நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது மீது அவதூறு: போலீசில் புகார்

கோலாலம்பூர்:

தொல்காப்பிய ஞாயிறு, இறையருட் கவிஞர் என்று தமிழுலகமே நன்றியோடு போற்றி மதிக்கும் நமது நாட்டின் பெருமைக்குரிய செ. சீனி நைனா முகம்மது இயற்றப்பெற்ற தமிழ் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் களங்கம் கற்பிக்கும் 1.12 நிமிடம் குரல் பதிவு செய்த நபருக்கு எதிராக ஈப்போ போலீஸ் தலைமையகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

உலகளாவிய நிலையில் நல்ல தமிழறிஞரும், சிறந்த கவிஞரும், இலக்கணப் பேராசானாகவும் திகழ்ந்த சீனி நைனா முகம்மது, அன்றைய மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க நம் மலேசிய நாட்டிற்கென தனித்துவம் வாய்ந்த காப்பியனை ஈன்றவளே… எனும் தமிழ் வாழ்த்தை இயற்றினார்.

அந்தத் தமிழ் வாழ்த்து பின்னர் மலேசிய எழுத்தாளர் சங்கத்தால் மலேசியாவில் நடைபெறும் அனைத்து தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடப்பட வேண்டுமென ஊக்கமூட்டி செயல்படுத்தப்பட்டது. 

இதுநாள் வரை எவ்வித சிக்கலுமின்றி ஒருமனதாக இந்நாட்டு தமிழ்ச் சமூகத்தால் ஏற்று முழங்கப்பட்ட அந்த அமுதான தமிழ் வாழ்த்தையும் அதை எழுதிய சீனி நைனா முகம்மதுவையும் மதம் மாறிய மிசனரிகள்... அதுவும் ஒரு முஸ்லீம்  என்று இழிவுப்படுத்தும் குரல் பதிவை வெளியிட்டவருக்கு எதிராகக் கண்டனத்தை தெரிவிக்கும் பொருட்டு போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. 

இந்த இழிந்த குரல் பதிவைச் செய்தவர், தமிழர் என்றால் யார் என்று பொருள் கொள்வதற்கு அடிப்படை அறிவும் தெளிவும் கொஞ்சமும் இல்லாதவர் என்பது தெள்ளத் தெளிவாகிறது. 

No photo description available.

பிறப்பால் தமிழராகவும் மதத்தால் இஸ்லாமியராகவும் நம் நாட்டிலே மிகச் சிறந்த கவிஞராகவும் விளங்கிய சீனி நைனா முகம்மது இயற்றப்பெற்ற தமிழ் வாழ்த்துச் சாரத்தை கொஞ்சமும் உய்த்துணராத அந்த அறிவிலிமீது போலீசார் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உங்கள் குரல் எண்டபிரைஸ் நிர்வாகியும் சீனி நைனா முகம்மதுவின் வளர்ப்பு மகனுமான பிரபு கிருஷ்ணா அறைகூவல் விடுத்துள்ளார். 

உலகம் போற்றும் ஒரு தலைசிறந்த தமிழறிஞர் மீதான களங்கத்தை விளைவிக்கும் இதுபோன்ற அவதூறுகளைக் களையும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 

மேலும் இதுநாள் வரை நட்புறவும் சகோதரத்துவமும் கொண்டு வாழும் தமிழர்களான இந்து முஸ்லீம் மதத்தினரிடையே இது போன்ற அபத்தமான குரல் பதிவுகள் பிரிவினையையும் பேதைமையையும் உருவாக்கி சமூக அமைதியைக் குழைக்கும் என்பதால் போலீசார் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரபு கிருஷ்ணா வலியுறுத்தினார். 

தமிழ்ச் சமூகத்தைக் கூறுபோட நினைக்கும் இதுபோன்ற இழிந்த குரல் பதிவுகள் இனியும் வெளிவராத வகையில் சட்டம் துரித நடவடிக்கை எடுக்கும் வேண்டுமென பொதுவில் தமிழ் நெஞ்சங்கள்  அனைவரும் கேட்டுக் கொள்கின்றார்கள்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset