நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிவிக் செண்டரில் ஜனவரி 7ஆம் தேதி மகாகவி பாரதியாரின் 141 ஆவது பிறந்தநாள் விழா  

கோலாலம்பூர்:

எதிர்வரும் ஜனவரி 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141ஆவது (2023) பிறந்தநாள் விழாவை, மலேசிய பாரதி தமிழ் மன்றமும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. 

பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவி்ற்கு 20 அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன.  

மகாகவி பாரதியின் சிறப்பினைக் காட்டும் பாடல், நடனம், நாடகம், பட்டின்றம், கவிதை எனப் பல்சுவைப் படைப்புகளோடு இவ்விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது என மலேசிய பாரதி தமிழ் மன்றத்தின் தலைவர் ஆர்.தியாகராஜன் தெரிவித்தார். 

மகாகவி பாரதி தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்வியலில் தவிர்க்கமுடியாத ஓர் ஆளுமையாகக் காலங்காலமாகப் போற்றப்பட்டு வருகிறார். பாரதியின் பாடல்கள் தமிழ்ச்சமுதாயத்தைப் பற்றிய சிந்தனைகளைத் தாங்கி நிற்கின்றன. பாரதியின் வீறுமிக்க கருத்துகள் இளந்தலைமுறையினருக்கு முறையாகக் கடத்தப்பட வேண்டும். இந்நோக்கத்தை அடையும் பொருட்டே இந்தப் பாரதிக் கலைவிழா செவ்வனே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இன்றைய இளந்தலைமுறையினருக்குப் பாரதியின் பாடல்களைப் பாடமாக நடத்தினால் மட்டும் போதாது. மாறாக, பாரதியின் சிந்தனைகளை அவர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்குப் பாரதியின் சிந்தனைகளைத் தாங்கி நிற்கின்ற கலைப்படைப்புகள் பெருந்துணை செய்கின்றன. எனவேதான் பாரதி கலைவிழாவில் கலைப்படைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் கோவி.சிவபாலன் கருத்துரைத்தார். 

தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும், நம் நாட்டிற்கும் தாங்கள் பணியாற்றிய காலகட்டத்தில் அத்துறைச்சார்ந்த அளவில் தொண்டாற்றி இன்று முறையான அங்கீகாரம் கிடைக்காத சான்றோர்களின் சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுவதே மன்றத்தின் தலையாய நோக்கமாகும்.

அத்தகையோரை அடையாளம் கண்டு அவர்களை நம் சமூகத்திற்கும் நாட்டிற்கும் அடையாளங் காட்டும் வகையில், கல்விமான்கள், சான்றோர்கள் கூடிய மன்றத்தில் உரையாற்றச் செய்து பின்னர் அதனை எழுத்து வடிவில் நூலாக ஆவணப்படுத்துதல் மன்றத்தின் அடுத்த நோக்கமாகும்.

மன்றம் ஏற்பாடு செய்துள்ள ‘மலேசிய முத்தமிழ்ச் சான்றோருக்கு வணக்கம் செய்வோம்‘ என்ற  மாதாந்திர ஒன்றுகூடும் நிகழ்ச்சியின்வழி இது வரை 51 சான்றோர்கள் உரையாற்றியுள்ளனர். அவர்களில் 37 முத்தமிழ்ச் சான்றோர்களின் வரலாறு, 796 பக்கங்களை உள்ளடக்கிய இரண்டு தொகுதிகளைக் கொண்ட நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த நூலை அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். அவற்றை இளந்தலைமுறை படித்தறிந்து பெருமிதம் அடைவதோடு இந்நாட்டின் உயர்வுக்கு நமது தமிழர்கள் அளித்த பங்களிப்பையும் அவர்கள் தெரிந்து கொள்ள  வேண்டும் என்பதே மன்றத்தின் எதிர்பார்ப்பாகும் என்றார் ஆர்.தியாகராஜன்.

மேலும்,  கூட்டரசு மாநிலத்தில் இருக்கும் 15 தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இலக்கியம், இலக்கணம், மேலும் நமது கலை, பண்பாட்டை இளஞ்சிறார்களின் மனத்தில் ஆழமாகப் பதிய வைப்பதற்காக, நாடகம், பரதநாட்டியம், பாடல் போட்டி, புதிர்ப் போட்டி, கவிதை ஒப்பித்தல் ஆகிய இலக்கியப் போட்டிகளை  நடத்தி ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள், நினைவுப் பரிசுகளையும் இம்மன்றம் வழங்கி வருகின்றது. 

ஆண்டுதோறும் மகாகவி பாரதியாரின் பிறந்தநாளைக் கொண்டாடும்போது, மேற்கண்ட இலக்கியப் போட்டிகளில் முதல் நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவதுடன் அவர்களின் படைப்புகளையும் அரங்கேற்றி இளம்தலைமுறையை இம்மன்றம் ஊக்கப்படுத்தி வருகின்றது.

இவ்விழாவில் இணை ஏற்பாட்டாளராக இணந்துள்ள மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை தனது கல்விசார் கடமைகளுக்கிடையே சமுதாயத்திற்கான தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கி வருகின்றது. பல்கலைக்கழக சட்டவிதிகளுக்கு முரண்படாத நிகழ்ச்சிகளுக்கு இத்துறையின் ஆதரவு தொடர்ந்து இருந்துவரும் எனத் துறையின் தலைவர் முனைவர் கோவி.சிவபாலன்  கூறினார்.

அந்த வகையில் இவ்வாண்டு  20 அமைப்புகளின் ஆதரவோடு இந்த மாபெரும் விழா, கீழ்க்காணும் வகையில் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இடம்: பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டர் (CIVIC CENTRE)
நாள். : 07.01.2024 ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல் 3:00 முதல் 3:45 வரை தேநீர் சிற்றுண்டி
மாலை 4:00 மணிக்கு  குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி் தொடங்கும்
மாலை 7:30 மணிக்கு இரவு உணவு 

மிக நேர்த்தியாக, இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கலைவிழாவில் பொதுமக்களும் மாணவர்களும் திரண்டு வந்து கலந்து பயன்பெற வேண்டுமென மலேசிய பாரதி தமிழ் மன்றத்தின் செயளாலர் ப. பார்த்தசாரதி கேட்டுக் கொண்டுள்ளார். 

தொடர்புக்கு :  ஆர். தியாகராஜன் (012 780 9390) ப.பார்த்தசாரதி (016 326 3002)

- பச்சை பாலன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset