துறை உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டத்தோ டாக்டர் அமீனுல் ஹுசைனி கேட்டுக்கொண்டார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset